Published : 01 Oct 2018 07:57 AM
Last Updated : 01 Oct 2018 07:57 AM

கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: கிராமங்களில் வீட்டு காய்கறி உற்பத்தி திட்டம்-  சென்னை அருகே சர்வதேச விமான நிலையம்; எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

கிராமங்களில் வீட்டு காய்கறி உற்பத்தி திட்டம் தொடங்கப்படும் என்றும், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் என்றும் சென்னையில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் முதல்வர் கே.பழனிசாமி அறிவித்தார்.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா தமிழக அரசு சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதைத் தொடர்ந்து எம்ஜிஆர் நூற் றாண்டு நிறைவு விழாவும், தமிழ்நாடு 50-ம் ஆண்டு பொன்விழாவும் அரசு சார்பில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு சட்டப்பேரவை தலைவர் பி.தனபால் தலைமை தாங்கினார். விழா மேடையில் அலங்கரித்து வைக் கப்பட்ட எம்ஜிஆர், ஜெயலலிதா படங் களுக்கு முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மக்களவை துணைத் தலைவர் தம்பி துரை ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். எம்ஜிஆரின் முழுஉருவப் படத்தை முதல்வர் திறந்துவைத்தார். எம்ஜிஆருடன் நடித்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் கவுரவிக் கப்பட்டனர். நூற்றாண்டு நிறைவு விழா சிறப்பு மலர், எம்ஜிஆரின் சட்டப்பேரவை உரைகள், அவரது பொன் மொழிகள் அடங்கிய தொகுப்பு, சிறப்பு அஞ்சல் தலை ஆகியவற்றை முதல் வர் பழனிசாமி வெளியிட்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

எம்ஜிஆர் தனது புரட்சிகர நடிப்பாலும், வள்ளல் குணத்தாலும் மக்களைக் கவர்ந்தார். தனது ஆட்சிக்காலத்தில் சத்துணவுத் திட்டம், கிருஷ்ணா நதிநீர் திட்டம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், விவசாயக்கடன் தள்ளுபடி, பயிர்க் காப்பீட்டு முறை, குடிசை வீடுகளுக்கு மின்இணைப்பு என பல்வேறு திட்டங் களை கொண்டுவந்தார். இறந்த பிறகும் தான் வாழ்ந்த ராமாவரம் தோட்டத்தை மாற்றுத் திறனாளி களுக்காக வழங்கினார்.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ஓர் ஆடம்பர விழா என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்து வருகிறார். அவர் சொல்வதுபோல் இது ஆடம்பர விழா அல்ல. மக்களுக்கு நன்மை அளிக்கும் விழா. மதுரையில் தொடங்கி கன்னியாகுமரி வரை 31 மாவட்டங்களில் கொண்டாடப்பட்ட எம்ஜிஆர் நூற்றாண்டு விழாக்கள் மூலம் ரூ.10,884 கோடி மதிப்பில் 5,570 திட்டங்களை அறிவித்து செயல் படுத்தி வருகிறோம். இன்று சென்னை யில் நடக்கும் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் பல அறிவிப்புகளை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடை கிறேன்.

வடசென்னை பகுதியில் மீன்பிடி படகு தயாரிப்பது, மீன்பிடி படகு பழுதுபார்க்கும் தளம், படகுத்துறை மேம்பாடு, அடிப்படை கட்டமைப்புகள் உருவாக்குவது, நல்வாழ்வுத் திட்டங் களை மேம்படுத்துவது உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

சென்னை அருகே உலகத்தரம் வாய்ந்த புதிய பன்னாட்டு விமான நிலை யம் அமைக்கப்படும். தமிழகத்தில் உள்ள நீர்வள ஆதாரங்களை பாதுகாப்பது, நதிகளை சீரமைப்பது ஆகிய பணியை செயல்படுத்த வசதி யாக தமிழ்நாடு நீர்வள ஆதாரங்கள் பாதுகாப்பு மற்றும் நதிகள் சீரமைப்புக் கழகம் என்ற புதிய அமைப்பு ஏற்படுத்தப்படும்.

கிராமப்புறங்களில் வாழும் மக்கள், விவசாயிகள் தங்கள் வீடு அல்லது நிலத்தின் ஒரு பகுதியில் காய்கறிகள் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கும் வகையில் ஒரு முன்னோடி திட்டமான ‘முதல்வரின் வீட்டு காய்கறி உற்பத்தித் திட்டம்’, நடப்பு நிதியாண்டில் தொடங் கப்படும். சென்னை தாம்பரத்தை அடுத்த சிங்கப்பெருமாள்கோவில், வீராபுரம் பகுதிகளில் பெருகிவரும் மின்தேவையை ஈடுசெய்ய மாம்பாக் கத்தில் ரூ.137 கோடியில் 230 கிலோ வாட் துணை மின்நிலையம் அமைக்கப்படும்.

சென்னை பள்ளிக்கரணையில் ரூ.31 கோடி செலவில் 100 படுக்கை வசதியுடன் புறநகர் மருத்துவமனை அமைக்கப்படும். கீழ்ப் பாக்கம் அரசு மருத்துவ மனையில் 12 அறுவை சிகிச்சை அரங்குகள் உள்ளிட்ட வசதிகளுடன் ரூ.141 கோடி செலவில் புதிய அலகு கட்டப் படும். இந்த மருத்துவ மனைக்கு எம்ஆர்ஐ, சிடி ஸ்கேன் உள்ளிட்ட கருவிகள் வாங்க ரூ.134 கோடி வழங்கப்படும்.

தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை (2-ம் கட்டம்) ரூ.33.35 கோடி செலவில் அமைக்கப்படும். பரங்கிமலை - பூந்தமல்லி ஆவடி சாலையில் ஆவடி அருகே ரூ.12 கோடி செலவில் ரயில்வே மேம்பாலம் அகலப்படுத்தப்படும். எம்ஜிஆர் இல்லமான ராமாவரம் தோட்டம் அமைந்துள்ள சுமார் 21 கிலோ மீட்டர் நீளமுள்ள பரங்கிமலை - பூந்தமல்லி - ஆவடி நெடுஞ்சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படுகிறது. ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையமான கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு ‘புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பேருந்து நிலையம்’ என பெயர் சூட்டப்படுகிறது.

இவ்வாறு முதல்வர் கே.பழனிசாமி அறிவித்தார்.

துணை முதல்வர் ஓபிஎஸ் பேசும்போது, ‘‘எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் அவரது பெருமைகளை பேசாமல் திமுகவையும் கருணாநிதி யையும் விமர்சிக்கிறார்கள் என மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். எம்ஜிஆரின் புகழை பேசும்போது அவர் காலத்தில் தமிழகத்துக்கு எதிராக செயல்பட்டவர்களைப் பற்றி எப்படி பேசாமல் இருக்க முடியும்’’ என்றார்.

திராவிட கர்ணன்

மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை பேசும்போது, ‘‘சீனப் போரின்போது இந்திய ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு அப் போதே அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வழங்கியவர் எம்ஜிஆர். அவர் திராவிட கர்ணன். மத்திய அரசிடம் போராட்டம் நடத்திதான் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தை கொண்டுவந்தார். இப்போதும் மாநில அரசு நிதிக்காக மத்திய அரசிடம் கையேந்தி நிற்க வேண்டியுள்ளது" என்று குறிப்பிட்டார்.

சட்டப்பேரவை தலைவர் ப.தனபால் பேசும்போது, ‘‘தன்னைப் போற்று வோருக்கு மட்டுமின்றி தூற்றுவோருக் கும் உதவி செய்யக்கூடியவர் எம்ஜிஆர். பொதுவுடைமை கொள்கையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். தன்னால் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்று எண்ணுப வர் எம்ஜிஆர்" என்று குறிப்பிட்டார்.

அமைச்சர் டி.ஜெயக்குமார், தமிழ் நாடு பாடநூல் கழகத் தலைவர் பா.வளர்மதி, ஜெ.ஜெயவர்த்தன் எம்.பி., உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். விழாவில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், அதிமுக நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்ற னர். முன்னதாக, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற் றார். விழா நிறைவில் தமிழ் வளர்ச்சித் துறை செயலாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x