

தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை மத்திய மீனவ சங்க பிரதிநிதிகள் சென்னை யில் சனிக்கிழமை சந்தித்து ஆலோ சனை நடத்தினர். தமிழக பாஜக அலுவலகமான கமலாலயத்தில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தஞ்சை, புதுக் கோட்டை, காரைக்கால், ராமநாத புரம், காரைக்கால் உள்ளிட்ட 6 மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர் சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். அப்போது தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படும் பிரச் சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்த சந்திப்புக்கு பிறகு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:
இதற்கு முன்பு மத்தியில் ஆட்சியிலிருந்த அரசு இலங்கை தமிழர் பிரச்சினை பற்றியும் மீனவர் பிரச்சினை பற்றியும் கவலைப் படாத அரசாக இருந்தது. ஆனால் தற்போது மீனவர்களின் உரிமைகளை காக்கும்படியான அரசு அமைந்துள்ளது. இலங்கை தமிழர் பிரச்சினை மற்றும் தமிழக மீனவர் பிரச்சினை குறித்து பிரதமர் நரேந்திர மோடியை 3 முறை சந்தித்து பேசியுள்ளேன். மக்களில் ஒருவனாக இருந்து மீனவர் பிரச்சினையை தீர்க்க முயற்சி செய்து வருகிறேன். இந்த கூட்டத்தில் மீனவர்களின் கருத்துக்கள் பெறப்பட்டன. இவற்றை வெளியுறத்துறை அமைச்சரிடம் எடுத்து சொல்ல வுள்ளேன். மத்திய அரசு இப்பிரச் சினைக்கு விரைவில் நிரந்தர தீர்வு காணும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், மாநில பொது செயலாளர்கள், வானதி ஸ்ரீனிவாசன், கருப்பு முருகானந்தம், சரவணபெருமாள், மீனவ பிரதிநிதி கள் ஆரோக்யராஜ், யேசுராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.