Published : 25 Oct 2018 01:01 PM
Last Updated : 25 Oct 2018 01:01 PM

தகுதி நீக்க விவகாரம்; தீர்ப்பு வெளியான நிலையில் அடுத்து என்ன?- மூத்த வழக்கறிஞர் ஜோதி பேட்டி

 

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு சட்டப்பேரவைத்தலைவருக்கு சாதகமாக வந்துள்ள நிலையில் அடுத்து என்ன நடக்கும் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் முக்கியமான அம்சம் ஆளுங்கட்சியில் ஏற்பட்ட பிளவு. தகுதி நீக்கமாக 18 எம்.எல்.ஏக்களை நீக்க சட்டப்பேரவை தலைவர் உத்தரவிட்டதில் முடிந்தது.

அதன்பின்னர் நடந்த நிகழ்வுகள் பல கட்டங்களைக் கடந்து இன்று தீர்ப்பாக சட்டப்பேரவைத்  தலைவரின் உத்தரவை உறுதிப்படுத்தியுள்ளது. சட்டப்பேரவைத் தலைவரின் அதிகாரத்தில் தலையிட நீதிமன்றம் விருமபவில்லை என மீண்டும் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

தீர்ப்புக்குப் பின்னர் முதல் கட்டமாக 18 எம்.எல்.ஏக்களாக இருந்த அனைவரும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு அதற்கான அறிவிப்பு வெளியாகலாம். அடுத்து தீர்ப்பை எதிர்த்து தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் மேல் முறையீட்டுக்குச் செல்லலாம். அது ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில் இடைத்தேர்தல் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்படும்.

அடுத்து என்னென்ன நிகழ்வுகள் நடக்கும். 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்குமா?, நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு வெல்லுமா? ஆட்சிக்கு பிரச்சினை வருமா? தினகரன் அணி என்ன ஆகும் போன்ற கேள்விகளை மூத்த வழக்கறிஞர் ஜோதியிடம் முன்வைத்தோம்.

3-வது நீதிபதியின் தீர்ப்பை அடுத்து அரசியல் நிகழ்வாக என்ன நடக்கும்?

தமிழ்நாடு அரசியலைப் பொறுத்தவரை ஆயாராம் காயாராம் அரசியல் நடக்கும். 18 எம்.எல்.ஏக்கள் அரசியல் வாழ்க்கை, எம்.எல்.ஏ கனவு தகர்ந்து போனது. தங்கள் கனவு தகர்ந்து போனதால் அவர்கள் ஆளுங்கட்சியை நோக்கி வருவார்கள்.

அவர்கள் தற்போது எம்.எல்.ஏ இல்லாத பட்சத்தில் ஏன் வரவேண்டும்?

அவர்கள் தற்போது சாதாரண ஆட்கள் தான். தங்கள் அரசியலைப் பாதுகாக்க தினகரன் கூடாரத்தை விட்டு வெளியே வருவார்கள்.

மேல்முறையீட்டுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டல்லவா?

வாய்ப்பு உள்ளது. உச்ச நீதிமன்றதுக்குச் செல்வார்கள். அதன் தீர்ப்பு வருவதற்குள் நாடாளுமன்றத் தேர்தல் வந்துவிடும்.

மேல்முறையீடு போகும் பட்சத்தில் உயர் நீதிமன்றத் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்படுமா?

நிறுத்தி வைக்கப்படாது. வழக்கை எடுத்துக்கொண்டாலும் வழக்கின் முடிவில் தான் முடிவு செய்வார்களே தவிர தடை உத்தர்வு போட்டு எம்.எல்.ஏவாகத் தொடருங்கள் என்று சொல்ல மாட்டார்கள்.

மேல்முறையீட்டில் இடைக்கால உத்தரவு எதுவும் வராது. தகுதி நீக்கத்துக்கு முந்தைய பழைய நிலை வராது.

ஒருவேளை மேல்முறையீடு போகாத பட்சத்தில் என்ன நடக்கும்?

மேல் முறையீடு போகாவிட்டால் தினகரன் அணியிலிருந்து சிலர் தங்களை காப்பாற்றிக்கொள்ள ஆளுங்கட்சிக்கு வருகிறேன். மீண்டும் அதே தொகுதியில் வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டுச் செல்லவும் வாய்ப்புண்டு.

தற்போது இவர்கள் எம்.எல்.ஏ இல்லாத காரணத்தால் கட்சியை விட்டு நீக்கவும் வாய்ப்புண்டு அல்லவா?

நீக்குவார்கள், உடனடியாக அதுவும் நடக்கலாம். அதனால் என்ன நடக்கும் என்றால் 18 பேரில் பலர் ஆளுங்கட்சி நோக்கி வருவார்கள்.

அதே தொகுதியில் என்னை நிற்க வையுங்கள் என்று கேட்டு வந்தால்?

அப்படி கேட்டு வருவார்கள், ஆனால் அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடக்காது. நடக்கவும் வாய்ப்பில்லை. ஒரு தகுதி நீக்க எம்.எல்.ஏ உச்ச நீதிமன்றம் சென்றால்கூட போதும் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் நடத்தாது.

மேல்முறையீடு சென்றால் உயர் நீதிமன்ற தீர்ப்பு நிறுத்தப்படுமா என்று இதைத்தான் முதலில் கேட்டேன்?

அனைத்தும் அல்ல. இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் தேர்தல் நடத்த முடியாது என்று தேர்தல் ஆணையம் அறிவிக்கும். ஆகவே இடைத்தேர்தல் வராது. யாராவது ஒருவர் போகத்தான் செய்வார்.

இன்னும் புத்திசாலித்தனமாக ஒன்று சொல்கிறேன். ஆளுங்கட்சித்தரப்பு இவர்களில் ஓரிருவரைப்பிடித்து மேல்முறையீட்டை செய்ய வைத்தால் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இப்போது இருக்கும் எம்.எல்.ஏக்களை வைத்து ஆட்சியை நடத்துவார்கள். இதற்கான சாத்தியம் அதிகம்.

இதுபோன்ற நேரத்தில் நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டுவந்தால் என்ன ஆகும்?

தாரளமாக இந்த ஆட்சி பிரச்சினை இல்லாமல் தொடரும். ஆகவே எந்தப் பிரச்சினையும் இன்றி இந்த ஆட்சி தொடரும். யாரும் நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்தை கொண்டுவர மாட்டார்கள். திமுகவே கொண்டுவராது. கொண்டு வந்தால் ஜெயிக்காது.  கொண்டு வந்தால் இந்த ஆட்சிக்கு எந்தப் பிரச்சினையும் வராது. நிற்காது வெல்லாது. பயனுள்ளதாக இருக்காது.

அப்படியானால் 214 எம்.எல்.ஏக்களுடன் ஆட்சி தொடரும் என்கிறீர்கள்?

ஆமாம். பிரச்சினை இல்லாமல் தொடரும். இப்போது 18 எம்.எல்.ஏக்கள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சாமானியன் பார்வையில் அது ஒன்றும் பிரச்சினை இல்லை. 18 தொகுதி எம்.எல்.ஏ செலவு மிச்சம் என்றுதான் சாமானியன் நினைப்பான். அரசுக்கு அந்த சம்பளம் லாபம்.

இதில் தவறான முன்னுதாரணம் ஒன்று நடக்கிறதே? ஒரு எம்.எல்.ஏ இல்லாமல் இருந்தால் 6 மாதத்துக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்கிற விதி தகுதி நீக்கம் பெயரில் தொடர்ந்து மீறப்படுகிறதே?

சரியான கேள்வி, ஒரு வெற்றிடம் இருப்பது உண்மைதான். ஒரு எம்.எல்.ஏ இறந்து போனதற்கும் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. இறந்துபோனவர் மீண்டும் வந்து எம்.எல்.ஏ ஆக முடியாது. ஆனால் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர் வழக்கில் வென்று எம்.எல்.ஏ ஆகலாம்.

அப்படியானால் இடைத்தேர்தல் அந்தத் தொகுதிக்கு நடத்தினால் யார் எம்.எல்.ஏ என்று முடிவு செய்வீர்கள். சட்டச் சிக்கல் வரும் அல்லவா? இடைத்தேர்தலில் வென்றவரா? முன்னர் இருந்து வழக்கில் வென்று வருபவரா? குழப்பம் வருமல்லவா? அதனால்தான் இந்தப் பிரச்சினை நீடிக்கிறது.

தற்போது 18 பேரைப் பாதுகாக்கும் வேலையை டிடிவி தினகரன் செய்வாரா?

அவர் பாதுகாத்தாலும் அவர்கள் நிற்க மாட்டார்கள். டிடிவி கோட்டையில் ஓட்டை விழுந்து அவர்கள் செயின்ட் ஜார்ஜ் கோட்டை நோக்கி வந்துவிடுவார்கள்.

உடனடியாக 18 பேரை கட்சியிலிருந்து நீக்க ஆளுங்கட்சி இறங்கும். அதை தவிர்க்க மீண்டும் எம்.எல்.ஏ வாய்ப்புக்காக அவர்கள் ஆளுங்கட்சியை நோக்கி செல்வார்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா?

தாராளமாக அதுதான் நடக்கும். இவர்கள் பசுமையை நோக்கித்தான் வருவார்கள்.

ஆர்ட்டிகிள் 181-ன் கீழ் மேற்கண்ட 18 பேரும் இனி 6 ஆண்டுகள் தேர்தலில் நிற்க முடியாது என்பது சரியா?

தவறான ஒன்று. அந்தத் தகுதி நீக்கம் அல்ல இது. 181 என்பது தண்டைக்குள்ளானவர்கள் சம்பந்தப்பட்டது. இவர்கள் 10-வது ஷெட்யூலின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள். அதுவும் இதுவும் ஒன்றல்ல.

ஆர்ட்டிகிள் 181-ன் கீழ் தகுதி நீக்கம் என்பது தண்டனைக்குரிய சட்டத்தின் கீழ் வழக்கு நடந்து தண்டனை பெற்று அதன் மூலம் தகுதி நீக்கம் செய்யப்படுபவர்களைக் குறிக்கும். 6 வருட தகுதி நீக்கம் என்பது லஞ்ச வழக்கு, வரதட்சணை வழக்கு உள்ளிட்ட ஏழெட்டு வழக்குகள் உள்ளன. தேர்தல் விதிமீறல் தகுதி நீக்கத்தின் கீழ் வருபவர்களும் 181-ன் கீழ் வருவார்கள்.

ஆனால் 18 எம்.எல்.ஏக்கள் சபாநாயகரால் ஷெட்யூல் 10-ன் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள். அவர்களுக்கு தடை எதுவும் இல்லை.

இவ்வாறு மூத்த வழக்கறிஞர் ஜோதி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x