Published : 08 Oct 2018 01:17 PM
Last Updated : 08 Oct 2018 01:17 PM

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியா? பிரதமரை சந்தித்தபின் முதல்வர் பழனிசாமி பேட்டி

தமிழகத்தில் இடைத்தேர்தலை ஒத்தி வைத்தது தேர்தல் ஆணையத்தின் முடிவு என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்தார். அப்போது, தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை வழங்கக் கோரி மனுவையும் அளித்தார். அதன்பின் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அதன் விவரம்:

“அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கவும், எம்.ஜி.ஆர் பெயரை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சூட்டவும் கேட்டுக்கொண்டேன். அதேபோன்று, உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிலுவை மானியங்களை வழங்கவும், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து அமைக்கவும், சென்னை மாநகரத்தின் நிரந்தர வெள்ள தடுப்பு கட்டமைப்பு பணிகளுக்கு தேவைப்படும் சுமார் 4 ஆயிரத்து 445 கோடி ரூபாய் நிதியினை ஒதுக்கவும், 2017-18 ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையான 5 ஆயிரத்து 426 கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்கவும் கேட்டுக் கொண்டேன்.

மேலும், கர்நாடக அரசின் மேகதாது நீர்த்தேக்க திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது எனவும், 17 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மத்திய அரசிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள காவிரி நீர் பாசன மேம்பாடு மற்றும் மறுவாழ்வு திட்டத்திற்கு உரிய அனுமதியும், நிதியும் வழங்கவும், கன்னியாகுமரியில் ஹெலிகாப்டர் வசதியுடன் கூடிய ஒரு புதிய நிரந்தர கப்பல் படை தளம் அமைக்கவும் தமிழ்நாட்டுக்கு பல்வேறு திட்டங்களின்கீழ் வர வேண்டிய 8 ஆயிரத்து 699 கோடி ரூபாய் மத்திய அரசின் பங்குத் தொகையை உடன் விடுவிக்கவும் கேட்டுக்கொண்டேன்” என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இவை தவிர்த்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமர் மோடியிடம் சமர்ப்பித்ததாக அவர் தெரிவித்தார். அதன்பின் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு முதல்வர் பழனிசாமி பதிலளித்தார். அதன் விவரம்:

உங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ள நிலையில் ஏன் தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலகவில்லை?

யார் வேண்டுமானாலும் வழக்கு தொடரலாம். ஆனால், வழக்கின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும்.

டி.டி.வி தினகரனை தான் சந்தித்ததாக ஓ.பி.எஸ் ஒப்புக்கொண்டுள்ளாரே?

தினகரனின் கருத்துக்கு ஓ.பி.எஸ் தெளிவாக விளக்கமளித்துள்ளார். அதற்கு மேல் அதில் பேச ஒன்றும் இல்லை.

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?

பொதுமக்கள் பாதிக்கப்படும் எந்த திட்டத்துக்கும் தமிழகத்தில் அனுமதி இல்லை.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்குமா?

இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. அறிவித்தவுடன் எங்கள் முடிவை சொல்லுவோம்.

தமிழகத்தில் இடைத்தேர்தலை ஒத்தி வைத்ததற்கான காரணம் என்ன?

இது தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டியது. நாங்கள் முடிவெடுப்பது அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x