Published : 23 Aug 2014 11:13 AM
Last Updated : 23 Aug 2014 11:13 AM

வைக்கோல் தட்டுப்பாடு: பால் உற்பத்தி பாதிக்கும் அபாயம்

கால்நடைத் தீவன மானியம் 3 மாதங்களாக நிறுத்தப்பட்டது மற்றும் வைக்கோல் தட்டுப்பாடு ஆகிய காரணங்களால் தமிழகத்தில் பால் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வறட்சி காரண மாக பசுந்தீவன பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் கால்நடைகளின் நலன் மற்றும் கறவைத்திறன் கடுமையாக பாதிப்படைந்துள்ளன. பால் உற்பத்தியாளர்களின் இந்த நெருக்கடியைப் போக்கும் வகையில் சென்னை நீங்கலாக வறட்சியால் பாதிக்கப்பட்ட 31 மாவட்டங்களில் அரசால் மானிய விலையில் கால்நடைத் தீவனம் வழங்கப்பட்டது. இதன்படி கால் நடை தீவனம் கிலோ ஒன்றுக்கு ரூ.4 மானியமும், தாது உப்புக் கலவை கிலோ ஒன்றுக்கு ரூ.25 மானியமும், பசுந்தீவனம் 50 சதவீத மானியத்திலும் வழங்கப்பட்டது.

அதுபோல, கால்நடைகளுக்கு மலிவு விலையில் உலர் தீவனங் களை (வைக்கோல்) வழங்குவதற் காக உலர் தீவனக் கிடங்குகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டன. இந்நிலையில், கால்நடைத் தீவனத்துக்கான மானியம் கடந்த 3 மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், பல்வேறு கிடங்களில் வைக்கோல் விற்பனை நடைபெறவில்லை என்றும் பால் உற்பத்தியாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத் தலைவர் கே.ஏ.செங்கோட்டுவேல், செயலாளர் எம்.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் சுமார் 60 லட்சம் பசுக்கள், எருமைகள் உள்ளன.

வறட்சிக் காலங்களில் கால்நடை களுக்கு மலிவு விலையில் வைக்கோல் வழங்குவதற்காக மாவட்டத்துக்கு 5 வீதம் உலர் தீவன கிடங்குகள் தொடங்கப்பட்டன. இங்கு விற்கப்பட்ட வைக்கோல், கால்நடைகளுக்குத் தேவைப்படும் மொத்த வைக்கோல் தேவையில் ஒரு சதவீதத்தைக்கூட பூர்த்தி செய்யவில்லை. ரேஷன் கடை களைப் போன்று கிராமங்கள் தோறும் வைக்கோல் விற்பனை கிடங்கு அமைத்தால்தான் மொத்த தேவையைப் பூர்த்தி செய்ய முடியும்.

முன்பெல்லாம் நெல் வயலில் ஆட்கள் அறுவடை செய்யும்போது அதிகளவு வைக்கோல் கிடைத்தது. இப்போது மிஷின்கள் அறுவடை செய்வதால் வயலிலேயே பாதி வைக்கோல் பவுடராகிவிடுகிறது. நெல் சாகுபடிக்கு அதிகளவு தண்ணீர் தேவைப்படுவதால், குறைவான தண்ணீர் தேவைப்படும் மரவள்ளிக்கிழங்கு, கரும்பு, பருத்தி, துவரை, உளுந்து, பாசிப்பயிறு போன்றவற்றை விவசாயிகள் உற்பத்தி செய்யத் தொடங்கிவிட்டனர்.

வைக்கோல் தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணம். வைக்கோல் விற்பனை செய்யப்படும் உலர் தீவனக் கிடங்குகளுக்கு ஒதுக் கப்பட்ட நிதி முழுவதுமாக செலவிடப்பட்டுவிட்டதால், அங்கு தற்போது வைக்கோல் விற்பனை நடைபெறவில்லை. சேலம், நாமக் கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த நிலையைக் காணலாம்.

அதோடு கால்நடை தீவனத் துக்கு கிலோ ஒன்றுக்கு வழங் கப்பட்ட 4 ரூபாய் மானியம் நிறுத்தப் பட்டுள்ளது. 1-7-13 முதல் 10-5-14 வரை மட்டுமே இந்த மானியம் வழங்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் பால் உற்பத்தி படிப் படியாக குறையத் தொடங்கி யுள்ளது. உதாரணத் துக்கு சேலம் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்துக்கு கடந்த ஏப்ரல், மே மாதங்களில் தினசரி பால் வரத்து 4 லட்சத்து 90 ஆயிரம் லிட்டராக இருந்தது. இப்போது 4 லட்சம் லிட்டராக குறைந்துள்ளது. இதுபோல தமிழகம் முழுவதும் பால் உற்பத்தி படிப்படியாக குறைந்து வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து கால்நடைத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “தற்போது தமிழ்நாடு முழுவதும் வைக்கோல் விற்பனைக்காக 180 உலர் தீவனக் கிடங்குகள் உள்ளன. இத்திட்டத்துக்காக ரூ.18 கோடியை அரசு ஒதுக்கியது. இதில், இதுவரை ரூ.12 கோடி செலவிடப்பட்டுள்ளது. கால்நடை களுக்கு குறிப்பாக கறவைப் பசுக்களுக்கு தட்டுப்பாடில்லாமல் வைக்கோல் கிடைக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x