Last Updated : 14 Oct, 2018 12:23 AM

 

Published : 14 Oct 2018 12:23 AM
Last Updated : 14 Oct 2018 12:23 AM

சட்டப் பேரவையில் போராடிய தனி ஒருவன்: ஜெயலலிதாவிடம் சரணடைந்த ‘கருணாநிதியின் செல்லப்பிள்ளை’; பரிதி இளம்வழுதி குறித்த பசுமை மாறாத நினைவலைகள்

தமிழகத்தில் 45 வயதைக் கடந்த வர்களால் பரிதி இளம்வழுதி என்ற பெயரை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. 1991 முதல் 1996 வரை சட்டப்பேரவைக் கூட்டம் என்றாலே பரிதி இளம்வழுதி தான் கதாநாயகன். தனி ஒருவனாக களமாடி அன்றைய நாளிதழ்களிலும், வார இதழ்களிலும் முக்கிய இடத்தைப் பிடித்தவர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைக்கு பிறகு 1991-ல் நடைபெற்ற மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்தது. 234 தொகுதிகளில் இரண்டே இரண்டு தொகுதிகளில் மட்டுமே திமுகவென்றது. அதில் ஒருவர் கருணாநிதி; மற்றொருவர் பரிதி இளம்வழுதி.

அந்த தேர்தலில் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதியால் 890 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. ஆனால் பரிதி, 1,203 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

ஜெயலலிதாவுக்கு சிம்ம சொப்பனம்

கருணாநிதி தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விடவே,சட்டப்பேரவையில் தனி ஒருவனாகபோராடினார் பரிதி. அந்த காலகட்டத்தில் அசுர பலத்துடன் அதிகாரத்தில் இருந்த ஜெயலலிதாவுக்கு பரிதி சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். பேரவையில் ஒவ்வொரு நாளும் ஜெயலலிதா அரசை எதிர்த்து அவரது குரல் ஒலித்துக் கொண்டே இருந்தது. அவர் எழுந்து பேச ஆரம்பித்ததுமே அன்றைய பேரவைத் தலைவர் சேடப்பட்டி முத்தையா அமைதியாக இருக்குமாறு அவரை எச்சரிப்பார். ஆனாலும் பரிதியின் குரலில் சுருதி குறையாது. சில நிமிடங்களிலேயே அவர் பேரவையிலிருந்து வெளியேற்றப்படுவார். பெரும்பாலான நாட்களில் அவர் காவலர்களால் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டுள்ளார்.

பேரவையில் ஓர் உறுப்பினர் வெளியேற்றப்பட்டால் அன்றைய நாள் முழுவதும் அவர் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க முடியாது. இதனால் வெளியேற்றப்பட்டவர்கள் வீட்டுக்கு சென்று விடுவார்கள். ஆனால் பரிதி, தான் வெளியேற்றப்பட்டதும் நேராக பத்திரிகையாளர் அறைக்குச் சென்று மணிக்கணக்கில் அளவளாவிக் கொண்டு இருப்பார். இப்படித்தான் அவர் பத்திரிகையாளர்களுக்கும் தமிழக மக்களுக்கும் அறிந்தவரானார்.

பரிதி இளம்வழுதியின் வாழ்க்கைச் சுவடுகள் நம்மை பிரமிக்க வைக்கின்றன. அவரது தந்தை இளம்பரிதி திமுகவின் ஆரம்ப கால உறுப்பினர். அண்ணாவுக்கு நெருக்கமானவர். ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர். தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் அந்த பதவிக்கு வருவது அவ்வளவு எளிதல்ல. சட்டமேலவை உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.

தந்தையின் மூலம் அரசியலுக்குள் நுழைந்த பரிதி இளம்வழுதி, 25 வயதிலேயே எம்எல்ஏ ஆகிவிட்டார். 'தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும்' என்ற பழமொழியை நினைவுப்படுத்தும் வகையில் அவரது அரசியல் வளர்ச்சி இருந்தது.  1984-ல் சென்னை பெரம்பூர் (தனி) தொகுதியில் வென்று முதன்முறையாக சட்டப்பேரவைக்குள் நுழைந்தார் பரிதி. 1989, 1991, 1996, 2001, 2006 ஆகிய 5 தேர்தல்களில் சென்னை எழும்பூர் (தனி) தொகுதியில் வென்றார். தொடர்ந்து 6 முறை தேர்தலில் வென்றாலும் ஒவ்வொரு முறையும் அவர் போராடியே வென்றுள்ளார்.

86 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

1984-ல் எம்ஜிஆருக்கு நெருக்கமான சத்தியவாணி முத்துவை அவர் தோற்கடித்தார். 2001-ல் பரிதியை வீழ்த்த பலமிக்க தலித் தலைவரான ஜான் பாண்டியனை எழும்பூரில் களமிறக்கினார் ஜெயலலிதா. இருவருக்கும் கடும் போட்டி. யார் வெல்வார் என பலரும் பந்தயம் கட்டிக் கொண்டிருக்க 86 வாக்குகள் வித்தியாசத்தில் ஜான் பாண்டியனை வீழ்த்தினார் பரிதி. 2011 தேர்தலில் தேமுதிக வேட்பாளர் நல்லதம்பியிடம் 202 வாக்குகள் வித்தியாசத்தில் போராடி தோற்றார் பரிதி. இது அவரது தேர்தல் வரலாறு.

1996-ல் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. 1991 முதல்96 வரை சட்டப்பேரவையில் தனி ஒருவனாக போராடிய பரிதிக்கு பேரவை துணைத் தலைவர் பதவியை வழங்கினார் கருணாநிதி.

2001-ல் ஜெயலலிதா மீண்டும் முதல்வரானார். பரிதியும் எம்எல்ஏ ஆனார். 2001 முதல் முதல் 2006 வரை சட்டப்பேரவையில் ஜெயலலிதா அரசை எதிர்த்து பரிதியின் குரல் ஒலித்தது. அப்போது பேரவைத் தலைவராக இருந்த காளிமுத்து, பரிதியை பலமுறை வெளியேற்றியுள்ளார். ஒருமுறை தன் இருக்கையில் இருந்து எழுந்து சென்று காங்கிரஸ் உறுப்பினர் குமாரதாஸை தாக்க முயன்றதாக பரிதி கைது செய்யப்பட்டார். எதற்கும் அஞ்சாமல் தனக்கு கொடுக்கப்பட்ட பணியை திறம்படச் செய்தார்.

இந்த போராட்டக் குணம் கருணாநிதிக்கு மிகவும் பிடித்துபோனது. பரிதியை தனது செல்லப்பிள்ளை என வர்ணித்தார். இந்திரஜித், வீரஅபிமன்யு என்றெல்லாம் பாராட்டினார். பிறகு 2006-ல்திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் செய்தி விளம்பரத் துறை அமைச்சரானார் பரிதி.

கட்சி பணியிலும் பரிதி சளைத்தவராக இருக்கவில்லை. திமுக இளைஞரணி தொடங்கப்பட்டு மு.க.ஸ்டாலின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். அவருக்கு துணையாக அமைக்கப்பட்ட ஐவர் குழுவில் பரிதியும் ஒருவர். ஸ்டாலினுக்கு துணையாக திமுக இளைஞரணியின் வளர்ச்சிக்கு பரிதி அல்லும் பகலும் பாடுபட்டார். அவரது போராட்ட குணமும் கட்சி பணியில் அவர் காட்டிய வேகமும் கருணாநிதி, ஸ்டாலினை ஈர்த்தன.

அதனால் அவருக்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

இப்படி கட்சியிலும் ஆட்சியிலும் உயரே சென்று கொண்டிருந்த பரிதிக்கு 2011 தேர்தலில் இருந்து சறுக்கல் ஆரம்பித்தது. அந்தத் தேர்தலில் 202 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோற்றார். ஜான் பாண்டியனையே வீழ்த்திய அவரால் தேமுதிக வேட்பாளரிடம் தோற்றதை ஜீரணிக்க முடியவில்லை. தனக்கு எதிராக திமுக வட்ட செயலாளர்கள் சிலர் எதிரணிக்கு தேர்தல் வேலை செய்ததை கண்டுபிடித்தார். அவர்களைப் பற்றி கருணாநிதியிடம் புகார் தெரிவிக்க வட்ட செயலாளர்கள் சிலர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். ஆனால் சில வாரங்களில் நீக்கப்பட்ட வட்ட செயலாளர்கள் ஸ்டாலினை சந்தித்து முறையிட மீண்டும் அவர்கள் கட்சியில் சேர்க்கப்பட்டனர். தன்னை தோற்கடித்தவர்கள் மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டதை பரிதியால் ஏற்றுக் கொள்ளவே முடிய வில்லை. தனக்கு நெருக்கமான கட்சியினர், பத்திரிகையாளர்களிடம் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார். ஆனாலும் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.

ஜெயலலிதாவுடன் சந்திப்பு

இதனால் மனம் வெதும்பிய பரிதி, 2013-ல் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். இது திமுகவினர் மட்டுமல்ல; பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. கருணாநிதியால் செல்லப்பிள்ளை என்று அழைக்கப்பட்டவர், அவரது அரசியல் எதிரியான ஜெயலலிதாவிடம் சரணடைந்ததை பலரும் வியப்புடன் பார்த்தனர்.

அதிமுகவில் இணைந்த பிறகு அவர், பொது மேடைகளில் திமுகவை, குறிப்பாக ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து வந்தார். திமுகவை போல் அதிமுகவில் அவருக்கு பெரிய முக்கியத்துவம் கிடைக்கவில்லை. 2016 தேர்தலில் அதிமுக வேட்பாளராக எழும்பூரில் போட்டியிட்டு தோற்றார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் அணியில் இணைந்த பரிதி, பின்னர் டிடிவி அணிக்கு தாவினார். இதனால் அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

குடும்பச் சிக்கல்கள், அரசியலில் உறுதியான இடமின்மை, இவற்றுடன் உடல் நலக்குறைவும் சேர்ந்து கொண்டதால் கடந்த சில ஆண்டுகளாகவே அவர் ஓய்விலேயே இருந்து வந்தார். பரிதி அதிமுகவுக்கு சென்றாலும் அவரது மகன் பரிதி இளம்சுருதி திமுகவிலேயே நீடித்தார். இளைஞரணியிலும் அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டது.

தந்தையின் மூலம் கட்சியில் நுழைந்து தனது திறமையால் தனக்கென தனியொரு இடத்தைப் பிடித்த பரிதி, இப்போது இல்லை என்பதை மாற்றுக் கட்சியினரால்கூட ஏற்கமுடியவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x