Published : 19 Aug 2014 11:39 AM
Last Updated : 19 Aug 2014 11:39 AM

தமிழில் படித்தோருக்கு வேலைவாய்ப்பில் 80% ஒதுக்கீடு: தமிழ்நாட்டு கல்வி இயக்க மாநாட்டில் தீர்மானம்

தமிழில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் 80% ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாட்டு கல்வி இயக்க தொடக்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

‘தமிழகத்தில் ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை அனைத்துப் பாடங்களிலும் தமிழ்வழிக் கல்வியை கட்டாயமாக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்புகளில் பள்ளியில் தமிழ்வழிக் கல்வி பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதுடன், 80 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வேண்டும். மழலையர் பள்ளிகளை அரசே நடத்த வேண்டும். தமிழ்வழிப் பள்ளிகள் அனைத்தையும் அரசு உதவி பெறும் பள்ளிகளாக ஏற்க வேண்டும். அனைத்துப் பாடங்களிலும் சமச்சீர் கல்வியை கொண்டு வர வேண்டும். சிறுபான்மையினர் பள்ளிகளில் தமிழை பாட மொழியாக பயிற்றுவிக்க வேண்டும்.

தமிழக கல்வியை இந்திய அரசின் பொதுப்பட்டியலிலிருந்து நீக்கி தமிழக அரசின் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். ஆங்கில பாடத்தை 5-ம் வகுப்புக்குப் பிறகே அறிமுகப்படுத்த வேண்டும். அரசுப் பள்ளிகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். தமிழக அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகள் அனைவரையும் அரசுப் பள்ளிகளில் தமிழ்வழியில் படிக்க வைக்க வேண்டும்.

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு, 2015, பிப். 21 அன்று அனைத்து மாவட்ட தலைமையகங்களிலும் மாணவர்களை முன்னிலைப்படுத்தி ‘தமிழே கல்வி மொழி, தமிழ் வழியில் படித்தோருக்கே வேலை, தமிழகத்துக்கே கல்வி உரிமை’ ஆகிய முழக்கங்களை முன்வைத்து பேரணி நடத்துவது’ என்பன உள்ளிட்ட 22 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டுக்கு தமிழ்நாட்டு கல்வி இயக்க மதுரை மாவட்டச் செயலர் உமையர் பாகம் தலைமை வகித்தார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பொழிலன், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வெ. வசந்திதேவி, திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான், காந்தி கிராமிய பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மார்க்கண்டன், பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலர் பிரின்சு கஜேந்திரபாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x