Published : 23 Oct 2018 05:02 PM
Last Updated : 23 Oct 2018 05:02 PM

யமஹா, என்பீல்டு நிறுவனங்களுக்கு எதிராக போராடியவர்கள் கைது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்

தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் யமஹா, என்பீல்டு நிறுவனங்களுக்கு எதிராக போராடியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது கண்டனத்திற்கு உரியது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பாலகிருஷ்ணன் இன்று (செவ்வாய்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் பன்னாட்டு நிறுவனங்கள் பல நூறு தொழிற்சாலைகளை துவக்கி செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளுக்கு ஏராளமான சலுகைகளை மத்திய, மாநில அரசுகள் வழங்குகின்றன. சலுகைகளை பெற்றுக்கொள்ளும் நிர்வாகங்கள் தொழிலாளர் உரிமைகளை பறிக்கிறது.

குறிப்பாக, தொழிற்சங்கம் வைத்த காரணத்திற்காக யமஹா, என்பீல்டு மற்றும் எம்எஸ்ஐ நிறுவனங்கள் தொழிலாளர்களைப் பழிவாங்கும் செயலில் சட்டவிரோதமாக ஈடுபடுகிறது. டிஸ்மிஸ், சஸ்பெண்ட் உள்ளிட்ட பழிவாங்கும் நடவடிக்கைகளை அதிகப்படுத்தியதால் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்கின்றனர்.

இதை சரியாக புரிந்துகொண்ட காரணத்தாலும், நிறுவனங்கள் சட்ட நடவடிக்கைகளை பின்பற்றவில்லை என்பதாலும், தொழிலாளர் துறை ஆணையம், நிர்வாகங்களுக்கு அறிவுரை வழங்கியது. கூடவே தொழிற்சங்கங்களுக்கும், வேலை நிறுத்தத்தை கைவிட அறிவுரை வழங்கியது. தொழிற்சங்கம் அறிவுரையை ஏற்றுக் கொண்டு தொழிலாளர்கள் வேலைக்கு சென்ற போதும் நிர்வாகங்கள் ஏற்க மறுத்து வருகின்றன. தொழிலாளர் ஆணையம் அறிவுரை வழங்கி 20 நாட்களுக்கும் மேலாகி உள்ளது. இதில் தமிழக அரசு பாராமுகமாக இருப்பது கண்டிக்கத்தக்கது.

அரசுத்துறையின் அறிவுரையை அமலாக்க ‘மாவட்ட நிர்வாகமே தலையிடு’ என வலியுறுத்தி, ஒரகடத்தில் இருந்து நடைபயணம் மேற்கொண்டதொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களை காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கைது செய்துள்ளது. சிஐடியு தலைவர்கள்அ.சவுந்தரராசன், ஜி. சுகுமாறன், எஸ்.கண்ணன், இ. முத்துக்குமார், உழைக்கும் மக்கள் மாமன்ற துணை தலைவர் சம்பத் உள்ளிட்டோர் தலைமையில் சுமார் 2 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோரிக்கையை வலியுறுத்தி அமைதியாக நடக்க முயன்றதை தடுப்பது ஜனநாயக விரோதமானது. தமிழக அரசு தொடர்ந்து ஜனநாயக உரிமைகளை பறிப்பதை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுவிக்கவும், தொழிலாளர் துறை ஆணையம் வழங்கிய அறிவுரையை அமல்படுத்தவும் தமிழக அரசுஉடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

தமிழகத்தில் செயல்படும் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்த மறுக்கிறது, தொழிலாளர்களின் உரிமைகளையும் பறிக்கிறது. இதற்கு எதிராக போராடும் தொழிலாளர்களுக்கு அனைத்துப் பகுதி மக்களும் ஆதரவளிப்பதோடு, பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் சட்ட விரோத நடவடிக்கைகளை கண்டித்து குரலெழுப்ப வேண்டும்” என பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x