Published : 17 Oct 2018 11:45 AM
Last Updated : 17 Oct 2018 11:45 AM

ஆன்லைனில் பட்டாசு விற்க தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பட்டாசு வியா பாரியான எம்.ஷேக் அப்துல்லா என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது;

சிவகாசியில் கொள்முதல் செய்யப்படும் உள்ளூர் பட்டாசு களால் ஆண்டு முழுவதும் இந்த தொழிலையே நம்பியுள்ள ஏழை, எளிய தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம் கிடைத்து வருகி றது. ஆனால் பெருகி வரும் ஆன்லைன் கலாச்சார மோகத்தால் பட்டாசு விற்பனைக்கும் தற்போது அதிகப்படியான இணையதள முகவரிகள் உருவாக்கப்பட் டுள்ளன.

ஏற்கெனவே தரம் குறைந்த மற்றும் ஆபத்தை விளைவிக்கும் சீனப்பட்டாசுகளின் தாக்கத்தால் தமிழகத்தில் உள்ள பட்டாசு வியாபாரிகள் மற்றும் தொழி லாளர்கள் கடும் பின்னடைவை சந்தித்து வருகின்றனர். இந்தச் சூழலில் தற்போது சீனப்பட்டாசு விற்பனையை நேரடியாகவே ஊக்குவிக்கும் வகையில் ஆன் லைன் பட்டாசு விற்பனையை சில உள்ளூர் வியாபாரிகளும் அதிக லாபத்தை மனதில் கொண்டு கள்ளச்சந்தையில் ஆதரித்து வரு கின்றனர்.

இதுபோன்ற ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு எந்த உரிமமும் பெறத்தேவையில்லை என்பதால் அவை ஆபத்தை விளைவிக்கும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. ஆனால் தீபாவளி பண்டிகைக்காக பொதுமக்கள் ரகம் பார்த்து நேரில் கடைகளுக்கு வந்து வாங்கும் உள்ளூர் பட்டாசுகள் உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன் பட்டாசு விற்பனை செய்வதற்கு தீயணைப்புத்துறை, காவல்துறை என உரிய பாதுகாப்பு வழிமுறைகளையும், அதற்கான உரிமங்களையும் கட்டாயம் பெற வேண்டும். ஆனால் சிலர் உரிய உரிமங்கள் பெறாமல் ஆன்லைன் மூலமாக பட்டாசு விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தடுக்கக் கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தால் ஆன்லைன் பட்டாசு விற்பனையை கட்டுப்படுத்த எந்த விதிகளும் இல்லை என பதிலளித்துள்ளனர். ஆன்லைன் மூலமாக பட்டாசு விற்பனை செய்ய அனுமதித்தால் சீனப்பட்டாசு எளிதாக ஊடுருவி விடும். இதனால் உள்நாட்டு பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். எனவே ஆன் லைனில் பட்டாசு விற்பனை செய்வதை தடுக்க வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி, மாநகர காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட வேண் டும்’’ என அதில் கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை விடுமுறை கால நீதிபதியான எஸ்.வைத்தியநாதன் முன்பு நேற்று நடந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்வதற்கு இடைக்காலத் தடை விதித்து, விசாரணையை வரும் நவ.15-ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார். மேலும் இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதிலளிக்கவும் நோட்டீஸ் பிறப்பித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x