Published : 03 Oct 2018 06:50 PM
Last Updated : 03 Oct 2018 06:50 PM

‘கமிஷன், கலெக்‌ஷன், கரப்ஷன்’: திமுக நடத்தும் 102 கண்டன பொதுக்கூட்டங்களுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி

தமிழக அரசுக்கு எதிராக திமுக கண்டன பொதுக்கூட்டம் நடத்த தமிழகத்தில் 102 இடங்களுக்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

திமுக சார்பில் தமிழகம் முழுவதும் ‘கமிஷன், கலெக்‌ஷன், கரப்ஷன்’ என்ற தலைப்பில் வரும் அக்.3 மற்றும் அக்.4 மற்றும் அக்.5 ம் தேதி ஆகிய 3 நாட்கள் தமிழகம் முழுவதும் கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்போவதாக திமுக அறிவித்திருந்தது. இந்த பொதுக் கூட்டமானது 127 இடங்களில் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் காவல்துறை பல இடங்களில் அனுமதி மறுப்பதாக திமுக தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது

இந்த வழக்கு இன்று நீதிபதி மகாதேவன் முன் இன்று காலை விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது கடந்த 28-ம் தேதி திமுகவின் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி அளிக்க பரிசீலிப்பதாக தெரிவித்த காவல்துறையினர் கடந்த 1-ம் தேதி அனுமதி மறுப்பது ஏன் என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு அரசு தரப்பில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரிய 127 இடங்களில் 5 இடங்களில் நடத்த அனுமதிக்க முடியாது 102 இடங்களுக்கு தற்போது அனுமதி வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் திமுக அனுமதி கோரிய 20 இடங்கள் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்கப்படாத இடங்கள் என தெரிவிக்கப்பட்டது.

காலையில் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி திமுக அனுமதி கோரிய மனுக்கள் நிராகரிக்கபட்ட விதம் சரியில்லை என கருத்து தெரிவித்தார். ஏன் நிராகரிக்கபட்டது? அனுமதி வழங்க முடியுமா என மதியம் 2:15- மணிக்கு தெரிவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

நிபந்தனைகள் விதித்தால் நிறைவேற்ற தயார் என மனுதாரர்கள் சொல்கிறார்கள். அதையும் பரிசீலியுங்கள் என தெரிவித்த நீதிபதி, சில இடங்களில் அனுமதி கொடுத்துட்டு பின்னர் நிராகரித்தது ஏன் என கேள்வி எழுப்பினார்.

திமுக தரப்பில், திமுகவின் போராட்டங்களைக் கண்டு அரசு ஏன் அஞ்சுகிறது? நாங்கள் கட்டுக்கோப்பான இயக்கம் பிரச்சினை ஏதும் கூட்டத்தில் ஏற்படாது. எங்கள் மனுக்களை நிராகரிக்க லஞ்சம், குட்கா போன்ற விவகாரங்களின் வழக்குகளை காரணமாக சுட்டிக்காட்டுவதை ஏற்க முடியாது என தெரிவிக்கப்பட்டது.

மேலும் அனுமதிக்கப்படாத இடம் எதுவும் புதிதாக கோரவில்லை ஏற்கனவே அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்திய இடத்தில்தான் அனுமதி கோரினோம் என தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி மகாதேவன் நாளை இந்த 20 இடங்கள் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிப்பதா? என்பது குறித்து நாளை முடிவெடுக்கப்படும் என உத்தரவிட்டு 102 இடங்களுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x