Published : 22 Aug 2014 07:56 AM
Last Updated : 22 Aug 2014 07:56 AM

சுயநிதி கலைக் கல்லூரிகளுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயிக்க குழு: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் வசூலிக்க வேண்டிய கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்வதற்கான குழுவை 3 மாத காலத்துக்குள் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக பெரியார் பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாகங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருந்ததாவது:

கல்லூரிக் கல்வி இயக்குநரக இணையதளத்தில் சுயநிதி கல்லூரிகள் வசூலிக்க வேண்டிய கல்விக் கட்டணம் தொடர்பான விவரங்கள் இடம்பெற்றுள்ளன. பி.ஏ. படிப்புக்கு ரூ.1,350, பி.எஸ்சி. பயில ரூ.2,850 என எல்லா படிப்புகளுக்கும் மிகக் குறைந்த கட்டணத்தை நிர்ணயித்துள்ளனர்.

கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்வது தொடர்பாக உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளுக்கு முரணான வகையில் மிகக் குறைந்த கட்டணத்தை உயர் கல்வித் துறையினர் தன்னிச்சையாக நிர்ணயம் செய்துள்ளனர். இதனால், சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை மூடவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே, தன்னிச்சையாக நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும். தனியார் சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க குழு ஒன்றை அமைக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் வழக்கறிஞர் பி.சஞ்சய்காந்தி, ‘‘இதுபோன்ற குழுவை அமைக்க அரசுக்கு குறைந்தபட்சம் 6 மாதங்களாவது தேவைப்படும். அந்த கால அவகாசத்தை வழங்க வேண்டும்’’ என கேட்டுக் கொண்டார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதி வி.ராமசுப்பிரமணியன், ‘‘சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வசூலிக்க வேண்டிய கல்விக் கட்டணம் குறித்து நிர்ணயம் செய்வதற்கான குழுவை 3 மாத காலத்துக்குள் தமிழக அரசு அமைக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x