Published : 10 Oct 2018 12:38 PM
Last Updated : 10 Oct 2018 12:38 PM

அன்பாசிரியர் 38: ராஜ ராஜேஸ்வரி- ரூ.5 லட்சம் சொந்த செலவில் பள்ளியை நவீன வசதிகளுடன் மாற்றி அமைத்த ஆசிரியை!

|மாணவர்கள் மீதான அன்பாலும் அக்கறையாலும் அர்ப்பணிப்புடன் தனித்துவமாக கற்பிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் நல்லடையாள அணிவகுப்புத் தொடர் இது. |

நம்ம பள்ளிக்கு நாம செய்யாம வேற யார் செய்வா?- இந்த ஒற்றை வாக்கியம்தான் ஆசிரியை ராஜ ராஜேஸ்வரியின் செயல்களுக்கான ஆணிவேர். தான் பணியாற்றும் அரசுப் பள்ளிக்கு சொந்த செலவில் கழிப்பறை, கணினி அறை, நூலகம் அமைத்தது, மாதாமாதம் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் அளிப்பது, மாணவர்களுக்கு வண்ணச் சீருடைகள், ஷூ, டை வாங்கிக் கொடுப்பது, யோகா ஆசிரியருக்கு தானே சம்பளம் அளிப்பது என ஆசிரியை ராஜ ராஜேஸ்வரியின் கொடைப் பயணம் நீள்கிறது. 44 மாணவர்கள் இருந்த நடுநிலைப் பள்ளியில், இப்போது 254 பேர் படிப்பதில் அவரின் வெற்றி தனித்து மிளிர்கிறது.

இனிஆசிரியை ராஜ ராஜேஸ்வரியின் பயணம்,அவரின் வார்த்தைகளிலேயே...

முதுகலை இயற்பியல் படித்த நான் ஆசிரியர் பணிக்கு விரும்பி வந்தேன். முதலில் 2004-ல் விழுப்புரம் கிராமப்புற அரசுப் பள்ளியில் வேலை கிடைத்தது. அங்கிருந்த குழந்தைகள் என்னிடம் கற்பித்தலைவிட தாய்மையின் அரவணைப்பை எதிர்பார்த்தனர். வீட்டில் கேட்க முடியாத அத்தனை சந்தேகங்களையும் என்னிடம் கேட்டனர். அவர்களுக்குப் பதில் கூறிக்கொண்டே விளையாட்டு போல பாடங்களைக் கற்பித்துவிடுவேன். அறிவியல் ஆசிரியை என்பதால் தினசரி நிகழ்வுகள் அனைத்தையும் அறிவியலோடு தொடர்புபடுத்திப் பேசுவது குழந்தைகள் மத்தியில் ஆர்வத்தைத் தூண்டியது.

2009-ல் திருச்சி, பீமநகர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியையாகப் பதவி உயர்வு கிடைத்தது. அதனால் கற்பித்தலோடு, நிர்வகிக்கும் பணியும் சேர்ந்தது. அந்த ஆண்டில் 44 மாணவர்கள் மட்டுமே பள்ளியில் இருந்தனர். நகரின் மையப்பகுதியில் இருந்தும் பள்ளி, விரைவில் மூடப்படும் நிலை.

முதலில் பள்ளியில் இருக்கும் குழந்தைகளின் திறமைகளை வெளிக்கொண்டு வர முடிவு செய்தோம். செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுத்து 3 நாட்கள் அறிவியல் கண்காட்சி நடத்தினோம். 44 குழந்தைகளுக்கு 44 செய்முறைகளைச் செய்து காண்பித்தோம். பள்ளியின் பெயர் மெல்ல வெளியே தெரிய ஆரம்பித்தது. அடுத்தகட்டமாக பள்ளியின் கட்டமைப்பை மாற்ற நினைத்தோம்.

நமக்கு நாமே
  • ஏன் அடுத்தவர்களைக் கேட்கவேண்டும், நம் பள்ளிக்கு நாமே செய்யலாமே என்று எண்ணினேன்.

வெளியே சென்று நன்கொடை கேட்டபோது, குறைவான குழந்தைகள் இருப்பதைச் சுட்டிக்காட்டி உதவி செய்யத் தயங்கினர். ஏன் அடுத்தவர்களைக் கேட்கவேண்டும், நம் பள்ளிக்கு நாமே செய்யலாமே என்று எண்ணினேன்.

சொந்தசெலவில்...

மாணவர்களுக்கு மேசை, நாற்காலிகள் வாங்கப்பட்டன. தேசியத் தலைவர்களின் புகைப்படங்கள், ஓவியங்கள் பள்ளியின் சுவர்களில் தீட்டப்பட்டன. வகுப்பறைகள் வண்ணமயமாகின. கழிப்பறை, கணினி அறைகள் எழுப்பப்பட்டன. இவை அனைத்தையும் என் சொந்த செலவில் செய்தேன்.

ஆண்டுதோறும் ஆண்டுவிழாக்கள் நடத்தினோம். செயல்பாடுகளை (Activities) அடிப்படையாகக் கொண்டு சிடிக்கள் மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டன. ஒவ்வொரு குழந்தையின் தனித்திறனை வளர்க்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. மாணவர்களின் வருகை மெல்ல உயர்ந்தது. 2016-ல் 109 ஆக உயர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 2017-ல் 156 ஆனது. தற்போது 2018-ல் 254 மாணவர்கள் படிக்கின்றனர்.

இணைய வழிக் கற்றல்

குழந்தைகளுக்கு காட்சி வழியாகக் கற்பித்தால் எளிதில் கிரகித்துக் கொள்வர் என்று தோன்றியது. அதனால் புரொஜெக்டர், ஸ்மார்ட் போர்டு, கணினி ஆகியவற்றை வாங்கினேன். தொடுதிரை வகுப்பறையை உருவாக்கினோம். ‘இந்த பாக்டீரியா மூலம் இந்த நோய் வரும்’ என்று ஆசிரியர் சொல்லிக் கொடுப்பதை விட, மருத்துவர் கூறினால் தாக்கம் அதிகமாக இருக்கும். அதனால் ஸ்பீக்கர், மைக், கேமரா வாங்கி, அவற்றின் உதவியுடன் இணையம் மூலம் மருத்துவர்களைப் பேச வைத்தோம். இதற்கு மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அத்துடன் மாணவர்களுக்கு சிலம்பம், அபாகஸ் ஆகியவை கற்றுக் கொடுக்கப்படுகின்றன. சிலம்பத்தை சம்பந்தப்பட்ட ஆசிரியரே இலவசமாகச் சொல்லித் தருகிறார். இத்தனை நாட்களாக அபாகஸ் ஆசிரியருக்கான மாத சம்பளம் 2,000 ரூபாயை நானே கொடுத்து வந்தேன். தற்போது பெற்றோர்களே ஒரு மாணவருக்கு மாதம் ரூ.30 வீதம் செலுத்துவதாக முடிவெடுத்திருக்கின்றனர்.

மனம்இருந்தால் போதும்

மாணவர்களுக்கு ஆசிரியராக இருப்பதைவிட அன்னையாக இருப்பதையே விரும்புகிறேன். அவர்களும் என்ன தேவை இருந்தாலும் என்னைத் தேடி வருவார்கள். ‘இது வேணும் மிஸ், அது தேவை மிஸ்’ என்று உரிமையாகக் கேட்பார்கள். உடை, கட்டணம், படிப்பு உபகரணங்கள் என அவர்கள் என்ன கேட்கிறார்களோ அதை வாங்கிக் கொடுக்கிறேன். ஒருமுறை தீபாவளிக்கு புதுத்துணி எடுக்க முடியவில்லை என்று எட்டாம் வகுப்பு மாணவி ஒருவர் வருத்தப்பட்டார். அதனால் அந்த தீபாவளிக்கு 8-ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் புத்தாடை எடுத்துக் கொடுத்தேன்.

இரண்டு பிள்ளைகளை வைத்துக்கொண்டு, மற்றவர்களுக்குச் செலவு செய்ய பணம் இருக்கிறதா என்று ஏராளமானோர் கேட்டிருக்கின்றனர். அவர்களுக்கு நான் தரும் பதில், ''மனசு இருக்கிறது!'' என்பதுதான்.

ரூ.70 லட்சம்
  • எங்களின் செயல்பாடுகளைப் பார்த்த மாநகராட்சி, கூடுதல் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ரூ.70 லட்சம் ஒதுக்கியிருக்கிறது. பள்ளியை விரிவுபடுத்த இடமும் தந்திருக்கிறது.

வலைப்பூவில் பதிவு

பள்ளிக்கென http://mmsbeemanagar.blogspot.com என்ற வலைப்பூ ஒன்றை ஆரம்பித்தோம். அதில் பள்ளியின் அனைத்து செயல்பாடுகளையும் பதிவு செய்கிறோம்.

எங்களின் செயல்பாடுகளையும் மாணவர் எண்ணிக்கை கூடியதையும் பார்த்த மாநகராட்சி, கூடுதல் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ரூ.70 லட்சம் ஒதுக்கியிருக்கிறது. அத்துடன் பள்ளியை விரிவுபடுத்த இடமும் தந்திருக்கிறது. 2019-ல் கட்டிட வேலைகள் முடிந்து, மாணவர் சேர்க்கை இன்னும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கிறோம்.

எதிர்காலத் திட்டங்கள்

எங்கள் பள்ளி விரைவிலேயே உயர் நிலைப்பள்ளி ஆகிவிடும் என நம்புகிறோம். நல்ல நிலையில் இருக்கும் பள்ளியை மேன்மேலும் முன்னேற்ற ஆசை. அதனாலேயே 2016-ல் ஏஇஓ பதவி உயர்வு கிடைத்தது, வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.

இப்போது பள்ளியில் 5 கணினிகள் இருக்கின்றன. இன்னும் 20 கணினிகள் கிடைத்தால் அவற்றைக் கொண்டு கணினி வகுப்பறையை மேம்படுத்த வேண்டும். அதேபோல அனைத்து வகுப்புகளையும் ஸ்மார்ட் வகுப்பறைகளாக்க ஆசை.

மறக்கமுடியாத நிகழ்வு

கனவு ஆசிரியர் விருது, நல்லாசிரியர் விருது, ரோட்டரி மற்றும் பல அமைப்புகளின் விருதுகளைப் பெற்றிருந்தாலும், மாணவர் செல்லதுரையின் வார்த்தைகளைத்தான் ஆகச் சிறந்த விருதாக நினைக்கிறேன்.

சற்றே மன நலம் குன்றிய பள்ளி மாணவன் செல்லதுரை ஒருமுறை, ''டீச்சர், இன்னும் எத்தனை வருஷம் ஸ்கூல்ல இருப்பீங்க?'' என்று கேட்டான். ''2034-ல் ரிடையர்ட்மெண்ட்'' என்று சொன்னேன். ''அப்படின்னா சரி… அதுக்குள்ள நான் கலெக்டர் ஆகிடுவேன். ஐஏஎஸ் ஆகி கார்ல இருந்து இறங்கி வந்து என் கையால உங்களுக்கு அவார்ட் கொடுக்கணும்'' என்றான். அப்படியே நெகிழ்ந்துட்டேன்'' என்பவரின் வார்த்தைகளில் வழிந்தோடுகிறது கனிவும் அன்பும்.

க.சே.ரமணி பிரபா தேவி - தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in

ஆசிரியர் ராஜ ராஜேஸ்வரியின் தொடர்பு எண்: 9791040692

முந்தைய அத்தியாயம்: அன்பாசிரியர் 37: லோகநாதன் - ஆதரவற்ற மாணவர்களுக்கு வழிகாட்டும் மாற்றுத்திறனாளி ஆசிரியர்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x