Published : 27 Oct 2018 12:41 PM
Last Updated : 27 Oct 2018 12:41 PM

மகிந்த ராஜபக்சே பதவி ஏற்பு: தமிழர்களின் நெஞ்சில் பாய்ந்த வேல்; வைகோ

இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவி ஏற்றிருப்பது தமிழர்களின் நெஞ்சில் பாய்ந்த வேல் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வைகோ இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “இலங்கைத் தீவில் மிகக் கொடூரமான ஈழத் தமிழ் இனப்படுகொலையைத் திட்டமிட்டு ஈவு இரக்கமின்றி நடத்திய கொடிய குற்றவாளி அதிபர் பொறுப்பிலிருந்த மகிந்த ராஜபக்சே என்பதை ஐநா சபையின் பொதுச்செயலாளர் 2010 நியமித்த மார்சுகி தாருஸ்மன் தலைமையிலான குழுவின் ஆய்வு அறிக்கை உலகத்துக்கு அம்பலப்படுத்தியது.

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஒன்றரை லட்சம் தமிழர்கள் கோரமாகக் கொல்லப்பட்டனர். ஹிட்லரின் நாஜிகள் இரண்டாம் உலகப்போரின் போது நடத்திய படுகொலைகளுக்குப் பிறகு ராஜபக்சே அரசு நடத்திய இனப் படுகொலையில் கர்ப்பிணித் தாய்மார்களும் கொல்லப்பட்டனர். எண்ணற்ற தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். ஏராளமான இளைஞர்கள் சித்ரவதை செய்து அழிக்கப்பட்டனர்.

இந்த இனப்படுகொலையை இலங்கை அதிபர் பொறுப்பில் இருந்த ராஜபக்சே நடத்தியபோது, அதனைச் செயல்படுத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தவர்தான் மைத்திரிபால சிறிசேனா ஆவார். இருவருமே தமிழ் இனக்கொலையின் கூட்டுக் குற்றவாளிகள் ஆவார்கள்.

2015 தேர்தலின்போது மைத்திரிபால சிறிசேனா ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து ஒரு நாடகம் நடத்தினார். ஈழத் தமிழ் இனத்தையே கருவறுத்துப் பூண்டோடு அழித்துவிட வேண்டும் என்ற வன்மம் கொண்டவர்தான் ராஜபக்சே என்பதை மானத் தமிழர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.

இலங்கை அரசியலில் நடைபெறுகிற சதுரங்கப் போட்டியில், சிங்கள அரசியல்வாதிகள் அனைவருமே ஈழத் தமிழ் இனத்தின் தனித்தன்மையை அழிக்கும் குறிக்கோளைக் கொண்டவர்கள்தாம்.

2015 ஆம் ஆண்டு ஐநாவின் மனித உரிமைக் கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின்படி இலங்கையில் நடைபெற்ற தமிழர் படுகொலைகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அதில் உலக நாடுகளின் நீதிபதிகள், குறிப்பாக காமன்வெல்த் நாடுகளின் நீதிபதிகள் இடம் பெறுவதற்கு இலங்கை முதலில் எதிர்ப்புக் காட்டியபோதும், பின்னர் ஒப்புக்கொண்டது.

ஆனால் அப்படிப்பட்ட நீதி விசாரணை எதுவும் கடந்த மூன்றாண்டு காலத்தில் நடைபெறவே இல்லை. போரின்போது காணாமல் போன தமிழர்களைக் கண்டுபிடிக்கவும், விபரங்களை அறியவும் ஆணையம் அமைப்பதாக ஒப்புக்கொண்ட இலங்கை அரசு, கண் துடைப்புக்காக ஒரு ஆணையத்தை அமைத்ததே தவிர, அது செயல்படவே இல்லை.

அரசாங்கத்தால் பறிக்கப்பட்ட தமிழர்களின் நிலங்களை தமிழர்களிடம் ஒப்படைக்கவில்லை. உலகத்தை ஏமாற்றுவதற்காக இதுகுறித்துப் பொய்யான தகவலையே சிங்கள அரசு கூறியது.

ஈழத்தமிழர் தாயகத்தில், குறிப்பாக வடக்கு மாகாணத்தில் குவிக்கப்பட்டு இருக்கின்ற ராணுவத்தை திரும்பப் பெறுவதாக ஒப்புக்கொண்ட சிங்கள அரசு, அதனைச் செயல்படுத்தவே இல்லை.

ஐந்து தமிழர்களுக்கு ஒரு சிங்கள ராணுவச் சிப்பாய் என்கிற வீதத்தில் தமிழர் தாயகமே சிங்கள ராணுவ முகாம் ஆக்கப்பட்டுவிட்டது. அரசியல் சட்டத் திருத்தம், அதிகாரப் பகிர்வு என்று 2015 இல் உலக நாடுகளை ஏமாற்றிய சிங்கள அரசு, அதற்கான எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை.

2015 இல் மனித உரிமைக் கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற சிங்கள அரசின் கோரிக்கையை மனித உரிமைக் கவுன்சில் ஏற்றுக்கொண்ட போதிலும், 2019 மார்ச் மாதத்தில் அந்தக் கால அவகாசம் முடிவடைய இருக்கிறது.

மாலத் தீவு தேர்தலில் நடைபெற்ற அதிகார மாற்றத்தால் ஆத்திரமடைந்த சீனா, இலங்கையில் தனது ஆதிக்கத்தை வலுப்படுத்திக்கொள்வதற்காக ஏற்கனவே அம்மன்தோட்டா துறைமுகத்தைப் பெற்றதோடு, மீண்டும் ராஜபக்சே கைகளில் அதிகாரம் வரவேண்டும் என்று திட்டமிட்டுக் காய் நகர்த்துகிறது.

தமிழ் இனக்கொலையாளி ராஜபக்சே இந்தியாவுக்கு வந்து, பிரதமர் மோடியைச் சந்தித்ததும், மூன்று நாட்கள் டெல்லியில் முகாமிட்டதும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

தமிழர்களின் மனக்காயங்களுக்கு மருந்திட்டதைப் போல வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன், வடக்கு மாகாண சபையில் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்மானத்தை எந்த எதிர்ப்பும் இன்றி ஒருமனதாக நிறைவேற்றினார்.

அத்தீர்மானத்தின்படி, சிங்கள ராணுவமும், சிங்களக் குடியேற்றங்களும் தமிழர் தாயகத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, நடைபெற்ற இனக்கொலை குறித்து பன்னாட்டு நீதி விசாரணையும், தமிழ் ஈழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதாகும்.

தாய்த் தமிழகத்தில் உள்ள தமிழர்களும், உலக நாடுகளில் வாழ்கிற புலம்பெயர் ஈழத் தமிழர்களும் இலக்காகக் கொள்ளவேண்டியது எல்லாம், நடைபெற்ற இனக்கொலைக்கு பன்னாட்டு நீதிப் பொறிமுறை அமைப்பதும், தமிழர் தாயகத்திலிருந்து ராணுவத்தையும், சிங்களக் குடியேற்றங்களை வெளியேற்றச் செய்வதும், சுதந்திரத் தமிழ் ஈழ நாடு அமைப்பதற்காக இலங்கையில் தமிழர் தாயகத்திலும், உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்களிடத்திலும் பொது வாக்கெடுப்பு நடத்துவதும்தான் என்பதை உணர்ந்து, அந்தக் கடமையை மனதில் கொண்டு செயல்பட வேண்டும் என்பதுதான்.

இலங்கை அரசியல் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட 1 9 ஆவது திருத்தத்தின்படி, ராஜபக்சே நியமனம் செல்லாது என்றும், தானே பிரதமர் என்றும் ரணில் விக்கிரமசிங்கே கூறி இருக்கிறார். எது எப்படி இருப்பிலும் சிங்களர்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும் தமிழ் இன அழிப்பையே நோக்கமாகக் கொண்டவர்கள் என்பதும், தமிழர்களுக்கு நீதி கிடைக்காது என்பதும் உண்மையாகும்.

லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் சிங்கள அரசால் கொல்லப்பட்டதையும், அதனைத் தடுப்பதற்காக முத்துக்குமார் உள்ளிட்ட 19 தமிழர்கள் தங்கள் உயிர்களை நெருப்புக்குத் தாரைவார்த்துப் பலியாகி தியாகம் செய்து மடிந்ததையும் மனதில் கொண்டு தமிழர்கள் செயலாற்ற வேண்டும். இலங்கை அரசாங்கத்தினுடைய மோசடியையும், சதி நாடகத்தையும் உலக நாடுகள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

இந்தியாவில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த நரேந்திர மோடி அரசு தொடக்கத்திலிருந்தே மனித உரிமைக் கவுன்சிலிலும், ஈழத்தமிழர்கள் குறித்த அனைத்துப் பிரச்சினைகளிலும் சிங்கள அரசுக்கு ஆதரவாகவே நடந்து வருகிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்” என வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x