

பாகிஸ்தானைச் சேர்ந்தவர் நதீம் மும்தாஜ் குரேஷி(58). இவர் அதிகமாக ஓடும் வழக்கம் கொண்டவர். தொடக்கத்தில் இவருக்கு ஓடி முடித்த பிறகு வலி எடுத்தது. நாளடைவில் நடந்தாலும் வலிக்கத் தொடங்கியது. இதற்கு 'பர்மிங்ஹாம் இடுப்பு அறுவை சிகிச்சை'தான் ஒரே தீர்வு என நீண்ட தேடலுக்குப் பிறகு தெரிந்துகொண்டார்.
பாகிஸ்தானில் இவ்வகை சிகிச்சை இல்லாததால், ஐரோப்பிய நாடுகள் அல்லது அமெரிக்காவில் சிகிச்சை பெற திட்டமிட்டார். இது தொடர்பான தகவல்களை இணையதளத்தில் தேடியபோது, சென்னை சிம்ஸ் மருத்துவமனை சிறந்த தேர்வாக தெரிந்தது. இதனையடுத்து நதீம் சிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.
நதீமுக்கு சிகிச்சை அளித்தது குறித்து சிம்ஸ் மூத்த மருத்துவ நிபுணர் டாக்டர் விஜய் சி.போஸ் கூறும்போது, ‘வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பது மட்டுமின்றி நோயாளி மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்பதே முக்கிய நோக்கமாகும். இந்த சிகிச்சையில் குழிவான காளான் வடிவ உலோக உறை தொடை எலும்புக்கு மேற்பகுதியிலும், இதற்கு இணையான மற்றொரு உலோக உறை கிண்ணக் குழியின் மேற்பகுதியிலும் பொருத்தப்படும். வழக்கமான டிஹெச்ஆர் சிகிச்சையில் அகற்றப்படும் எலும்பின் அளவைவிட சிறிய அளவிலான எலும்பே இச்சிகிச்சையில் அகற்றப்படும். நதீமுக்கு ஒன்றரை மணி நேர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இனி நதீம் முழுமையாக குணமடைந்து வலியில்லாமல் இயல்பு வாழ்க்கை வாழ்வதுடன் மீண்டும் ஓடவும் தொடங்கலாம்’ என்றார்.
சிம்ஸ் தலைமை மருத்துவ அதிகாரி எஸ்.பி.பத்மநாபன் கூறும்போது, “அதிநவீன முடநீக்கியல் மருத்துவ சிகிச்சையில் வடபழனி சிம்ஸ் முன்னிலை வகிக்கிறது. தலை சிறந்த, நீண்ட அனுபவம் மிக்க எங்கள் மருத்துவக் குழு சர்வதேச தரத்தில் பல அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்துள்ளது” என்றார்.
அறுவை சிகிச்சை குறித்து நதீம் மும்தாஜ் குரேஷி கூறும்போது, “நீண்ட தேடலுக்குப் பிறகு சர்வதேச தரத்துக்கு இணையான சிகிச்சை இந்தியாவிலேயே கிடைப்பதை அறிந்து ஆச்சரியப்பட்டேன். என்னை முழுமையாக குணமடையச் செய்த மருத்துவக் குழுவுக்கு ஆண்டவரின் பெயரால் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.