

கொடைக்கானல் அருகே சுற்றுலாப் பயணிகள் மற்றும் கல்விச் சுற்றுலா மாணவர்களை மகிழ்விக்க பாராசூட், பாராகிளைடர் என்னும் வான் சாகச விளையாட்டு நிகழ்ச்சி வரும் 23-ம் தேதி தொடங்கப்படுகிறது.
கொடைக்கானலில் ரம்மியமான 55 இயற்கை சுற்றுலா இடங் கள் உள்ளன. இதில், கொடைக் கானலில் இருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ள மன்னவனூர் என்ற இடமும், இங்குள்ள ஏரியைச் சுற்றி காணப்படும் 400 ஏக்கர் புல்வெளிப் பிரதேசமும் வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகள், கல்வி சுற்றுலா வரும் மாணவர்களை மிகவும் கவர்ந்துள்ளது
ரூ.40 கோடியில் சுற்றுலாத் திட்டங்கள்
தற்போது, இங்கு வனத்துறை சார்பில் சுற்றுலாப் பயணிகள் காடுகளை சுற்றிப் பார்க்க (டிரெக்கிங்) அழைத்து செல்லப் படுகின்றனர். மேலும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகமானது கொடைக் கானலைப் போல், மன்னவனூரை யும் சிறந்த சுற்றுலாத் தலமாக்க ரூ.40 கோடி மதிப்பீட்டில் சிறப்புத் திட்டங்களை மேற்கொள்ள நட வடிக்கை எடுத்துள்ளது. இந்நிலை யில் இந்திய வான் விளையாட்டு மற்றும் அறிவியல் மையம் சார்பில், மன்னவனூரில் நிரந்தர மாக வான்வழி சாகச விளை யாட்டு நிகழ்ச்சி (பாராசூட், பாராகிளைடர்) வரும் 23-ம் தேதி தொடங்கப்படுகிறது.
இதுகுறித்து இந்திய வான் விளையாட்டு மற்றும் அறிவியல் மைய இயக்குநர் பாபு கூறியதாவது: “இந்த ஆண்டு கொடைக்கானல் கோடை விழாவில், மன்னவனூரில் வான் சாகச விளையாட்டு நடத்தப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் மத்தியில் இந்த விளையாட்டு வரவேற்பைப் பெற்றதால், நிரந்தரமாக இந்த வான் சாகச விளையாட்டு மற்றும் பயிற்சி இங்கே தொடங்கப்படுகிறது.
மன்னவனூரில் வான் சாகச விளையாட்டுகள் நடத்துவதற்குத் தகுந்த சிறிய மலைக்குன்றுகள், பறந்து செல்ல ஏதுவாக நல்ல காற்றோட்டம் காணப்படுகிறது. வயது வித்தியாசமின்றி இந்த விளையாட்டை அனைவரும் கற்றுக்கொள்ளலாம். இந்த வான் சாகச விளையாட்டில், அந்தரத்தில் 500 அடி முதல் 5 ஆயிரம் அடி உயரம்வரைபறக்கலாம். காற்று சாதகமாக இருந்தால் அரை மணி நேரம், ஒரு மணி நேரம்கூட பறந்து மகிழலாம்’’ என்றார்.