Published : 06 Oct 2018 01:02 PM
Last Updated : 06 Oct 2018 01:02 PM

வடகிழக்கு பருவமழை; சென்னை நிவாரண ஏற்பாடுகள்: அமைச்சர் வேலுமணி அறிவிப்பு

சென்னையில் ரெட் அலர்ட் மற்றும் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள மேற்கொண்டுள்ள நிவாரணப் பணிகள் குறித்து துறை அதிகாரிகளுடன் அமைச்சர் வேலுமணி ஆய்வு நடத்தினார்.

பின்னர் நிவாரண ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் வேலுமணி கூறியதாவது:

“நவீன இயந்திரங்களைக் கொண்டு நீர்நிலைகளில் உள்ள வண்டல்கள் மற்றும் ஆகாயத்தாமரைகள் தூர்வாரப்படும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இன்றுவரை இவ்வியந்திரங்களின் மூலம் 45,000 மெட்ரிக் டன் வண்டல்கள் மற்றும் ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட்டு அனைத்து கால்வாய்களும் ஆழம் மற்றும் அகலப்படுத்தப்பட்டு 100 சதவீதம் மழைநீர் வெளியேற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் 16 சுரங்கப்பாதைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. பருவமழைக் காலத்தில் சுரங்கப்பாதைகளில் தேங்கி நிற்கும் நீரை வெளியேற்ற உயர்திறன் கொண்ட 60 டீசல் பம்புகளும், தண்ணீர் உட்புகுவதை தடுக்க சாலையின் குறுக்கே சிறிய தடுப்புகளும் அமைக்கப்பட வேண்டும் எனவும், தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற 5 / 7.5 குதிரைத் திறன் கொண்ட 458 மோட்டார் பம்புகளும், 130 ஜெனரேட்டர்களும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மழைக்காலங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை மழை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றும் பொருட்டு 109 இடங்களில் படகுகளும், பொதுமக்களைத் தங்கவைக்க 176 நிவாரண மையங்களும், உணவு வழங்கிட 4 பொது சமையல் அறைகளில் 1500 பேருக்கு சமையல் செய்யத் தேவையான பொருட்களும் மற்றும் கூடுதலாக தேவைப்படின் அனைத்து அம்மா உணவகங்களிலும் உணவு தயாரிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மழைக்காலத்தில் ஏற்படும் தொற்றுகளில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்க 44 நிலையான மற்றும் நடமாடும் மருத்துவக் குழுக்களும், 52 இடங்களில் பேரிடர் மீட்புக் குழுக்களும் தயார்நிலையில் உள்ளனர். பருவமழையின்போது சாலைகளில் விழுந்த மரங்களை உடனடியாக அகற்ற மண்டலத்திற்கு ஒரு இரவு பணிக்குழுவும், 18 உயர் கோபுர விளக்குகளும், 373 மரம் அறுவை இயந்திரங்களும் தயார்நிலையில் உள்ளன.

சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் 115 ஜெட்ராடிங், 30 ஜெட்டிங், 43 சூப்பர் சக்கர், 242 தூர்வாரும் இயந்திரங்கள் என மொத்தம் 430 இயந்திரங்கள் மழைக்காலங்களில் ஏற்படும் கழிவுநீர் அடைப்புகளை அகற்றத் தயார்நிலையில் உள்ளன. மேலும், கூடுதல் தேவைக்கு கழிவுநீர் லாரிகள் வாடகைக்கு அமர்த்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பருவமழையின்போது, கழிவுநீர் இயந்திரங்களின் செயல்பாடுகள் இணையதள இயக்கி மூலம் கண்காணிக்கப்படும். அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரக வளர்ச்சி தலைமையிடங்களில் 24 / 7 மணிநேரமும் இயங்கும் தகவல் கட்டுப்பாட்டு அறைகள் செயல்படுத்தப்படவுள்ளன. இக்கட்டுப்பாட்டு அறைகளில் வருவாய்த் துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை, மின்சார வாரியம் மற்றும் தொடர்புடைய துறைகளின் அலுவலர்களுடன் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சிப் பணியாளர்கள் இணைந்து பணியாற்ற உள்ளார்கள்.

நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் அவசரக்காலங்களில் வெள்ளத்தடுப்புப் பணிக்கு தேவைப்படும் மணல் மூட்டைகள் தயார் நிலையில் இருக்கவும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவும், போதுமான அளவில் பிளீச்சிங் பவுடர்களை இருப்பில் வைத்திடவும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தற்காலிகமாக தங்குவதற்கு ஏதுவாக புயல் பாதுகாப்பு மையங்கள், சமுதாயக் கூடங்கள், பள்ளிக் கட்டடங்கள் மற்றும் பொதுக் கட்டடங்களை தயார்நிலையில் வைத்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பருவமழைக் காலங்களில் நிவாரண நடவடிக்கைகளுக்காக கூடுதலாக நிதி தேவைப்படின் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தங்கள் துறை தலைவர்களை அணுகி உடனடியாக தடையின்றி நிதி ஒப்பளிப்பு பெற்றுக்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது''.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x