Last Updated : 26 Aug, 2014 12:00 AM

 

Published : 26 Aug 2014 12:00 AM
Last Updated : 26 Aug 2014 12:00 AM

கொல்கத்தா மெட்ரோவைப் போல சென்னை மின் ரயில்களிலும் ‘டிரைவர் கம் கார்டு’: ரயில் ஓட்டுநர்களின் கோரிக்கை வலுக்கிறது

கொல்கத்தா மெட்ரோவைப் போல சென்னையில் ஓடும் மின்சார ரயில்களிலும் ‘டிரைவர் கம் கார்டு’ பணியை உருவாக்க வேண்டும் என்ற ரயில் ஓட்டுநர்களின் கோரிக்கை வலுக்கிறது.

சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரலில் (மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ்) இருந்து சூலூர்பேட்டை, திருத்தணி மார்க்கங் களில் மின்சார ரயில்கள் இயக்கப் படுகின்றன. தொடக்கத்தில் 6 பெட்டிகளுடன் இயக்கப்பட்ட மின்சார ரயில்கள், பின்னர் 9 பெட்டிகளுடனும், இப்போது 12 பெட்டிகளுடனும் இயக்கப்படு கின்றன. தற்போது செங்கல்பட்டு மார்க்கத்தில் மட்டும் 12 பெட்டி களுடன் இயக்கப்படு கின்றன.

சூலூர்பேட்டை, திருத்தணி மார்க்கங்களில் 12 பெட்டிகளுடன் மின்சார ரயில்களை இயக்குவதற்கு வசதியாக ரயில் நிலையங்களின் பிளாட்பாரங்களை விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

கொல்கத்தா மெட்ரோவில் இயக்கப்படும் மின்சார ரயில்களில் ‘டிரைவர் (மோட்டார்மேன்) கம் கார்டு’ பணியிடம் உள்ளது. அதன் படி ஒருவர், ரயில் போகும்போது டிரைவராகவும், அந்த ரயில் திரும்பி வரும்போது கார்டாகவும் பணிபுரிவார்.

இதனால், டிரைவருக்கு போதிய ஓய்வு கிடைப்பதுடன், முழுத்திறனுடன் ரயிலை இயக்க முடிகிறது. ரயில்கள் இயக்கத்தில் நேரமும் மிச்சமாகிறது. பயணிகள் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது.

ஆனால், சென்னையில் ஓடும் மின்சார ரயில்களில், டிரைவர் மற்றும் கார்டு பணியிடம் தனித் தனியாக இருக்கிறது. இதனால் பணிப்பளு உட்பட பல்வேறு சிரமங்களுக்கு ஆளாவதாக ரயில் ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர்.

உதாரணத்துக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் செல்லும் மின்சார ரயிலை இயக்கும் ஓட்டுநர், ரயில் அரக்கோணம் போய்ச் சேர்ந்ததும், ஓட்டுநர் கேபினைவிட்டு இறங்கி ரயிலின் மறுமுனைக்குச் செல்வார். இதற்கு 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஆகும். மறுமார்க்கத்தில் அவரே ரயிலை மீண்டும் இயக்கி சென்னை வந்து சேருவார். இதனால் ரயில் ஓட்டுநர் ஓய்வின்றி பணியாற்ற வேண்டியுள்ளது.

கொல்கத்தா மெட்ரோவைப் போல சென்னை யில் இயக்கப்படும் மின்சார ரயில்களிலும் “டிரைவர் கம் கார்டு” பணியிடத்தை ஏற்படுத்தி, உரிய பயிற்சி அளிக்க வேண்டும் என்று அகில இந்திய ரயில் டிரைவர்கள் நீண்டகாலமாக கோரி வருகின்றனர்.

அதிகாரி விளக்கம்

இதுகுறித்து தெற்கு ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரயில் ஓட்டுநர்கள், கேங்க்மேன் உள்ளிட்டோரின் வேலை நேரம், ஓய்வு, பயணிகள் பாதுகாப்பு தொடர் பாக பிரச்சினைகள் ஏற்பட்டதால் இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக மத்திய அரசு முன்னாள் செயலாளர் டி.பி.திரிபாதி தலைமையில் உயர் நிலைக் குழு அமைக்கப்பட்டது. இக்குழு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தனது பரிந்துரையை அளித்தது. அதில், “பயணிகள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மின்சார ரயில்களில் ‘டிரைவர் கம் கார்டு’ பணியிடம் ஏற்படுத்த வேண்டும். இதனால், மின்சார ரயில் டிரைவர்களின் பணிப்பளு குறைந்து, அவர்கள் முழுத்திறனுடனும், மிகுந்த எச்சரிக்கையுடனும் ரயிலை இயக்க முடியும். மேலும் நேரம் மிச்சமாகும், பயணிகளுக்கான சேவை மேம்படும், பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பரிந்துரை அளித்து ஓராண்டு ஆவதால், ‘டிரைவர் கம் கார்டு’ பணியிடம் ஏற்படுத்த வேண்டும் என்று அகில இந்திய அளவில் ரயில் ஓட்டுநர்களின் கோரிக்கை வலுக்கிறது என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x