Published : 26 Oct 2018 12:30 PM
Last Updated : 26 Oct 2018 12:30 PM

டெல்லியில் ‘புரட்சித் தலைவி அம்மா’ பள்ளிக்கூடம்: அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தில்லி தமிழ் கல்விக் கழகத்தின் சார்பில் டெல்லியில் உள்ள மயூர் விகார் பள்ளி வளாகத்தில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ‘புரட்சித் தலைவி அம்மா’ பள்ளிக் கட்டிட தொகுதிக்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.

இதுதொடர்பாக தமிழக அரசு இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட செய்திக்குறிப்பில், “டெல்லியில் கடந்த 90 ஆண்டுகளாக தில்லி தமிழ் கல்விக் கழகத்தால் ஏழு இடங்களில் மொழிவாரி சிறுபான்மையின மேல்நிலைப் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இப்பள்ளிகளில், முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தமிழ் மொழி கட்டாயப் பாடமாகவும், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளில் விருப்பப் பாடமாகவும் பயிற்றுவிக்கப்படுகிறது. இப்பள்ளிகளில் படிக்கும் மாணாக்கர்களில் 85 சதவிகிதம் தமிழர்கள் ஆவார்கள். இப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மூலம் தமிழ்ப் பாடப் புத்தகங்களை இலவசமாக வழங்கி வருகிறது.

டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 15 லட்சம் தமிழர்கள் வசிக்கிறார்கள். பெருகிவரும் தமிழ் மக்களின் எண்ணிக்கையினை கருத்தில் கொண்டு, தில்லி வளர்ச்சிக் குழுமத்தால், தில்லித் தமிழ்க் கல்வி கழகத்திற்கு மயூர் விகாரில் பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கு இரண்டரை ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மயூர் விகாரில் பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்கு நிதியுதவி வேண்டியும், அங்கு கட்டப்படும் பள்ளிக் கட்டடித்தின் ஒரு தொகுதிக்கு ஜெயலலிதாவின் பெயர் சூட்டுவதற்கு விருப்பம் தெரிவித்தும், டெல்லி தமிழ்க் கல்விக் கழகம் தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர்.

டெல்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் கோரிக்கையினை ஏற்று, தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் சார்பில் டெல்லியில் உள்ள மயூர் விகார் பள்ளி வளாகத்தில் 13.79 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள பள்ளிக் கட்டிடத்திற்கு நிதி உதவியாக தமிழக அரசின் சார்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டார்.

அதன்படி, தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் சார்பில் டெல்லியில் உள்ள மயூர் விகார் பள்ளி வளாகத்தில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ‘புரட்சித் தலைவி அம்மா’ பள்ளிக் கட்டிட தொகுதிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார். இப்புதிய பள்ளிக் கட்டிடம் 6 ஆயிரத்து 515 சதுர மீட்டர் பரப்பளவில், தரை மற்றும் நான்கு தளங்களுடன் அமையவுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x