

2016-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் திமுக பொருளாளர் ஸ்டாலினுடைய காலமாக இருக்க வேண்டும், என முன்னாள் அமைச் சர் ஐ. பெரியசாமி பேசினார்.
திண்டுக்கல் மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் சனிக்கிழமை இரவு நடந்தது. இந்தக் கூட்டத்தில், பொருளாளர் ஸ்டாலின் மற்றும் தேனி, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட தென்மாவட்ட திமுக செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி பேசும்போது, தி.மு.க. கடந்த அரை நூற்றாண்டில் எண்ணிப் பார்க்க முடியாத சாதனைகளை செய்துள்ளது.
2014ம் ஆண்டில் அ.தி.மு.க. பணத்தை, அதிகாரத்தை, ஆட்சியை வைத்து மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றது. இனி தமிழகத்தை ஸ்டாலின் வழிநடத்திச் செல்ல உள்ளார். அவர் 45 ஆண்டுகளுக்கு மேலாக தலைவர் கருணாநிதி வழியில் கட்சிக்காக எத்தனையோ தியாகங்களை செய்துள்ளார்.
தொண்டனின் கடமை
தி.மு.க.வினரிடம் தற்போது பணம் இல்லை. உழைக்கக் கூடிய தியாக மனப்பான்மை, மனவலிமை உள்ளது. இதுதான் எங்கள் பலம்.
2016 ஸ்டாலினுடைய காலமாக இருக்க வேண்டும். திமுக தலைவர் கருணாநிதியின் காலமாக இருக்க வேண்டும்.
இதை சாத்தியமாக்கக் கூடிய பொறுப்பு ஒவ்வொரு தொண்டனுக்கும் உள்ளது. அடிபட்ட புலியாக தி.மு.க.வினர் தற்போது பதுங்கி உள்ளனர். பதுங்குவது ஓடி ஓளிவதற்காக அல்ல. பாய்வதற்காக, வரும் காலத்தில் வெற்றிகளை குவிப்பதற்கு என்றார்.
திமுக மீது மட்டும் விமர்சனம் ஏன்?
ஸ்டாலின் பேசும்போது, இந்த மூன்றரை ஆண்டு வாரப் பத்திரிகைகள் அட்டைப் படம், தினசரி பத்திரிகை தலைப்புச் செய்திகளை பார்த்தால் திமுகவை பற்றித்தான் அதிகம் இருக்கும். இது எங்களுக்கு விளம்பரம்தான். பத்திரிகைகள் திட்டமிட்டு, தொடர்ந்து திமுகவை விமர்சனம் செய்கின்றன. இதையும் தாண்டி, 2016-ல் வெற்றி பெறுவோம். வெற்றி, தோல்வி சகஜம். மக்களவைத் தேர்தலை பற்றி கவலைப்பட வேண்டாம். சட்டமன்றத் தேர்தலில் வெற்றி ஒன்றை மட்டும் சிந்திப்போம் என்றார்.