Published : 06 Oct 2018 08:45 PM
Last Updated : 06 Oct 2018 08:45 PM

அடுக்கடுக்கான ஊழல் புகார்கள்; நடவடிக்கை எடுக்கும் இடத்தில் உள்ளவர் ஊழல் பற்றி மேடையில் பேசலாமா?- ஆளுநருக்கு ஸ்டாலின் கேள்வி

ஊழல்மேல் ஊழல் புகார்கள் தொடர்ச்சியாக கொடுத்தும் நடவடிக்கை எடுக்கும் இடத்தில் இருக்கும் ஆளுநர், நடவடிக்கை எடுக்காமல், ஊழல் பற்றி பொதுமேடைகளில் பேசுவது ஏன் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

“தமிழ்நாட்டில் லஞ்சம் வாங்கிக் கொண்டு துணை வேந்தர்கள் நியமிக்கப்படுகிறார்கள்” என்று அதிமுக ஆட்சியில் துணை வேந்தர்கள் நியமனத்தில் நடைபெறும் ஊழலை தமிழக ஆளுநர் “உயர் கல்வி கருத்தரங்கம்” ஒன்றில் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருக்கிறார்.

அதிலும் குறிப்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்தித்து விட்டுத் திரும்பிய மறுதினமே இப்படியொரு ஊழல் புகாரை மாநிலத்தின் ஆளுநரே சுமத்தியிருக்கிறார் என்றால், முதல்வரிடமே இந்த ஊழல் பற்றி நேருக்கு நேர் சுட்டிக்காட்டினாரா? என்ற கேள்வியும் எழுகிறது.

அதேநேரத்தில் துணை வேந்தர் நியமனம், டெண்டர் ஊழல் உள்ளிட்ட அதிமுக அரசின் மீது திமுக சுமத்தி வரும் ஊழல்கள் அனைத்தும் உண்மை என்பது இப்போது அரசியல் சட்ட பதவி வகிக்கும் ஆளுநரின் குற்றச்சாட்டிலிருந்து நிரூபணமாகியிருக்கிறது.

ஆனால் ஊழல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய சகல அதிகாரங்களையும், அல்லது ஊழல்கள் குறித்து உரிய “மாதாந்திர அறிக்கை” அனுப்ப வேண்டிய அதிகாரத்தையும் பெற்றிருக்கும் ஆளுநர் இப்படி பொதுமேடைகளில் பேசுவதற்குப் பதில், கடந்த ஒரு வருட காலத்தில் ஊழல் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இந்நேரம் இந்த ஊழல் அதிமுக அரசு வீட்டுக்குப் போயிருக்கும்.

தமிழக மக்களுக்கும் நிம்மதி கிடைத்திருக்கும். அ.தி.மு.க அரசு ஊழலின் மொத்த உருவமாக இருக்கிறது. ஆட்சியில் நடைபெறும் அனைத்து அப்பாயிண்ட்மென்டுகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. துணை வேந்தர் நியமனத்தில் ஊழல் தொடர்பாகவும் கூட தி.மு.க.வே மனு அளித்திருக்கிறது.

இவை ஒருபுறமிருக்க, “குட்கா” ஊழல் தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர், தமிழக டி.ஜி.பி. உள்ளிட்டோரின் வீடுகளில் சி.பி.ஐ. ரெய்டே நடந்து விட்டது. அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி ஆகியோர் மீதும் லஞ்ச ஊழல் தடுப்புத் துறையில் திமுக சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

துணை முதலமைச்சராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் மீது சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி வருமானத்திற்கு மீறிய சொத்துக் குவிப்பு வழக்கை லஞ்ச ஊழல் தடுப்புத் துறை விசாரித்து வருகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி மீது 3,120 கோடி ரூபாய் நெடுஞ்சாலைத் துறை ஊழல் தொடர்பாக ஆளுநரிடம் நானே சென்று நேரடியாக அளித்துள்ளேன். ஆனால் அ.தி.மு.க அரசின் மீதான இந்த ஊழல் புகார்கள் மீது ஆளுநர் இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன?

ஊழலின் சாக்கடையில் இந்த அரசு நீந்தட்டும் என்று அனுமதித்து விட்டு அமைதி காப்பது ஏன்? அரசியல் சட்டத்திற்கு விரோதமாக அதிமுக ஆட்சி பதவியில் தொடருவதற்கும் அனுமதித்து, இப்போது பொதுமேடைகளில் ஊழல் பற்றி பேசுவது ஏன்?

சி.பி.ஐ ரெய்டுகளும், வருமான வரித்துறை ரெய்டுகளும் நடைபெற்றது அனைத்து பத்திரிக்கைகளிலும் தலைப்புச் செய்தியாக வந்தும், பிரதான எதிர்கட்சியின் சார்பில் ஆளுநர் அவர்களுக்கே புகார் அளித்தும் அதிமுக அரசின் ஊழலை தடுக்க ஆளுநரால் இதுவரை முடியாமல் போனது ஏன்?

அதிமுக என்ற ஊழல் அரசின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஆளுநர் அவர்களுக்கு தடை போடும் சக்தி எது? இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் அணி வகுத்து நிற்கின்றன.

அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் ஆளுநர் இப்படி ஊழல் பற்றி வெளிமேடைகளில் பேசுவது தமிழக மக்களுக்கு எவ்வித பலனையும் கொடுக்காது. அதற்கு பதிலாக, ஊழல் அ.தி.மு.க அரசின் மீதும், முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களின் ஊழல் மீதும் நடவடிக்கை எடுப்பது மட்டுமே இதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

ஆனால் தமிழக ஆளுநர் பதவியில் ஒரு வருடத்தை பூர்த்தி செய்துள்ள ஆளுநர், ஊழல் புகார்களின் மீது நடவடிக்கையும் எடுக்கத் தவறி அ.தி.மு.க அரசின் ஊழல்களை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் ஆளுநர் “துணை வேந்தர்கள் நியமன ஊழல்” பற்றி மட்டும் குறிப்பாக தேர்ந்தெடுத்து பேசுவது ஆச்சர்யமாக இருக்கிறது.

ஆகவே அ.தி.மு.க அரசின் ஊழல்களை தடுக்க வேண்டும் என்பது ஆளுநர் உண்மையான அக்கறையாக இருக்குமென்றால், துணை வேந்தர்கள் நியமனத்தில் ஊழல் நடக்கிறது என்ற ஆதாரபூர்வமாக பேசியிருக்கும் நிலையில், அதற்கு காரணமான உயர் கல்வித்துறை அமைச்சர், முதலமைச்சர் உள்ளிட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அது தவிர திமுக சார்பில் அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மீது கொடுக்கப்பட்டுள்ள ஊழல் புகார்கள் அனைத்தின் மீதும் கடும் நடவடிக்கை எடுத்து, அரசியல் சட்டத்திற்கு விரோதமாக ஆட்சி நடத்திக் கொண்டு ஊழலில் நீச்சல் அடித்துக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. ஆட்சியில் குறிப்பிட்ட ஊழல் புகார்களுக்கு உள்ளான அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் ஆளுநரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.”

இவ்வாறு மு.க.ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x