Published : 01 Oct 2018 02:43 PM
Last Updated : 01 Oct 2018 02:43 PM

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஹெச்.ராஜா தான் அதிமுக வேட்பாளர்: தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தகவல்

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஹெச்.ராஜாவை வேட்பாளராக நிறுத்த அதிமுக முடிவு செய்துள்ளதாக தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றத்தில் எம்எல்ஏவாக இருந்த ஏ.கே.போஸ் கடந்த ஆகஸ்ட் மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால், 2016 சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு அத்தொகுதியில் இரண்டாவது முறையாக இடைத்தேர்தல் நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. முன்னதாக, அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக எம்எல்ஏ சீனிவேலு பதவியேற்பதற்கு முன்பே உயிரிழந்தார். அதன்பிறகு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஏ.கே.போஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அதிமுக, திமுக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் இப்போதிலிருந்தே பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா நிறுத்தப்படுவார் என தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மதுரையில் இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, “திருப்பரங்குன்றத்தில் அதிமுக நிற்காமல் பாஜகவுடன் கூட்டணி வைத்து ஹெச்.ராஜாவுக்கு சீட் தரப் போகின்றனர். ஆக, ஹெச்.ராஜாதான் திருப்பரங்குன்றத்தில் அதிமுக வேட்பாளர். நம்பத்தகுந்த வட்டாரங்கள் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளன” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x