ரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன்: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

ரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன்: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
Updated on
1 min read

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன் என்று, மத்திய கனரக மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க வெள்ளி விழா ஞாயிற்றுக்கிழமை (ஆக.31) நடைபெறுகிறது. இந்நிலையில் சங்க அலுவலகத்துக்கு வந்த மத்திய கனரக மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம், தொழில்துறையினரின் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. சங்கத் தலைவர் அ.சக்திவேல் வரவேற்றார்.

பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் பேசுகையில், மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு, நாட்டின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. பல மாநில முதல்வர்கள் இங்கு வரும் அளவுக்கு கோவை, திருப்பூர் மாவட்டங்கள் தொழில்துறையில் முன்மாதிரியாக இருக்கின்றன என்றார். மத்திய கனரக மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது:

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் 25-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. தொழில்துறையில் உள்ள பிரச்சினைகள் குறித்தும், சங்கத்தின் அடுத்த 25 ஆண்டு காலம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் செயல் வடிவம் தயார் செய்து வைத்துள்ளனர். கடந்த 6 மாத காலத்தில், கடைசி 3 மாதங்கள் மட்டும் உலக நாடுகள் பாராட்டும் அளவுக்கு நாட்டின் வளர்ச்சி 2 சதவீதம் அதிகரித்துள்ளது. நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியில், தமிழகம் முதல் நிலை வகிக்க வேண்டும் என்பது என் எண்ணம். 2020-ம் ஆண்டு திருப்பூர் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து செயல் வடிவம் தயார் செய்யப்பட்டுள்ளது. அதை நடைமுறைப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். ராமநாதபுரம், ஓசூர் ஆகிய பகுதிகளிலும் திருப்பூரின் தொழில்துறையை விரிவுபடுத்தும் பணிகளை தொடங்க வேண்டும்.

மத்திய அரசு மூலமாக கிடைக்கும் திட்டங்கள் அனைத்தையும் தமிழகத்துக்கு கொண்டு வருவது என் கடமை. டெல்லி இல்லத்தில் அமைக்கப் படவுள்ள அலுவலகத்தை தமிழகம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் அணுகலாம். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை முழுமனதுடன் வரவேற்கிறேன் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in