

கேரள மாநிலத்துக்குச் சென்ற மதரஸா மாணவர்கள், குழந்தைத் தொழிலாளர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் காட்பாடி ரயில் நிலையத்தில் மீட்கப்பட்டனர். விசாரணைக்குப் பிறகு அவர்கள் மீண்டும் போலீஸ் பாதுகாப்புடன் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சென்னையிலிருந்து வெள்ளிக் கிழமை இரவு கோழிக்கோடு நோக்கிப் புறப்பட்ட மங்களூர் மெயில் ரயிலில் 50-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் குழந்தைத் தொழிலாளர்களாக கடத்தப்படுவதாக சென்னை ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்த நேரத்தில் மங்களூர் மெயில் ரயில், காட்பாடி அருகே சென்றுகொண்டிருந்தது. இதுகுறித்த தகவலின்பேரில், காட்பாடி ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தங்கராஜ் மற்றும் போலீஸார் ரயில் வருகைக்காக காத்திருந்தனர்.
இரவு 10.40 மணியளவில் காட்பாடிக்கு வந்த அந்த ரயிலில் சோதனை நடத்தியபோது, 35 சிறுவர்கள் ஒரு பெட்டியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை ரயிலில் இருந்து கீழே இறக்கிய போலீஸார், அங்குள்ள தனி அறைக்கு அழைத்துச் சென்று, விசாரணை நடத்தினர். அப்போது, அதே ரயிலில் மேலும் 13 பேர் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் 13 சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.
இவர்கள் அனைவரையும் காட்பாடி ரயில் நிலையத்தில் உள்ள ஒரு அறைக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், 48 மாணவர்களும் பிஹார், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள மதரஸாவில் படித்துவருவதும் தெரியவந்தது. இவர்களை அழைத்துச் சென்றவர்களிடம் அந்த மதரஸாவின் முகவரி குறித்து விசாரணை நடத்தினர். பின்னர், 48 பேரையும் குழந்தைகள் நல அலுவலக அதிகாரிகளிடம் சனிக்கிழமை காலை போலீஸார் ஒப்படைத்தனர்.
மாணவர்கள் அனைவரும் ரம்ஜான் விடுமுறைக்காக தங்கள் ஊருக்குச் சென்றதும், மீண்டும் மதரஸாவுக்கு செல்லும்போது, போலீஸாரிடம் பிடிபட்டதும் தெரியவந்தது. இதனால், சனிக்கிழமை மாலை கோழிக்கோடு நோக்கிச் சென்ற மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் அனைவரும் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பிவைக்கப்பட்டனர்.
தமுமுக ஆர்ப்பாட்டம்
மதரஸாவுக்கு படிக்கச் செல்லும் மாணவர்களை பிடித்து வைத்திருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளைச் சேர்ந்த தமுமுகவினர் காட்பாடி ரயில் நிலையத்தில் திரண்டனர். ரயில்வே போலீஸாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அவர்களை போலீஸார் சமா தானம் செய்தனர்.
மாணவர்களை போலீஸ் பாதுகாப்புடன் கோழிக்கோடு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக உறுதி அளித்தனர். அதன்பிறகே தமுமுகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.