Published : 30 Oct 2018 11:34 AM
Last Updated : 30 Oct 2018 11:34 AM

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேருக்கும் தினகரன் அல்வா கொடுத்துவிட்டார்: அமைச்சர் ஜெயக்குமார்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேருக்கும் தினகரன் திருநெல்வேலி அல்வாவைக் கொடுத்துவிட்டார் என, அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதன்பிறகு அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

இடைத்தேர்தலுக்காக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்களே?

இடைத்தேர்தல் குறித்து முடிவு செய்ய வேண்டியது அதிமுக அல்ல, இந்திய தேர்தல் ஆணையம். எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுகவுக்கு கவலையில்லை. பொறுப்பாளர்களை நியமிப்பது வழக்கம், அதனால் நியமித்திருக்கிறோம்.

கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை அழைத்ததற்காக டிடிவி தினகரன் அதிமுகவை விமர்சித்திருக்கிறாரே?

டிடிவி தினகரன் ஒரு மண்குதிரை. டிடிவி தினகரனை நம்பி ஆற்றில் இறங்கிய தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரின் நிலைமை பரிதாபத்துக்குரியது. அவர்களின் நிலையை எண்ணி உண்மையிலேயே நாங்கள் வருத்தப்படுகிறோம். இவர்களுக்கு டிடிவி தினகரன் திருநெல்வேலி அல்வாவைக் கொடுத்துவிட்டார். தமிழக அரசியலில் எடுபடாத நபராகத் தான் டிடிவி தினகரன் இருக்கிறார். அவரைப் பற்றி நாங்கள் எந்த விதத்திலும் கவலைப்படுவதாக இல்லை.

அதிமுக அச்சப்படுகிறது என தங்க தமிழ்ச்செல்வன் விமர்சித்துள்ளாரே?

மறப்போம் மன்னிப்போம் என அண்ணா சொல்லியிருக்கிறார். ஜெயலலிதா எம்ஜிஆரும் அப்படித்தான். அவர்கள் வழியில் வந்தவர்களான நாங்களும் அதனைப் பின்பற்றுகிறோம். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்பதே அதிமுகவின் கொள்கை. அவர்கள் வந்தால் சேர்த்துக்கொள்வது குறித்து கட்சி முடிவு செய்யும்.

டெங்கு, பன்றிக்காய்ச்சல் பரவுகின்றதே...என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?

இந்தக் காய்ச்சல்கள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக அதிகாரிகளுடன் பல்வேறு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. போதுமான வசதிகளும் மருந்துகளும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உள்ளன. அதனால், மக்கள் அச்சப்படத் தேவையில்லை.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x