Published : 30 Oct 2018 09:21 AM
Last Updated : 30 Oct 2018 09:21 AM

ரஜினியுடன் கராத்தே தியாகராஜன் சந்திப்பு- காங்கிரஸில் சலசலப்பு

நடிகர் ரஜினிகாந்தை தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் சந்தித்துப் பேசியது அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 26-ம் தேதி திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான 'முரசொலி'யில் ரஜினியை கடுமையாக விமர்சித்து கட்டுரை வெளியாகியிருந்தது. ரஜினியை நேரடியாக எதிர்க்க திமுக தயாராகி விட்டதையே இது காட்டுவதாக தமிழக அரசியலில் பல்வேறு கருத்துகள் எழுந்தன. ஆனால், இனி இதுபோல நடக்காது என நேற்று முன்தினம் 'முரசொலி'யில் விளக்கம் வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் தென்சென்னை மாவட்டத் தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஆதரவாளருமான கராத்தே தியாகராஜன். ரஜினியை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார்.சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்து இருவரும் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.

திமுகவுக்கும், ரஜினிக்கும் சுமுகமான உறவு இல்லாத நிலையில் ரஜினியை கராத்தே தியாகராஜன் சந்தித்திருப்பது காங்கிரஸ் கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் மேலிடத்திலும், மாநில தலைவர் திருநாவுக்கரசரிடமும் கட்சி நிர்வாகிகள் பலர் புகார் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக கராத்தே தியாகராஜன் தரப்பில் விசாரித்த போது, ‘‘கராத்தே தியாகராஜன் ரஜினியின் நெருங்கிய நண்பர். அடிக்கடி அவரை சந்தித்து வருகிறார். எனவே, அவர் ரஜினியை சந்தித்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. ரஜினி இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை. கொள்கையையும் அறிவிக்க வில்லை.

எனவே, அவர் காங்கிரஸுக்கு எதிரானவர் என கூறமுடியாது. இதனால், இந்த சந்திப்பு குறித்து காங்கிரஸில் யாரும் கேள்வி எழுப்ப முடியாது. அப்படி கேள்வி எழுப்பப்பட்டால் ரஜினியை சந்தித்த காங்கிரஸ் தலைவர் களின் பட்டியலை அவர் வெளியிடுவார்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x