Published : 09 Oct 2018 03:39 PM
Last Updated : 09 Oct 2018 03:39 PM

நக்கீரன் கோபால் கைது அரச பயங்கரவாதம்: சீமான் கண்டனம்

நக்கீரன் கோபால் மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டிருப்பது கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் அரச பயங்கரவாதம் என, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலாதேவி குறித்து தொடர்ந்து நக்கீரன் பத்திரிகையில் செய்திக் கட்டுரைகள் வெளியாகின. இக்கட்டுரைகள் ஆளுநர் மீது அவதூறு செய்திகளைப் பரப்புவதாகவும், ஆளுநர் பணியில் தலையிடுவதாகவும் புகார் அளிக்கப்பட்டது.

கிண்டி ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த புகாரின் பேரில் சென்னை விமான நிலையத்திலிருந்து புனே செல்லவிருந்த நக்கீரன் கோபாலை ஒருமணி நேர விசாரணைக்குப் பிறகு, அடையாறு சரக போலீஸார் கைது செய்தனர்.

சிந்தாதிரிப்பேட்டை போலீஸார் நக்கீரன் கோபாலிடம் விசாரணை நடத்தினர். அதற்குப் பிறகுநக்கீரன் கோபால் (59) மீது பிரிவு ஐபிசி 124-ன் (குடியரசுத் தலைவர், ஆளுநர் உள்ளிட்டோர் மீது அவர்கள் பணியில் குறுக்கிடுதல்) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டிருப்பது கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் அரச பயங்கரவாதம். கைதுக்கு கடும் கண்டனம்” எனப் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x