

சென்னையில் பல்வேறு இடங்களில் பெண்களிடம் 400 சவரனுக்கும் அதிகமாக நகைகளை பறித்து சென்ற மும்பை கொள்ளையர்கள் 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னையில் செயின் பறிப்பு சம்பவங்களைத் தடுக்கவும் கொள் ளையர்களை பிடிக்கவும் இணை ஆணையர் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டது. தனிப் படையினர் நடத்திய விசாரணையில் வெளிமாநில கொள்ளையர் பலர் சென்னைக்குள் ஊடுருவி செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுவது தெரிந்தது.
கொள்ளையர்களிடம் செயினை பறிகொடுத்த பல பெண்கள் கூறிய அடையாளம் சிவப்பு நிற மோட்டார் சைக்கிளில் கொள்ளையர்கள் வந்தனர் என்பதுதான். அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் சிவப்பு நிற பல்சர் மோட்டார் சைக்கிள் ஒன்று 3 நாட்களாக நிற்பதை கண்டுபிடித்தனர். அது குறித்து விசாரித்தபோது வடஇந்திய இளைஞர்கள் சிலர் அதை விட்டு சென்றிருப்பது தெரிந்தது. அதைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிளை எடுக்க வருபவர்களை பிடிக்க மாறுவேடத்தில் போலீஸார் கண்காணித்தனர். 3 நாட்களுக்கு முன்பு சிவப்பு நிற மோட்டார் சைக்கிளை எடுக்க வடஇந்திய இளைஞர்கள் 2 பேர் வந்தனர். இதற்காக காத்திருந்த போலீஸார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில் பல தகவல்கள் கிடைத்தன. அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பெரியமேட்டில் ஒரு லாட்ஜில் தங்கியிருந்த மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 4 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து போலீ ஸாரிடம் கேட்டபோது, "4 பேரும் மும்பையை சேர்ந்தவர்கள். இவர்கள் மொத்தம் 13 பேர். ஒருவன் தலைவனாக செயல் பட, பலர் அவனுக்கு கீழ் வேலை செய்துள்ளனர். பெரிய மேடு லாட்ஜில் பதுங்கி இருந்த 2 பேரிடம் இருந்து 50 சவரன் நகைகளை பறிமுதல் செய்துள் ளோம். இவை அனைத்தும் சென்னை பெண்களிடம் கொள் ளையடிக்கப்பட்டவை. சில நாட்கள் சென்னையில் தங்கி கொஞ்சம் நகைகள் சேர்ந்ததும் அவற்றை மும்பைக்கு கொண்டு சென்று விற்று விடுவார்கள்.
சென்னையில் கொள்ளை யடிக்கப்பட்ட 400 சவரன் நகைகளை மும்பையில் ஒரு இடத்தில் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதை கைப்பற்றுவதற்காக தனிப்படை மும்பை சென்றுள்ளது" என்றனர்.