68 குழந்தைகளில் 1 குழந்தை ஆட்டிசம் குறைபாட்டால் பாதிப்பு

68 குழந்தைகளில் 1 குழந்தை ஆட்டிசம் குறைபாட்டால் பாதிப்பு
Updated on
1 min read

உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் ஏப்ரல் 2-ம் தேதி கடை பிடிக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு நீலாங்கரையில் உள்ள ஆட்டிசம் குழந்தைகள் படிக்கும் வி கேன் பள்ளி சார்பில் ஆட்டிசம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னையில் மாநகராட்சி ரிப்பன் கட்டிடம், போலீஸ் டிஜிபி அலுவலக கட்டிடம், எக்ஸ்பிரஸ் அவென்யூ உள்ளிட்ட 23 கட்டிடங்கள் நீல நிற விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன.

யூரோ பிக்ஸ் பள்ளியின் உதவியுடன் விழிப் புணர்வு பேரணி நடத்தப்பட்டது. பெரம்பூர், போரூர், தி.நகர், நொளம்பூர் ஆகிய இடங்களில் நடந்த விழிப்புணர்வு பேரணிகளில் மழலையர் வகுப்பில் பயிலும் குழந்தைகள் கலந்துகொண்டனர். மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வு விளம்பர பலகைகள் வைக்கப்பட்டன.

இதுதொடர்பாக வி கேன் அறக்கட்டளை நிறுவனர் கீதா ஸ்ரீகாந்த், வி கேன் பள்ளியின் ஆக்குபேஷனல் தெரப்பிஸ்ட் டாக்டர் பா.சுகுமார் ஆகியோர் கூறியதாவது:

ஆட்டிசம் ஒரு நோய் இல்லை. குழந்தைகளின் வளர்ச்சி குறைபாடு. மரபணு கோளாறு, கர்ப்பக்கால நோய் தொற்று, குறைமாத பிரசவம் போன்ற வற்றால் ஆட்டிசம் குறைபாடுடன் குழந்தைகள் பிறக்கிறது. இந்த குறைபாடுள்ள குழந்தைகளுக்கு பேசுவதிலும், பழகுவதிலும், ஒரு விஷயத்தை புரிந்து கொள்வதிலும் பிரச்சினை இருக்கும். இந்த குறைபாட்டை ஒன்றரை வயதில் கண்டுபிடித்துவிட்டால், அந்த குழந்தைகளின் பிரச்சினைகளை சரிசெய்து விடலாம்.

ஒரு கோடி குழந்தைகள் பாதிப்பு:

உலகம் முழுவதும் சுமார் 1 கோடி குழந்தைகள் ஆட்டிசம் குறை பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 198 குழந்தைகளில், ஒரு குழந்தை ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது 68 குழந்தைகளில், ஒரு குழந்தை ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றது. ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்படும் குழந் தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆட்டிசம் பாதிப்புடன் குழந்தை பிறப்பதை தடுக்கவும், ஆட்டிசம் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2-ம் தேதி ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in