Published : 27 Oct 2018 01:33 PM
Last Updated : 27 Oct 2018 01:33 PM

வடிவேல்பட பாணியில் ரூ.4.5 லட்சம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிளை நூதன முறையில் திருடிய இளைஞர்: பைக் ரேஸில் ஈடுபட்டபோது விபத்தில் சிக்கி கைதானார்

ஆன்லைனில் ரூ.4.5 லட்சம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிளை விற்க பதிவு செய்த இளைஞரிடம் விலைக்கு வாங்குவதுபோல் நூதன முறையில் ஏமாற்றி பைக்குடன் மாயமான இளைஞர் விபத்தில் சிக்கியதன்மூலம் போலீஸாரிடம் பிடிபட்டுள்ளார்.

ஜனனம் என்கிற படத்தில் வடிவேல் ஒரு காமெடி காட்சியில் நடித்திருப்பார். அதில் மோட்டார் சைக்கிளை வாங்க வரும் இருவர் அப்பாவியாக அமர்ந்திருக்கும் வடிவேலிடம் மோட்டார் சைக்கிளை விலைக்கு வாங்க வந்துள்ளோம் விலை பேசி வாங்கிக்கொடுங்கள் என்பார்கள். வடிவேலு அறிவாளி போல் பஞ்சாயத்து செய்து வண்டியின் விலையை பேசுவார்.

பின்னர் விலைக்கு வாங்க வந்தவர்கள் வாகனத்தை ஓட்டிப்பார்க்க வேண்டும் என்று கேட்டு வண்டியை திருடிச் செல்வார்கள். வடிவேல் மாட்டிக்கொண்டு விழிப்பார். இன்னொரு படத்தில் வடிவேல் விலைக்கு வாங்கும் டிவிஎஸ் 50 மோட்டார் சைக்கிளை ஓட்டிப்பார்க்கிறேன் என ஆர்த்தியை ஏமாற்றி திருடிச்செல்வார்.

இதேபோன்ற சம்பவம் சென்னையில் பல இடங்களில் நடந்து வருகிறது. ஆன்லைனில் வாகனங்களை விற்பனை செய்பவர்களிடம் விலைபேசி ஓட்டிப்பார்ப்பதுபோல் பைக்கைத் திருடிச் செல்வதை வாடிக்கையாக வைத்துள்ள இளைஞர் ஒருவர் சிக்கியுள்ளார்.

ஏழுகிணறைச்சேர்ந்தவர் அப்துல் அஃப்ரீன் (24). இவருக்குச் சொந்தமாக நான்கரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள கவாசாகி நிஞ்சா என்ற இருசக்கர வாகனத்தை விற்க ஆன்லைனில் பதிவிட்டிருந்தார். கடந்த 22-ம் தேதி அவரிடம் செல்போனில் பேசிய ஒரு நபர் தனக்கு பைக் பிடித்துள்ளதாவும், பைக்கைப் பார்க்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அதன்படி ஸ்டான்லி மருத்துவமனை அருகே கொண்டு வரச்சொல்லி கூறியுள்ளார். அதன்படி அங்கு வந்த அப்துலிடம் ஆட்டோவில் வந்த நபர், வாகனத்தின் ஆவணங்களைப் பார்த்த பிறகு அப்துல் அஃப்ரீனுடன் வாகனத்தை ஓட்டிப் பார்த்துள்ளார். ராயபுரம் மேம்பாலம் அருகே வந்தபோது அப்துலை இறக்கி விட்டுவிட்டு அவர் வாகனத்துடன் சென்றவர் திரும்பி வரவில்லை.

இதுபற்றி அப்துல் அளித்த புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீஸார் குறிப்பிட்ட நபர் பேசிய எண்ணைச் சோதித்தபோது அது அந்த நபர் வந்த ஆட்டோ ஓட்டுநரின் எண் என்பது தெரியவந்தது. ஆட்டோ ஓட்டுநரைப் பிடித்து போலீஸார் விசாரித்தபோது தன்னிடம் செல்போன் இல்லை என்று என் செல்போனை வாங்கிப் பேசினார். பைக் வாங்கப் போகிறேன். விற்பனை முடிந்தால் உனக்குத் தனியாக ரூ.2000 தருகிறேன் என்று கூட்டி வந்தார் என ஆட்டோ ஓட்டுநர் கூறியுள்ளார்.

ஆட்டோ வாடகையும் தராமல், ஆட்டோ ஓட்டுநர் செல்போனிலேயே பேசி சாட்சி இல்லாமல் பைக் திருடிச் சென்ற இளைஞர், ஆட்டோ பிடித்த இடத்திலிருந்த கண்காணிப்பு கேமராவை கவனிக்கத் தவறிவிட்டார். அதில் ஆட்டோ ஓட்டுநரிடம் பேசுவதும், அவரது செல்போனை வாங்கிப் பேசும் காட்சியும், அதற்கு முன்னர் அவர் தனது நண்பருடன் ஆக்டிவா வாகனத்தில் வந்து இறங்கும் காட்சியும் பதிவாகி இருந்தது.

அதைச் சேகரித்த போலீஸார் அந்த நபர் பற்றி விசாரணையில் ஈடுபட்டபோது அது இலங்கைத்தமிழரான நிரோஷன் என்பது தெரியவந்தது. நிரோஷன் மீது மதுரையில் பல்வேறு வழக்குகள் உள்ளதும், சிறையில் அடைக்கப்பட்டதும் பின்னர் விடுதலையான அவர் மாயமானதும் தெரியவந்தது.

தற்போது மோட்டார் சைக்கிளை நூதனமுறையில் திருடியதன்மூலம் மீண்டும் நிரோஷன் வெளிச்சத்திற்கு வந்தார். ஆனால் அவர் சென்னையில் எங்கே இருக்கிறார் என்கிற தகவல் தெரியாமல் போலீஸார் தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு ஈக்காட்டுத்தாங்கலிலிருந்து அண்ணாசாலைவரை பைக் ரேஸ் சென்றவர்களில் ஒருவர் ஓட்டிய மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியது.

விபத்தில் சிக்கியவர்கள் குறித்து போலீஸாரிடையே நடந்த வாக்கிடாக்கி சம்பாஷணையை கவனித்த ஏழுகிணறு ஆய்வாளர், நிரோஷன் என்பவர் விபத்தில் சிக்கியுள்ளார் என்கிற பெயரைக்கேட்டவுடன் ஒருவேளை பைக்கை திருடிய நிரோஷனாக இருக்கலாம் என அவர் அனுமதிக்கப்பட்டிருந்த அரசு பொதுமருத்துவமனைக்குச் சென்று பார்த்தபோது ஆச்சர்யம் அங்கு விபத்தில் சிக்கி காலுடைந்து சிகிச்சையில் இருந்தது மோட்டார் சைக்கிள் திருடன் நிரோஷன்தான்.

அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது அவர் முழு போதையில் இருந்ததும் தனக்கு விபத்து நடந்தது பற்றியோ கால் உடைந்தது பற்றியோ தெரியவில்லை. பின்னர் பல மணி நேரம் கழித்து போலீஸார் நடத்திய விசாரணையில் நிரோஷன் உண்மையை ஒப்புக்கொண்டார்.

அவருக்கு மூளையாக செயல்படும் நபர் பாண்டிச்செரியில் இருப்பதாகவும், அவர் ஆன்லைனில் வரும் விளம்பரங்களைப்பார்த்து நிரோஷனிடம் கூறுவார், அதையடுத்து நிரோஷன் அந்த நபரை தொடர்புக்கொண்டு நூதன முறையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிப்பார்ப்பதுபோல் திருடிச் செல்வார்.

விலை உயர்ந்த பைக்குளைத்தான் இவ்வாறு திருடுவார்கள். பின்னர் அந்த பைக்கை விற்றுவிட்டு மீண்டும் திருட்டில் ஈடுபடுவார்கள். நிரோஷன் அளித்த தகவலின் பேரில் பாண்டிச்சேரி சென்ற போலீஸார் அப்துல் பறிகொடுத்த ரூ.4.5 லட்சம் மதிப்புள்ள நிஞ்சா பைக்கை மீட்டு கொண்டுவந்தனர். பாண்டிச்சேரியிலிருந்த நிரோஷனின் கூட்டாளி தப்பிச் சென்றுவிட்டார். நிரோஷன் எம்.எஸ்சி பட்டதாரி. போதை பழக்கத்துக்கு அடிமையானவர். விபத்து நடந்த அன்றும் போதை மாத்திரைபோட்டு தான் ஏற்கெனவே தி.நகரில் திருடிய டியூக் பைக்கில் ரேஸ் சென்றுள்ளார்.

நிரோஷன் இதேபோன்று 4 மோட்டார் சைக்கிள்களை திருடியதாக கூறியுள்ளார். அவைகளை மீட்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். நிரோஷனுக்கு பின்னால் ஒரு பெரிய கூட்டம் இருக்கிறது என்று போலீஸார் கருதுகின்றனர். நிரோஷனை ஆக்டிவா வாகனத்தில் இறக்கிவிட்ட சென்னை கூட்டாளியையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

ஆன்லைனில் பொருட்களை விற்பவர்கள், கவனத்துடன் செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் அப்துலுக்கு நேர்ந்ததுபோல் நேரிடும் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x