Published : 12 Oct 2018 05:48 PM
Last Updated : 12 Oct 2018 05:48 PM

நெடுஞ்சாலைத்துறை ஊழல்களுக்கு பொறுப்பேற்று முதல்வர் பழனிசாமி உடனடியாக பதவி விலக வேண்டும்: ராமதாஸ்

நெடுஞ்சாலைத்துறை ஊழல்களுக்கு பொறுப்பேற்று முதல்வர்  எடப்பாடி பழனிசாமி உடனடியாக பதவி விலக வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழக முதல்வரும், நெடுஞ்சாலைத்துறை அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. ஊழலுக்கு எதிரான இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது ஆகும்.

உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை தமது உறவினர்கள் மற்றும் பினாமிகளுக்கு வழங்கியது, நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கான மதிப்பீடுகளை ஒப்பந்ததாரர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் வகையில் உயர்த்தி நிர்ணயித்தது ஆகிய குற்றச்சாட்டுகள் குறித்து தமிழக காவல்துறையின் லஞ்சத் தடுப்புப் பிரிவு விசாரணைக்கு உயர் நீதிமன்றம் ஏற்கெனவே ஆணையிட்டிருந்தது. ஆனால், லஞ்சத் தடுப்புப் பிரிவு விசாரணை நம்பிக்கையளிக்கும் வகையில் இல்லை என்பதால் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் மாற்றியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி முதல்வராவதற்கு முன், 2011 ஆம் ஆண்டில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற நாளில் இருந்தே இத்தகைய ஊழல்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார். அவரது இந்த ஊழல்கள் குறித்து விசாரணைக்கு ஆணையிடக் கோரி தமிழக ஆளுநர்களிடம் 2015, 2017 ஆகிய ஆண்டுகளில் பாமக ஆதாரங்களுடன் புகார் மனு அளித்துள்ளது. அப்போதெல்லாம் ஆளுநர்களின் உதவியுடன் தப்பி வந்த எடப்பாடி பழனிசாமி இப்போது சிபிஐயிடம் சிக்கியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி மீதான ஊழல் புகார்களுக்கு முதற்கட்ட ஆதாரம் இருந்ததால் தான் சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. எனவே, நெடுஞ்சாலைத்துறை ஊழல்களுக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமி உடனடியாக விலக வேண்டும்” என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x