Published : 27 Oct 2018 05:35 PM
Last Updated : 27 Oct 2018 05:35 PM

இலங்கை பிரதமராக ராஜபக்சே நியமனம்: சீனாவின் தூண்டுதலில் தான் நடைபெற்றிருக்கிறது; திருமாவளவன் யூகம்

இலங்கை பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட்டிருப்பது, சீனாவின் தூண்டுதலில் தான் நடைபெற்றிருப்பதாக யூகங்கள் எழுதிருப்பதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தொல்.திருமாவளவன் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “இனப்படுகொலை குற்றவாளியான ராஜபக்சே இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அது ஈழத்தமிழர்களுக்கு மட்டுமின்றி இந்தியாவின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. எனவே, இந்திய அரசு இதில் தலையிட்டு ராஜபக்சேவின் சட்டவிரோத நியமனத்தை ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

2015 ஆம் ஆண்டு இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட 19 ஆவது சட்டதிருத்தம் இலங்கை அதிபரின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தியுள்ளது. அதன்படி பிரதமரை நீக்குவதற்கு அதிபருக்கு அதிகாரம் கிடையாது. ஆனால், சட்டவிரோதமாக இலங்கை அதிபர் மைத்திரிபாலா பிரதமராக இருந்த ரணில் விக்கரமசிங்கேவை நீக்கிவிட்டு ராஜபக்சேவை பிரதமராக நியமித்திருக்கிறார். இலங்கையில் நடைபெற்ற ஈழத்தமிழருக்கு எதிரான இனப்படுகொலையில் முதன்மை குற்றவாளி ராஜபக்ச ஆவார். ஐநா மனித உரிமை அமைப்பு இதுதொடர்பாக முன்னெடுத்த விசாரணை இன்னும் நிறைவு பெறாத நிலையில் ராஜபக்சவை பிரதமராக நியமித்திருப்பது இலங்கை சட்டங்களுக்கு மட்டுமின்றி சர்வதேச நியதிகளுக்கும் எதிரானதாகும்.

இலங்கை அதிபர் செய்துள்ள இந்த அதிரடி மாற்றம் இந்துமாக்கடலில் மேலாதிக்கம் செய்ய முற்பட்டுள்ள சீனாவின் தூண்டுதலில் தான் நடந்திருக்கிறது என்ற யூகங்கள் எழுந்துள்ளன. இது இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது.

ஈழத்தமிழர்களுக்கு எதிரான, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள இலங்கை அதிபரின் நடவடிக்கையை இந்திய அரசு தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும்” என தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x