Published : 02 Aug 2014 11:12 AM
Last Updated : 02 Aug 2014 11:12 AM

தொழிலாளர் நலச் சட்டங்களில் திருத்தம் கூடாது: மத்திய அரசுக்கு வைகோ கோரிக்கை

பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாகத் தொழிலாளர் சட்டங்களிலும் மற்றும் தொழிற்சாலைச் சட்டங்களிலும் திருத்தம் கொண்டுவரும் முயற்சியை பா.ஜ.க. அரசு உடனே கைவிட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "பொருளாதாரம் மற்றும் வணிகத் துறைகளில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் பாதையிலேயே நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசும் பயணிக்கத் தொடங்கி இருப்பதைக் காண முடிகிறது. தற்போது அந்தப் பட்டியலில், தொழிலாளர் நலச் சட்டத் திருத்தங்களும் இடம் பெற்றுள்ளன.

பிரதமர் தலைமையில் ஜூலை 30 ஆம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், முக்கியமான மூன்று தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் கொண்டுவர ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் சார்பில், தொழிற் பழகுநர் சட்டம், 1961 (Apprenticeship Act of 1961) தொழிற்சாலைச் சட்டம் 1948 (Factories Act of 1948) மற்றும் தொழிலாளர் சட்டம் 1988 (Labour laws Act of 1988) ஆகியவற்றில் திருத்தங்கள் கொண்டுவர மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டு இருக்கிறது.

இந்தச் சட்டத் திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.

இந்தியாவில் இந்தச் சட்டங்கள் அனைத்தும் தொழிலாளர் நலன் காக்கும் சட்டங்களாக நடைமுறையில் இருக்கின்றன.

பன்னாட்டு நிறுவனங்களும், உள்நாட்டு பெருமுதலாளிகளும் தங்கள் விருப்பப்படி தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டுவதற்கு, நடைமுறையில் உள்ள 44 தொழிலாளர் நலச் சட்டங்களில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும், சில சட்டங்களை இரத்து செய்ய வேண்டும் என்றும் இந்திய அரசுக்கு நிபந்தனை விதித்துள்ளன.

காங்கிரஸ் ஆட்சியில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (SEZ) கொண்டுவரப்பட்டு, அதற்காகவே சிறப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. விவசாயிகளிடம் இருந்து நிலங்களைப் பறித்து உருவாக்கப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் தொழிற்சாலைகளை நிறுவிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு தொழிலாளர் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

தொழிலாளர்களின் அடிப்படை உரிமையான சங்கம் வைக்கும் உரிமையைக்கூட சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் அனுமதிக்கவில்லை.

பாரதிய ஜனதா அரசு நாடாளுமன்றத்தில் பெற்று இருக்கின்ற அறுதிப் பெரும்பான்மையை வைத்துக்கொண்டு, பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுக்காக இந்தியத் தொழிலாளர்களின் நலன்களைக் காவு கொடுக்கும் முயற்சியில் இறங்கி இருப்பதை ஏற்க முடியாது. 8 மணி நேரம் பணி என்பது, உலகத் தொழிலாளர்கள் உயிர்த் தியாகம் செய்து, இரத்தம் சிந்தி போராடிப் பெற்ற உரிமை ஆகும்.

அந்த உரிமையைப் பறிக்கும் விதத்தில், கூடுதல் பணி நேரம் வாரத்தில் 50 மணி நேரத்தில் இருந்து 100 மணி நேரமாக உயர்த்துவதற்கு தொழிற்சாலை சட்டத் திருத்தம் வகை செய்கிறது. தொழிலாளர்கள் 90 நாட்கள் வேலை செய்தாலே சட்டப்படிப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று இருப்பதை, 240 நாட்களாக உயர்த்துவதற்கும், 19 தொழிலாளர்கள் வேலை செய்தாலே தொழிற்சாலைச் சட்டமும், தொழிலாளர் சட்டமும் செல்லுபடி ஆகும் என்பதை, 40 தொழிலாளர்கள் இருந்தால் மட்டுமே நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் தொழிலாளர் சட்டம் 1988 திருத்தம் செய்யப்படுகிறது.

அதைப்போன்று தொழிற்சாலைகள், தொழிற் பழகுநர்களுக்குத் தொழிற்பயிற்சி அளிப்பது சட்டப்படிக் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதை இரத்து செய்திடவும் முயற்சி நடக்கிறது.

நாட்டின் தொழிற்துறை வளர்ச்சியும், பொருளாதார வளர்ச்சியும் மக்கள் நலன் சார்ந்துதான் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். தொழிலாளர்கள் போராடிப் பெற்ற சட்டப்படியான உரிமைகளைப் பலிகொடுத்து, பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாகத் தொழிலாளர் சட்டங்களிலும் மற்றும் தொழிற்சாலைச் சட்டங்களிலும் திருத்தம் கொண்டுவரும் முயற்சியை பா.ஜ.க. அரசு உடனே கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x