

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவில் கலந்துகொள்ளச் சென்ற ஜெயலலிதா மீது கற்கள் வீசி தாக்கிய சம்பவத்தை கண்டித்து, அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற 34 அதிமுகவினர் மீது கோபி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் அதிமுக எம்.பி. சத்யபாமா உள்பட 32 பேரை நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டது.
கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவருக்கு அஞ்சலி செலுத்த சென்றிருந்த போது அவர் கார் மீது மர்ம கும்பல் கல்வீசி தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்து அதிமுகவினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஈரோடு மாவட்டம் கோபியில் பஸ் நிலையம் அருகே தற்போது திருப்பூர் எம்.பி.யாக உள்ள அ.தி.மு.க. மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் சத்யபாமா, பேரவைச் செயலாளர் (இப்போது கோபி நகர செயலாளர்) சையத் புடான்சா, ஒன்றியச் செயலாளர் மனோகரன், கவுன்சிலராக இருந்த சக்தி கணேசன் உள்பட 34 பேர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 34 பேரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீதான வழக்கு விசாரணை கோபி ஜுடீசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் எண்.1-ல் நடந்து வந்தது. விசாரணையின்போது இரண்டு பேர் இறந்துவிட்டனர்.
இதனால் சத்யபாமா உள்பட 32 பேர் மீது வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில் சத்யபாமா எம்.பி. உள்பட 32 அ.தி.மு.க.வினரும் கோபி நீதி மன்றத்தில் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி ராணி, குற்றம் நிரூபிக்கப்படாததால் சத்யபாமா எம்.பி. உட்பட 32 பேரையும் விடுவித்து உத்தரவிட்டார்.