Published : 06 Oct 2018 02:20 PM
Last Updated : 06 Oct 2018 02:20 PM

பெட்ரோல் - டீசல் விலை குறைப்பு: மத்திய அரசின் நயவஞ்சக நாடகத்தை ஏற்க மக்கள் ஒட்டகம் அல்ல: இரா.முத்தரசன் விமர்சனம்

மத்திய அரசின் பெட்ரோல் - டீசல் விலை குறைப்பு நடவடிக்கை ஒரு நாடகம் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக இரா.முத்தரசன் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “பெட்ரோல் -டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும். விலைவாசி உயர்வுக்கு பெரும் காரணமாக உள்ள பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. விலை உயர்வுக்கு மிக முக்கிய காரணம் மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரிகள் தான் காரணம் என்பதனை அனைவரும் அறிந்துள்ளனர்.

 எண்ணெய் விலை உயர்வுக்கும் தாங்களுக்கும் சம்மந்தமே இல்லை என்பதனை போன்ற ஒரு பொய்யான தோற்றத்தை இரு அரசுகளுமே தொடர்ந்து மேற்கொண்டு மக்களை ஏமாற்ற முயலுகின்றனர். எண்ணெய் விலை நிர்ணயத்தை நிறுவனங்களுக்கு வழங்கிவிட்டு, அந்நிறுவனங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத, தன்னிச்சையாக முடிவு எடுக்கும் அதிகாரம் பெற்றவை போன்ற தோற்றத்தையும் மத்திய அரசு மக்களை நம்பவைத்துள்ளது.

பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு எதிரான கண்டனக் குரல் உயர்ந்த நிலையில், மத்திய அரசு மிக நிதானமாக விழித்து எழுந்து விலை குறைப்பு நாடகத்தை அரங்கேற்றியுள்ளது. லிட்டருக்கு தான் விதிக்கும் வரியில் இருந்து ரூ 1.50 குறைப்பதாகவும், எண்ணெய் நிறுவனங்கள் தங்களது விலையில் இருந்து ரூ 1 குறைத்துக் கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளுடன் ரூ 2.50 குறைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு வெளிப்படையான அரசு என பிரதமர் மோடி அவர்கள் திரும்ப, திரும்ப பேசி வருகின்றார். வெளிப்படையான அரசு என்பது உண்மையானால் பெட்ரோல், டீசல் ஒரு லிட்டர் அடக்க விலை என்ன என்பதனையும், மத்திய அரசு விதிக்கின்ற வரி எவ்வளவு, மாநில அரசுகள் விதிக்கும் வரிகள் எவ்வளவு என்பதனை பகிரங்கமாக பொது மக்களுக்கு தெரியப்படுத்திட முன் வரவேண்டும்.

மத்திய அரசு பெட்ரோல் லிட்டருக்கு ரூ 19.48-ம் டீசலுக்கு ரூ 15.33-ம் வரி விதிக்கின்றது. ஆனால் குறைத்திருப்பது ரூ 1.50 மட்டுமே. ஒட்டகத்தின் மீது அளவுக்கு அதிகமான சுமையை ஏற்றி வைத்து, சுமை தாங்க இயலாத நிலையில் தள்ளாடும் ஒட்டகத்தை ஏமாற்ற, அதன் கண்களுக்கு தெரியும்படி ஒரு குண்டு ஊசியை எடுத்தானாம். அக்கதை போல் உள்ளது மத்திய அரசின் விலை குறைப்பு நாடகம்.

மத்திய அரசின் நயவஞ்சக நாடகத்தை ஏற்க மக்கள் ஒன்றும் ஒட்டகம் அல்ல என்பதனை மத்திய அரசு உணர்ந்து, தான் விதிக்கும் வரியை பெருமளவு குறைக்க வேண்டும். தமிழ்நாடு அரசு தனது மவுனத்தை கலைத்து, மாநில அரசு பெட்ரோல் -டீசல் மீதான வரிகளை குறைக்க முன்வர வேண்டும்” என இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x