Published : 21 Oct 2018 03:40 PM
Last Updated : 21 Oct 2018 03:40 PM

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை முதலமைச்சர் மறுப்பது மோசடி: அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வாய்ப்பில்லை என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. முதலமைச்சரின் இந்த அறிவிப்பு மிகப்பெரிய மோசடி ஆகும். இது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும், என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக அரசு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாகவும், அதனால் பழைய ஓய்வுதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர முடியாது என்றும் கூறியிருக்கிறார். இதன்மூலம் அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம் செய்திருக்கிறது. இது மன்னிக்க முடியாதது ஆகும்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப் படுத்தும் விஷயத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டிலிருந்தே அரசு ஊழியர்களை ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அரசுகள் ஏமாற்றி வருகின்றன. 2011-ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில், ‘‘அதிமுக ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும்’’ என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆட்சியில் இருந்த 5 ஆண்டுகளும் அந்த வாக்குறுதியை ஜெயலலிதா அரசு நடைமுறைப்படுத்தவில்லை. 2016-ஆம் ஆண்டு தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பாக 26.02.2016 அன்று பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப் படுத்துவதற்கான வாய்ப்புகள் பற்றி ஆராய ஓய்வு பெற்ற இ.ஆ.ப. அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஒரு வல்லுநர் குழுவை அமைத்தார்.

இந்தக் குழு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளைப் பல்வேறு கட்டங்களாக அழைத்து அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து வந்தது. அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு முடிவடைந்ததால் அதன் பதவிக்காலம் 3 தடவை நீட்டிக்கப்பட்டது. அக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து சாந்தா ஷீலா நாயர் விலகிய நிலையில் ஓய்வுபெற்ற இ.ஆ.ப. அதிகாரி டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3-ம் தேதி புதியக்குழு அமைக்கப்பட்டது. அதன் பதவிக்காலம் கடந்த நவம்பர் மாதத்துடன் முடிவடைந்த நிலையில் மேலும் ஒரு மாத நீட்டிப்பு வழங்கப்பட்டது. அதன் பிறகும் குழு அறிக்கை தாக்கல் செய்ததா? அக்குழு தொடர்கிறதா? என்பது குறித்த எந்த அறிவிப்பும் இல்லை. அதனால் தான் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பிப்ரவரி மாதம் போராட்டம் நடத்தினர். அதற்கு எந்த பயனும் கிடைக்காத நிலையில் அடுத்த மாதம் 27&ஆம் தேதி மீண்டும் போராட்டம் நடத்தவுள்ளனர்.

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து அவர்களுடன் முதலமைச்சரோ, மூத்த அமைச்சர்களோ பேச்சு நடத்தி, அரசின் நிலைமையை விளக்குவது தான் சரியானதாக இருக்கும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பரிந்துரைக்க ஓய்வு பெற்ற இ.ஆ.ப. அதிகாரி ஸ்ரீதர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் அறிக்கையைப் பெற்று அதனடிப்படையில் நடவடிக்கை எடுப்பது தான் சரியானதாக இருக்கும். ஆனால், ஸ்ரீதர் குழுவின் பதவிக்காலம் கடந்த ஆண்டு திசம்பர் மாதமே முடிவடைந்து விட்ட நிலையில், இன்று வரை அக்குழுவின் அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்படவில்லை; ஸ்ரீதர் குழு இன்னும் செயல்பாட்டில் உள்ளதா? என்பது கூட தெரியவில்லை. அவ்வாறு இருக்கும் போது பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வாய்ப்பே இல்லை என்ற முடிவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எந்த அடிப்படையில் வந்தார்? என்பது விளங்கவில்லை.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. ஆனால், இவற்றையெல்லாம் கணக்கில் கொள்ளாமல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த முடியாது என்று முதலமைச்சர் அறிவிப்பதைப் பார்க்கும் போது அவர் தம்மை தமிழகத்தின் சர்வாதிகாரியாக நினைத்து செயல்படுகிறாரோ? என்ற ஐயம் எழுகிறது.

தமிழகத்தில் புதிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேலாகி விட்ட நிலையில் அது எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது இதுவரை விளக்கப்படவில்லை. அது தொடர்பான கணக்கு வழக்குகளும் அரசு ஊழியர்களிடம் காட்டப்படவில்லை. இதற்கெல்லாம் மேலாக பல ஊழியர்கள் ஓய்வூதியம் பெறாமலேயே ஓய்வு பெற்றுவிட்டனர். இப்படிப்பட்ட ஒரு திட்டம் அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வு பெறுபவர்களுக்கு எந்த வகையிலும் சமூகப் பாதுகாப்பை வழங்காது.

எனவே, புதிய ஓய்வூதியத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தும் முடிவை கைவிட்டு, ஸ்ரீதர் குழு அறிக்கையைப் பெற்று அதனடிப்படையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளார் அன்புமணி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x