Last Updated : 10 Aug, 2014 11:55 AM

 

Published : 10 Aug 2014 11:55 AM
Last Updated : 10 Aug 2014 11:55 AM

சென்னை தலைமை தபால் நிலையத்தில் பெப்சி, கோக், குர்குரே விற்பனை: பொதுமக்களைக் கவர புது முயற்சி

சென்னை அண்ணா சாலை தலைமை தபால் நிலையத்தில் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக பெப்சி குளிர்பான விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. விரைவிலேயே கோக், குர்குரே விற்பனையும் தொடங்கவுள்ளது.

நாடு முழுவதும் 1,55,015 தபால் நிலையங்கள் உள்ளன. உலகிலேயே மிகப்பெரிய தபால் துறை என்ற பெருமை இந்திய தபால் துறைக்கு உண்டு. 150 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தபால் துறையின் பங்களிப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது. கடிதப் போக்குவரத்து, தந்தி சேவை என்று பரபரப்பாக இருந்த தபால் துறை, பிற தகவல்தொடர்பு சாதனங்களின் வருகையால் சற்று தொய்வை சந்தித்தது.

இதை ஈடுகட்டும் விதமாக தபால் நிலையங்களில் இ-போஸ்ட், உடனடி பணப் பரிமாற்ற நடவடிக்கைகள், அஞ்சலக காப்பீடு என பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. தகவல் தொழில்நுட்ப நவீன மயமாக்கல் திட்டமும் அறிவிக்கப்பட்டது. இதன்படி அடித்தட்டு கிராமங்களில் உள்ள தபால் நிலையம்வரை கணினி உள்ளிட்ட நவீன தொழில்நுட்பக் கருவிகளை எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வங்கிகளுக்கு இணையாக ஏடிஎம், சேமிப்புக் கணக்கு போன்ற சேவைகளும் தபால் துறையில் தொடங்கப்பட்டுள்ளன.

முதல் முறையாக

இந்நிலையில் தபால் நிலையங் களுக்கு வரும் வாடிக்கை யாளர்களைக் கவரும் விதமாக இன்னொரு புதிய திட்டத்தை தபால் துறை தொடங்குகிறது. இதன் முதல்படியாக, சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் நாட்டிலேயே முதல் முறையாக பெப்சி குளிர்பான விற்பனை தொடங்கியுள்ளது. வாடிக்கையாளர்கள், பொது மக்களை தபால் நிலையம் நோக்கி கவர்ந்திழுக்கும் நோக்கில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அஞ்சல் வட்ட மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘இந்திய தபால் துறையில் காலத்துக்கேற்ப பல மாற்றங்கள் செய்யப் பட்டுவருகின்றன. சென்னை அண்ணாசாலை தலைமை தபால் நிலையத்தில் கடந்த வியாழக்கிழமை முதல் பெப்சி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. விரைவிலேயே கோக், குர்குரே போன்றவையும் விற்கப்படும். இந்த திட்டம் அனைத்து தபால் நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்’’ என்றார்.

இதுபற்றி சென்னை அஞ்சல் வட்ட தலைமை தபால் அதிகாரி மெர்வின் அலெக்ஸாண்டர் கூறும்போது, ‘‘சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் கடந்த 2 நாட்களாக பெப்சி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

காயின் வெண்டிங் மெஷின்

இதை தபால் துறையே விற்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது உண்மையல்ல. பெப்சி நிறுவனத்துக்கு தபால் நிலையத் துக்குள் கொஞ்சமாய் இடம் ஒதுக்கிக் கொடுத்துள்ளோம். ‘காய்ன் வெண்டிங்’ மெஷின் மூலம் அவர்கள் பெப்சி வியா பாரத்தை தொடங்கியுள்ளனர். பொதுமக்களிடம் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x