Published : 26 Aug 2014 09:37 AM
Last Updated : 26 Aug 2014 09:37 AM

தீபாவளிக்கு தமிழில் வெளியாகிறது சங்கராபரணம்: 35 ஆண்டுகளுக்குப் பின் மறு வெளியீடு

கர்நாடக இசைக்கு முக்கியத்துவம் அளித்து கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்னர் தெலுங்கில் வெளியாகி, 4 தேசிய விருதுகளை அள்ளிக்குவித்த படம் ‘சங்கராபரணம்’. இத்திரைப்படம் நவீன தொழில்நுட்பத்துடன் தமிழில் தீபாவளிக்கு வெளி வர உள்ளது.

கர்நாடக இசைக்கு இன்றளவும் சிறந்த எடுத்துக்காட்டாக தெலுங்கு திரைப்படமான ‘சங்கராபரணம்’ விளங்கி வருகிறது. இசைக்கு முக்கியத்துவம் அளித்து இயக்குநர் கே. விஸ்வநாத் இயக்கிய இப்படம் கடந்த 1979-ல் வெளியானது. பாலுமகேந்திரா ஒளிப்பதிவாளராக இப்படத்தில் பணியாற்றி இருந்தார். முக்கிய வேடங்களில் மறைந்த நடிகர் சோமயாஜுலு, மஞ்சு பார்கவி, ராஜலட்சுமி, துளசி போன்றோர் நடித்திருந்தனர்.

இப்படத்தில் 10 பாடல்கள், கீர்த்தனைகள் இடம்பெற்றிருந்தன. மறைந்த இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன் இசையமைத்திருந்த இப்படத்தில், அனைத்து பாடல் களையும் எஸ்.பி. பாலசுப்ரமணியம், வாணிஜெயராம் பாடியிருந்தனர்.

இத்திரைப்படத்தின் பாடல்களைக் கேட்பதற்காகவே பலர் டேப்ரிக்கார் டர்களை வாங்கினர் எனக் கூறுவ துண்டு. இத்திரைப்படம் 4 தேசிய விருதுகளையும், ஆந்திர அரசின் நந்தி விருதையும் வாங்கி குவித்து சாதனை புரிந்தது. தெலுங்கில் வெளியான இத்திரைப்படம், தெலுங்கிலேயே தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டு வெள்ளி விழா கண்டது. மேலும், கர்நாடகா, கேரளா உட்பட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களிலும் வெளியிடப்பட்டு வெற்றி பெற்றது.

தற்போது இத்திரைப்படம் தமிழில் புதிய தொழில் நுட்பத்துடன் மெருகேற்றப்பட்டு, வரும் தீபாவளிக்கு திரையிடப்படவுள்ளது. சினிமாஸ்கோப்பில் வெளிவர இருக்கும் இப்படத்துக்கு, டிஜிடல் தொழில் நுட்பத்தில் இசை அமைப்பாளர் ரவிராகவ், புதிய இசை வடிவம் கொடுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x