Published : 03 Oct 2018 06:57 PM
Last Updated : 03 Oct 2018 06:57 PM

ஓலா, உபர் ஓட்டுநர்களை மிரட்டினால் லைசன்ஸ் ரத்து: புதுச்சேரி ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆளுநர் கிரண் பேடியின் கெடுபிடி உத்தரவு

புதுச்சேரியில் ஆட்டோ ஓட்டுநர்கள், ஓலா மற்றும் உபர் தனியார் போக்குவரத்து சேவை நிறுவன ஓட்டுநர்களை மிரட்டுவதாக வந்தப் புகார்களை அடுத்து துணைநிலை ஆளுநர் கிரண் பேடி ஓலா, உபர் ஓட்டுநர்களின் உதவிக்கு வந்தார்.

ஓலா, உபர் கார், ஆட்டோ போக்குவரத்துச் சேவைகள் குறைந்தக் கட்டணங்களில் இயக்கப்படுவதால் உள்ளூர் ஆட்டோக்களை மக்கள் அதிகம் நாடுவதில்லை, நீண்ட தூரப் பயணமாக இருந்தாலும் குறைந்த தூரப் பயணமாக இருந்தாலும் ஓலா, உபர் சேவைகளையே மக்கள் பெரிதும் விரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் புதுவையில் ஆட்டோ ஓட்டுநர்களில் சிலர் ஓலா, உபர் ஓட்டுநர்களை ஓட்டவிடாமல் மறிப்பது, சண்டையிடுவது, மிரட்டுவது என்று போர்க்கொடு உயர்த்தியதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இதனையடுத்து துணை நிலை ஆளுநர் கிரண் பேடியிடம் ஓலா, உபர் ஓட்டுநர்கள் புகார் அளித்தனர்.

இந்தப் புகார்களை அடுத்து கிரண் பேடி, ஓலா, உபர் சேவை நிறுவனத்தைச் சேர்ந்த 70 ஓட்டுநர்களை அழைத்து சந்திப்பு ஒன்றை நிகழ்த்தினார். இதில் குறைந்த கட்டணத்துக்கு இயக்கினால் பின் விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்று உள்ளூர் ஆட்டோ ஓட்டுநர்கள் கடும் தொல்லை கொடுக்கின்றனர் என்று புகார் தெரிவித்தனர்.

அப்போது கிரண் பேடி கட்டணமற்ற தொலைபேசி எண்களான 100 அல்லது 1031, 1073ஆகியவற்றுக்கு தொடர்பு கொண்டோ அல்லது வாட்ஸ் ஆப் நம்பர் 9489205039 தொடர்பு கொண்டு சட்ட விரோத மிரட்டலில் ஈடுபடும் ஆட்டோ ஓட்டுநர்கள் பற்றி மக்களோ அல்லது ஓலா, உபர் ஓட்டுநர்களோ புகார் அளிக்கலாம் என்று அறிவித்தார், மேலும் crr.pon@nic.in என்ற இணையதளத்திற்கும் மின்னஞ்சல் மூலம் புகார் அனுப்ப ஏற்பாடு செய்துள்ளார்.

மேலும் அந்தக் குறிப்பிட்டக் காவல்நிலையங்களிலும் புகார் அளிக்குமாறும் பேடி அறிவுறுத்தியுள்ளார். போலீஸ் மற்றும் போக்குவரத்துத் துறையினரும் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

இப்படி சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆட்டோ ஓட்டுநர்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படும். அதே போல் உபர், ஓலா ஓட்டுநர்களும் சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுடன் ஈடுபடக்கூடாது என்றும் அறிவுறுத்தினார்.

அதே போல் ஓலா, உபர் நிர்வாகங்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் அமைப்பை அழைத்து விழிப்புணர்வு கூட்டம் நடத்தி உள்ளூர் ஆட்டோக்கள் தங்கள் போட்டியாளர்கள் அல்ல என்பதை விளக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x