Published : 24 Oct 2018 09:41 AM
Last Updated : 24 Oct 2018 09:41 AM

மழைநீர் சேகரிப்புக்காக பிரபல நடிகர், நடிகைகள் நடிக்கும் விழிப்புணர்வு குறும்படம் தயாரிக்கப்படும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, பிரபல நடிகர்களைக் கொண்டு குறும்படம் தயாரித்து தொலைக்காட்சி, திரையரங்குகளில் ஒளிபரப்பப் படும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னையில் நேற்று தொடங்கிவைத்தார். அப்போது அவர் கூறியதாவது:

சென்னை மாநகரின் வேகமான தொழில் வளர்ச்சி, மக்கள்தொகை பெருக்கம் காரணமாக தண்ணீர் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதை பூர்த்தி செய்வது கடினமான பணியாக மாறிவருகிறது.

நிலத்தடி நீரை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது. தவிர, கடலோரப் பகுதியான சென்னையின் சில பகுதிகளில் இதன் காரணமாக கடல்நீர் உட்புகுந்து நீரின் தரம் பாதிக்கப்படுகிறது.

இதை கருத்தில் கொண்டுதான், மழைநீர் சேகரிப்பு திட்டத்தை 2003-ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தொடங்கினார். அதன்படி, சென்னையில் 9 லட்சம் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், 2,250 அரசு கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. இதனால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, தற்போது 4.30 மீட்டர் என்ற அளவுக்கு வந்திருக்கிறது.

மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பிரபல நடிகர், நடிகைகளைக் கொண்டு ஒரு குறும்படம் தயாரித்து, தமிழக அரசு கேபிள் நிறுவனம் மூலமாகவும், திரையரங்குகளிலும் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள மழைநீர் கட்டமைப்புகளை நன்கு பராமரித்துக் கொள்வது அவசியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை மாநகரின் வேகமான தொழில் வளர்ச்சி, மக்கள்தொகை பெருக்கம் காரணமாக தண்ணீர் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதை பூர்த்தி செய்வது கடினமான பணியாக மாறிவருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x