Published : 27 Oct 2018 09:40 AM
Last Updated : 27 Oct 2018 09:40 AM

எம்எல்ஏ இல்லாத 18 தொகுதிகள்: தேர்தல்தான் ஒரே வழி என குரல்கொடுக்கும் பொதுமக்கள்

தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 18 எம்எல்ஏ.க்களின் பதவி பறிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேல் ஆகிறது. இதில் சட்டப்பேரவைத் தலைவரின் முடிவு சரியா, தவறா, இதில் மறைந்துள்ள அரசியல் விளையாட்டுகள், நீதிமன்ற உத்தரவு, மேல்முறையீடு என பல அம்சங்கள் இருந்தாலும், இதில் உண்மையில் பாதிக்கப்படுவது மக்கள்தான். மக்கள் பிரதிநிதியை வாக்களித்து தேர்ந்தெடுத்தும் அவர்களால் தொகுதிக்கு பலனில்லை என்ற நிலையே உள்ளது. இந்நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்

ஏ.க்கள் தொகுதியில் தலைகாட்டுகிறார்களா, அவர்களால் ஏதேனும் பலன் உண்டா என்று அந்தந்த தொகுதிகளில் மக்களிடம் அறிய முற்பட்ட போது கிடைத்த தகவல்கள்:

பி.வெற்றிவேல் (பெரம்பூர்): வெற்றிவேல் பெரம்பூர் எம்எல்ஏவாக ஆனதும் சர்மா நகர் பகுதியில் புதிய எம்எல்ஏ அலுவலகத்தை திறந்தார். அங்கு மக்களை காட்டிலும் கட்சிக்காரர்களுக்குதான் முக்கியத்துவம் அளித்தார். எம்எல்ஏவாக இருந்த 6 மாதங்களில் சுற்றுச்சுவர் கட்டுதல் உள்ளிட்ட சில பணிகளை தவிர வேறு எதுவும் செய்யவில்லை. ஆர்.கே.நகர் தேர்தலின்போது தலைகாட்டினார். மற்ற நேரத்தில் தொகுதி பக்கமே அவர் வரவில்லை என்று பெயர் குறிப்பிட விரும்பாத தொகுதி வாக்காளர் ஒருவர் தனது குமுறலை வெளிப்படுத்தினார்.

எம். கோதண்டபாணி (திருப்போரூர்): ‘ஜெயலலிதா கைகாட்டியதால் மட்டுமே அவருக்கு வாக்களித்தோம். தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும், தொகுதியில் மக்கள் நலப்பணிகள் நடக்கிறதா என அவர் கண்காணித்திருக்கலாம். அதை அவர் செய்யவில்லை. பணிகள் ஏதும் நடைபெறவில்லை' என்பதேஇத்தொகுதியில் உள்ள பெரும்பான்மையான மக்களின் கருத்தாகும்.

டி.ஏ.ஏழுமலை (பூந்தமல்லி -தனி) : பூந்தமல்லி எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில், மேல்நிலை குடிநீர் தொட்டிகள்  உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள, மாவட்ட  ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார் ஏழுமலை. பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் ஆடிமாத திருவிழாவை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பு அகற்றத்தால் பாதிக்கப்பட்டசிறு வியாபாரிகளுக்கு ஆதரவாகவும் மாவட்டஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு, காக்களூர் ஏரி பகுதியை ஆக்கிரமித்துள்ள குடியிருப்புகளை அகற்றவருவாய்த் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தபோது, பாதிப்புக்குள்ளான பொதுமக்களைச் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

எம். ரெங்கசாமி (தஞ்சாவூர்): ‘இவர், எம்எல்ஏவாக இருந்த குறுகிய காலத்தில், தனக்கு அளிக்கப்பட்ட சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.2.50 கோடியில் பெரும் பகுதியை, தஞ்சை மாநகரில் நிலவிய குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வுகாண 34 இடங்களில் ஆழ்துளைகுழாய் அமைத்து குடிநீர் விநியோகத்துக்கு ஏற்பாடு செய்தார். அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், தஞ்சாவூருக்கான புதிய திட்டங்கள், நிதி ஒதுக்கீடு ஏதும் அறிவிக்கப்படவில்லை. இதனால் மக்களுக்கான அடிப்படை திட்டப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட் சிட்டி, அகழி சீரமைப்புக்காக ஒதுக்கப்பட்ட மத்திய அரசின் நிதியிலான பணிகள் மட்டுமே நடைபெற்று வருகின்றன' என்பதே இத்தொகுதி மக்களின் கருத்தாக உள்ளது.

வி.செந்தில்பாலாஜி (அரவக்குறிச்சி): தொகுதி வாக்காளர் எம்.ராமசாமி  கூறும்போது, செந்தில்பாலாஜி தொகுதியில் தனியாக அலுவலகம் அமைத்து வாரம் ஒரு முறைகட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களைச் சந்தித்து வருகிறார். ஏற்கெனவே தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதால் 6 மாதமாக மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில் தற்போது ஓராண்டாக மீண்டும் அதே நிலை நீடிக்கிறது. எனவே விரைவில் தேர்தல் நடத்தி மக்கள் பிரதிநிதியை தேர்ந்தெடுக்க வேண்

டும். இருப்பினும் இவர் ஒருமுன்னாள் அமைச்சர் மற்றும் அமமுக  மாநில அமைப்புச் செயலாளர் என்பதால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையிலும் கடந்த ஓராண்டாக தொடர்ச்சியாக தொகுதிக்கு செல்வது, மக்களைச் சந்திப்பது என சுறுசுறுப்பாக பணியாற்றி வருகிறார்.

அப்பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படாததைக் கண்டித்து அடிக்கடி குரல் எழுப்பி வந்தார். கடந்தாண்டு ஜூலை மாதம் பேரவையில் தனதுதொகுதிக்காக வைக்கப்பட்ட கோரிக்கைகளை அரசுநிறைவேற்றாததைக் கண்டித்துஅரவக்குறிச்சி தொகுதியில் அரவக்குறிச்சி, வேலாயுதம்பாளையம், க.பரமத்தி ஆகிய 3 இடங்களில் அண்மையில் உண்ணாவிரதம் இருந்தார்.

தொகுதிக்கு அடிக்கடி சென்று நலத்திட்டங்கள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். ’ என்றார்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஆர்.சுந்தர்ராஜன், விளாத்திகுளம் கு.உமா மகேஸ்வரி ஆகியோர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு விட்டதால் தொகுதியில் எந்த அத்தியாவசியப் பணிகளும் நடக்கவில்லை என்று தொகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

விவசாய தொழிலாளர் சங்கமாவட்டச் செயலாளர் டி.சண்முகராஜ் கூறும்போது, ‘எம்எல்ஏ இல்லை, உள்ளாட்சி பிரதிநிதிகளும் இல்லை, ஒவ்வொரு தகவலுக்கும் அரசு அதிகாரிகளை நாட வேண்டிய நிலை உள்ளது. இதை பயன்படுத்தி அதிகாரிகள் மட்டத்தில் ஊழல் பெருகிவிட்டது’ என்றார்.

மார்க்சிஸ்ட் தாலுகா செயலாளர் புவிராஜ் கூறும்போது, ‘விளாத்திகுளத்தில் கலைக்கல்லூரி வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகிறோம். இப்பகுதியில் விவசாயம் இல்லை.

கரிமூட்டம்தான் தொழிலாக உள்ளது. இதனால் இங்கு தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பது கனவாகவே உள்ளது. உடனடியாக தேர்தல் நடத்தினால் மட்டுமே மக்கள் பிரச்சினைகள் தீரும்’ என்றார்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி எம்எல்ஏ பழனியப்பன், அரூர் (தனி) தொகுதி எம்எல்ஏ ஆர்.ஆர்.முருகன் இருவரும் தகுதி நீக்கம்செய்யப்பட்டவர்கள். கடத்தூர் பகுதியைச் சேர்ந்த குமார் கூறும்போது, ‘இவர்கள் இருவரும் அமமுக நிர்வாகிகள் கூட்டத்தில் மட்டுமே அதிக கவனம் செலுத்துகின்றனர். சமீபத்தில் அரூரில் கிரிக்கெட் போட்டி ஒன்றை நடத்தினர். எம்எல்ஏ இல்லாத தொகுதி ஆகிவிட்டதால் பணிகள் முடங்கியுள்ளன’ என்றார்.

அரூர் தொகுதி இருளப்பன் கூறும்போது, ‘அரூர், பாப்பிரெட்டிபட்டி தொகுதி வழியாக எட்டு வழிச்சாலை 53 கி.மீ., தூரம் அமைக்கப்பட உள்ளது. விவசாயி

கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். எம்எல்ஏ-க்கள்இருந்திருந்தால் விவசாயிகளின் நிலையையும், போராட்டத்தின் நியாயத்தையும் அரசின் கவனத்துக்கு எடுத்துச் சொல்லி இருக்கலாம். அதற்கு வாய்ப்பில்லாமல் போய்

விட்டது. இந்த தொகுதிகளை எம்எல்ஏ-க்கள் இல்லாமல் வைத்திருப்பது தவறான முன்னுதாரணம். இதை தேர்தல் ஆணையம் உணர வேண்டும்’ என்றார்.

3 பேர் வேலூர் மாவட்டம்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரில் 3 பேர் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். என்.ஜி.பார்த்தீபன் (சோளிங்கர்), ஜெயந்தி பத்மநாபன் (குடியாத்தம் (தனி), பாலசுப்பிரமணி (ஆம்பூர்) ஆகிய மூவரும் கடந்த ஓராண்டாக கட்சி ரீதியான நிகழ்ச்சிகள் மற்றும் பொதுக் கூட்டங்களில் மட்டுமே பங்கேற்று வருகின்றனர். வேலூரில் டிடிவி தினகரன் தலைமையில் நடந்த பொதுக்கூட்டம் மற்றும் அமமுக நிர்வாகிகள் திருமண நிகழ்ச்சிகளில் 3 பேரும் தவறாமல் கலந்துகொள்கின்றனர். குடியாத்தம் எம்எல்ஏவாக இருந்த ஜெயந்தி பத்மநாபன் ‘‘நீதிமன்ற வழக்கில் வெற்றிபெறும் வரை குடியாத்தம் தொகுதி பக்கம் வரமாட்டேன்’’ என்று சபதம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தங்கதுரை (நிலக்கோட்டை) இவர் எம்எல்ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் அவரது செயல்பாடுகள் எதுவும் பெரிதாக தெரியவில்லை.

எஸ்.முத்தையா (பரமக்குடி): இவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் கடந்த ஓராண்டாக எந்த வளர்ச்சிப் பணிகளும் தொகுதியில் நடைபெறவில்லை. சாலைகள் அனைத்தும் சேதமடைந்துள்ளன. பரமக்குடி நகரில் மக்கள் குடிநீருக்காக கஷ்டப்படுகின்றனர். மக்கள்பிரச்சினைகளுக்கும், மாணவர்களின் கல்விக்கடன் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கும் குரல் கொடுக்க ஆளில்லை. தேர்தல்தான் ஒரே வழி' என்கின்றனர் இத்தொகுதி மக்கள்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த எஸ்.முத்தையா, 'நான் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது எனது தொகுதியில் உள்ள பிரச்சினைகளை நேரடியாகமுதல்வர் கே.பழனிசாமியிடமும், சில துறை அமைச்சர்களிடமும் தெரிவித்தும் நிறைவேற்றப்படவில்லை. அதனால் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தும் மக்கள் பணி செய்யமுடியவில்லை என்ற குறையில் தினகரன் அணியில் இணைந்து முதல்வரை மாற்றவேண்டும் என்றகோரிக்கை விடுத்தேன். எனது தொகுதியில் வளர்ச்சிப் பணிகள், நலத்திட்ட பணிகள் செய்ய முடியவில்லை என்ற வருத்தம் உள்ளது.  நீதிமன்ற தீர்ப்பு வரட்டும் எனக்கூறி வந்தேன். தற்போது வந்த தீர்ப்பால் மக்கள் பணி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் தேர்தலை சந்திப்போம், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம்' என்றார்.

தங்க. தமிழ்செல்வன் (ஆண்டிபட்டி), ப.கதிர்காமு (பெரியகுளம்) தொகுதிகளில் எந்த பணிகளும் நடைபெறவில்லை. இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர் நாகரத்தினம் கூறியதாவது: ‘போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல், வாக்களித்த மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை. ஆண்டிபட்டி மற்றும் பெரியகுளம் ஆகிய 2 தொகுதிகளும் போதிய வளர்ச்சி பெறாத தொகுதிகள். பெரியகுளம் பகுதி மா அதிகம் விளையும் பகுதி என்பதால் இங்கே மா பதனிடும் தொழிற்சாலை, வவ்வால்துறை, சோத்துப்பாறை, மஞ்சளாறு அணைதூர்வாரப்படும் என வாக்குறுதிகளை அறிவித்தார். ஆனால் எந்தவாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. அதிகாரிகளும் மிகுந்தஅலட்சியப்போக்குடன் செயல்படுகின்றனர். 2 தொகுதிகளும் பின்னடைவை சந்தித்துள்ளன’ என்றார்.

ஆண்டிபட்டியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, வைகைஅணை தூர்வாருதல், சுப்புலாபுரத்தில் ஜவுளி பூங்கா, தேனி -விருதுநகர் மாவட்டங்களை இணைக்கும் மல்லப்புரம் சாலை திட்டம், திப்பிரவு அணை திட்டம், ஆண்டிபட்டி கூட்டுக்குடிநீர்திட்டம் என பல திட்டங்கள் குறித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.  ஆண்டிபட்டிபகுதியில் 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுவதைகூட தடுக்கவழியில்லை. தங்க. தமிழ்செல்வனுக்கு நிறைய அறிமுகம் இருப்பதால், அதை பயன்படுத்திக் கொள்கிறார் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x