

திண்டுக்கல் மாவட்டம், கொடைக் கானல் அருகே பழங்குடியின மக்கள் வசிக்கும் மலைக் கிராமத்தில் தண்ணீர், மருத்துவ வசதியில்லாமல் 2 மாதங்களில் 6 குழந்தைகள் அடுத்தடுத்து இறந்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கொடைக்கானல் மேற்குத் தொடர்ச்சி மலைக் கிராமங்களில் பளியர், குன்னுவர், புலையர், முதுவர், மண்ணாரியர் பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இந்தக் கிராமங்களில் வசிக்கும் பழங்குடி யின மக்களுக்கு இன்னமும் கல்வி, மருத்துவம், மின்சாரம் மற்றும் குடிநீர் உள்ளிட்ட வாழ்வாதார அடிப்படை தேவைகள் எட்டாக்கனியாகவே உள்ளன.
அதற்கு உதாரணம் கொடைக் கானலில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள பெருங்காடு கணேசபுரம் மலைக் கிராமம். இந்தக் கிராமத்தில் 40 பளியர் பழங்குடியினக் குடும்பத்தினர் வசிக்கின்றனர். தேனி, உசிலம்பட்டியில் இருந்து இங்கு இடம்பெயர்ந்த மற்றச் சமூகங்களைச் சேர்ந்த 35 குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
பள்ளி செல்லா குழந்தைகள்
‘சாலை வசதியே இல்லாத கரடுமுரடான மலைப் பாதையில் 10 கி.மீ. தூரம் நடந்து சென்றால் மட்டுமே எங்கள் கிராமத்தை அடைய முடியும். மேலும் இங்கே குடிநீர், மின்சாரம், மருத்துவம், பள்ளிக்கூடம் என வாழ்வாதாரத்துக்கான எந்த அடிப்படை தேவையும்இல்லை. இந்தக் கிராமத்தில் 30 பழங்குடியினக் குழந்தைகள் உள்ளனர். இதில் 4 குழந்தைகள் மட்டுமே பள்ளி செல்கின்றனர்.
இங்குள்ள அங்கன்வாடிக்கு ஆசிரியர் வந்து பல மாதங்கள் ஆகிவிட்டன’ என்கிறார் பழங்குடி இன மக்களின் ஒருவரான முத்தம்மா.
இருட்டில் பழங்குடியின மக்கள்
2012-ம் ஆண்டு இந்தக் கிராமத் தில் இந்திரா நினைவு குடியிருப் புத் திட்டம், பசுமை வீடு திட்டத்தின் கீழ் தமிழக அரசு வீடு கட்டி கொடுத்துள்ளது. ஆனால், தற்போது வரை மின்சாரம் கிடைக்காமல் இந்தப் பழங்குடியின மக்கள் இருட்டில் தான் உள்ளனர்.
காட்சிப் பொருளான குடிநீர் தொட்டி
2011-ம் ஆண்டு குடிநீர் தொட்டி கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. அந்தத் தொட்டிக்குத் தற்போதுவரை தண்ணீர் வரவில்லை. வழக்கம் போல் காட்டுப்பகுதி ஓடையில் இருந்து தண்ணீர் எடுத்துவந்து பயன்படுத்துகின்றனர். இந்த ஓடையில் ஊறும் ஊற்று நீரையே கழிப்பிடம் செல்ல, குளிக்க, குடிக்க நம்பியிருக்கின்றனர். சுகாதாரமற்ற இந்த நீரால் இந்தக் கிராமத்தில் மர்ம நோய் காரணமாக இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது.
6 குழந்தைகள் அடுத்தடுத்து மரணம்
கடந்த 2 மாதங்களில் குடிநீர், மருத்துவ வசதி தேவையின்றி அடுத் தடுத்து 6 குழந்தைகள் இறந்துள்ளன. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த காளிப்பன் மகன் சரவணன் (10), க.ராமன் மகன் ரமேஷ் (16 மாதம்), பழனிச்சாமி மகன் சரவணன்(1), அழகேந்திரன் மகள் விக்னேஷ்வரி (4), ராமன் மகன் ரமேஷ்(4), பொன்னுதாயி என்கிற பெண்ணுக்குப் பிறந்த ஒரு குழந்தை உள்பட இறந்துள்ளனர். செவிலியர், சுகாதாரத் துறையினர் இந்தக் கிராமத்தைப் புறக்கணிப்பதால், இந்தப் பழங்குடியினக் கிராமத் தில் பிறப்பு, இறப்பு விகிதம் அரசு கணக்கெடுப்பில் மறைக்கப்ப டுகிறதா என்ற சந்தேகம் எழுந் துள்ளது. 6 குழந்தைகள் இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
ஆட்சியர் உறுதி
இதுகுறித்து ஆட்சியர் ந.வெங்கடாசலத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது: ‘‘அந்த கிராமத்தில் தண்ணீர் வசதியே இல்லை என்பது உண்மைதான். ஆனால், இறப்புகள் தொடர்ச்சியாக இல்லாமல் 10 நாள் இடைவெளியில் வெவ்வெறு காரணங்களினால் நடந்துள்ளன. சுகாதாரத் துறை இணை இயக்குநர், மருத்துவர்கள், அந்தக் கிராமத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அந்தக் கிராமத்துக்குத் தேவையான அனைத்துத் தேவைகளையும் செய்துதர நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது” என்றார்.