Published : 31 Oct 2018 02:22 PM
Last Updated : 31 Oct 2018 02:22 PM

இனி ஆன்லைனில் மருந்து வாங்க முடியாது: உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

மருந்துச் சீட்டுகள் இல்லாமல், காலாவதியான, மருத்துவர் பரிந்துரைக்கப்படாத மருந்துகள் விற்பனை செய்வதாகவும் இது பொதுமக்கள் உடல் நலத்தை பாதிக்கும் என்றும் மருந்து விற்பனையாளர்கள் தொடர்ந்த வழக்கில் ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்ய உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

ஆன்லைன் மூலம் பொருட்கள் விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது. இதில் அத்தியாவசியமான பொருட்களான் மருந்துப் பொருட்களும் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று, பட்டாசுப் பொருட்களும் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகிறது.

ஆன்லைன் மூலம் பொருட்களை அலைச்சல் இல்லாமல் வீட்டிலிருந்தே வாங்கலாம் என பொதுமக்கள் கருதுவதால் ஆன்லைன் மூலம் பரிவர்த்தனை அதிகம் நடக்கத் தொடங்கி உள்ளது. இதில் பட்டாசு போன்ற பொருட்கள் வெடிமருந்து சட்டத்தை மீறி ஆன்லைனில் விற்பனை செய்யப்படுவதால் ஆபத்து விளையும் என வழக்கு தொடரப்பட்டு ஆன்லைனில் பட்டாசு விற்பனைக்கு இடைக்காலத் தடை விதிக்கபட்டு நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு மருத்து வணிகர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில் பதிவு செய்யப்படாத கடைகள் மூலம் ஆன்லைனில் மருந்து விற்பனை செய்யப்படுவதாகவும், இதனால் பொதுமக்களுக்கு காலாவதியான, தவறான, பரிந்துரைக்கப்படாத மருந்துகள் கிடைக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தனர்.

மருந்துப் பொருட்கள் உயிர்காக்கும் ஒன்று இதை மருத்துவரின் பரிந்துரையின்றி ஆன்லைன் மூலம் விற்பனை செய்வது ஆபத்து. இது பொதுமக்கள் உயிருக்கு அபாயகரமானது. இவ்வாறு விற்பனை செய்வது சட்டவிரோதமானது என்று மனுவில் கூறியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆன்லைன் மூலம் மருந்து விற்பதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மத்திய மாநில சுகாதார அமைச்சகங்கள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 2 வார காலத்திற்கு ஒத்திவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x