Published : 24 Oct 2018 07:09 PM
Last Updated : 24 Oct 2018 07:09 PM

‘சர்கார்’ படத்துக்கு புதிய சிக்கல்: தடை கோரும் வழக்கில் நாளை விசாரணை

தொடர் சிக்கல்கல்களை சந்தித்துவரும் ‘சர்க்கார்’ திரைப்படத்துக்கு மீண்டும் ஒரு சிக்கல் எழுந்துள்ளது. கதையை திருடியதாக தொடரப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது.

நடிகர் விஜய் நடிக்க முருகதாஸ் இயக்கத்தில் பெரும் எதிர்ப்பார்ப்புடன் ‘சர்க்கார்’ திரைப்படம் தீபாவளி அன்று திரைக்கு வர உள்ளது.

சர்க்கார் படம் குறித்த செய்திகளில் ஆரம்பம் முதலே எதிர்ப்பார்ப்பும் கூடவே பரபரப்பான தகவல்களும் சுற்றிவருகிறது. பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சிகரெட் குடிப்பது போன்ற போஸ்டரால் சர்ச்சையானது. இது குறித்து அன்புமணி, அமைச்சர் ஜெயக்குமார், ராமதாஸ் உள்ளிடோர் கண்டனம் தெரிவித்தனர்

சிகரெட் குடிக்கும் காட்சியை போஸ்டரில் வெளியிட்ட சர்க்கார் பட நிறுவனம், இயக்குனர், நடிகர் விஜய் மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சுகாதாரத்துறை மூலமாக விஜய், முருகதாஸ் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன் பேரில் அந்த சிகரெட் பிடிப்பது போன்ற போஸ்டர்கள் நடிகர் விஜய் மற்றும் தயாரிப்பாளர்களின் சமூக வலைதள பக்கங்களில் இருந்து நீக்கப்பட்டன.

அடுத்து பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய முதல்வர் குறித்த பேச்சு சர்ச்சையை கிளப்பியது. அதற்கு பல அமைச்சர்கள் பதிலளித்தனர். இந்நிலையில் வரும் நவ. 6 அன்று வெளியிடப்பட உள்ள நிலையில் மீண்டும் ஒரு புதிய சர்ச்சையில் சர்க்கார் சிக்கி உள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தனது கதையை திருடி சர்க்கார் படத்துக்கு பயன்படுத்தியதாக வருண் என்கிற ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவரது மனுவில், ‘செங்கோல்’ என்ற தலைப்பில் தான் தனது கதையை கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்து வைத்திருந்ததாகவும், அந்தக் கதையை திருடி, ‘சர்கார்’ என்ற தலைப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் படம் இயக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் கே.பாக்கியராஜிடம் இந்த பிரச்சினையை கொண்டுச் சென்றபோது அவர் இருதரப்பையும் அழைத்து விசாரித்தார். பின்னர், செங்கோல் மற்றும் சர்கார் இரண்டும் ஒரே கதை தான் என உத்தரவிட்டார் என தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

படத்தை வெளியிட கூடாது, படத்தின் டைட்டிலில் தன்னுடைய பெயரை சேர்க்க வேண்டும், அப்படி வெளியிட்டால் ரூ.30 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும், என்று மனு அளித்துள்ளார்.

தவறும்பட்சத்தில் படத்தை தடை செய்யவேண்டும் எனக்கோரி

அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென முறையிட்டதால் நாளை வழக்கை விசாரிப்பதாக நீதிபதி எம்.சுந்தர் ஒப்புதல் அளித்துள்ளார்.

படத்தின் கதை விவகாரம் உள்ளிட்ட வேறு ஏதாவது விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தில் படம் வெளியீட்டிற்கு எதிராக வழக்கு ஏதேனும் வரும் என்பதால் கேவியட் மனுவை சன்பிக்சர்ஸ் நிறுவனத்தார் தாக்கல் செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x