Published : 12 Oct 2018 01:27 PM
Last Updated : 12 Oct 2018 01:27 PM

சமூக நீதிக்காக வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் குரல் கொடுத்தவர்: சங்கர் மரணத்திற்கு அன்புமணி இரங்கல்

சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கரின் மரணம் போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும் என, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட இரங்கல் குறிப்பில், “சென்னையில் செயல்பட்டு வரும் சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் சென்னையில் இன்று காலை அகால மரணமடைந்தார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள நல்லகவுண்டன்பாளையத்தில் எளிமையான குடும்பத்தைச் சேர்ந்த சங்கர் தமது கடுமையான உழைப்பால் முன்னேறியவர். இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாக வேண்டும் என்ற கனவு கொண்டிருந்த அவர், அது நனவாகாத நிலையில் ஐஏஎஸ் பயிற்சி நிறுவனம் தொடங்கி நூற்றுக்கணக்கானவர்களை குடிமைப்பணி அதிகாரிகளாக உருவாக்கினார். ஏழை மாணவர்கள் பலருக்கு கட்டணமின்றி பயிற்சி அளித்தவர். போட்டித் தேர்வுகளின் நுணுக்கங்களை மாணவர்களுக்கு விளக்கி வெற்றிக்கு வழி வகுத்தவர்.

சமூக நீதியில் அக்கறை கொண்ட அவர், அதற்காக வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் பல்வேறு தளங்களில் குரல் கொடுத்துள்ளார். அவரது மறைவு போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். சங்கரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் மாணவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x