Published : 23 Oct 2018 09:41 AM
Last Updated : 23 Oct 2018 09:41 AM

அறநிலையத் துறை பராமரிப்பில் உள்ள அனைத்து கோயிலிலும் 6 மாதத்தில் அடிப்படை வசதி - உயர் நீதிமன்றம் உத்தரவு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அங்கீகாரம் பெறாத அர்ச்சகர்கள் நடமாட்டத்துக்கு தடை விதித்திட ராஜ பாளையத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.கல்யாணசுந்தரம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, அறநிலையத் துறையின் பராமரிப்பில் உள்ள அனைத்து கோயில் களிலும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன் படி அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கோயில்களில் மாவட்ட நீதிபதிகள் குழு ஆய்வு செய்து உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.

இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.வி.முரளிதரனும், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி டி.கிருஷ்ணவள்ளியும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று விசாரித்தனர்.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் சொத்து விவரங்களின் பட்டியலை தயார் செய்ய வேண் டும். கோயில்களில் உரிம காலம் முடிந்தும் கடை நடத்துவோரை காலி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பாளர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். பிரசாத ஸ்டால்களில் விலை பட்டியல் வைக்க வேண்டும். அறநிலையத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட அர்ச்சகர்களால் மட்டுமே பூஜைகள் செய்யப்பட வேண்டும். இலவச தரிசன வரிசையை அதிகரிக்க வேண்டும். எதிர்காலத்தில் விஐபி தரிசன முறையை முற்றிலும் நிறுத்த வேண்டும்.

அனைத்து கோயில்களிலும் அர்ச்சகர்கள், பூசாரிகள், ஊழியர் களுக்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறையை அமல்படுத்த வேண்டும். சிறப்பு பூஜைகள் என்ற பெயரில் கூடுதல் பணம் வசூலிப்பதற்கு தடை விதிக்க வேண்டும். திருட்டுகளைத் தடுக்க அனைத்து கோயில்களிலும் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த வேண்டும். கோயில்களில் அடிப்படை வசதிகளை 6 மாதத்தில் ஏற்படுத்த வேண்டும். மாவட்ட நீதிபதிகள் மீண்டும் ஆய்வு நடத்தி, உயர் நீதிமன்ற உத்தரவு கோயில்களில் அமல்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டியின்போது பக்தர் களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்ய கோயில் செயல் அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பழநி முருகன் கோயில், குமரி பகவதி அம்மன் கோயில்களின் காணிக்கை வசூலில் குளறுபடிகள் இருப்பதாகப் புகார் வந்துள்ளது. இதனால் இரு கோயில்களின் செயல் அலுவலர்கள் கோயில் வருவாய் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர், பின்னர் விசாரணை 6 மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x