Published : 01 Oct 2018 12:55 PM
Last Updated : 01 Oct 2018 12:55 PM

ராமாபுரத்தில் தனியார் வங்கியில் கொள்ளை முயற்சி: கேஸ் கட்டிங் உபகரணங்களை விட்டுவிட்டு கொள்ளையர்கள் ஓட்டம்

ராமாபுரத்தில் தனியார் வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையர்கள் தலைமை அலுவலகத்தில் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு புகார் சென்று, போலீஸார் வருவதை அறிந்து ஓட்டம் பிடித்தனர்.

சென்னை ராமாபுரம் மவுண்ட் பூந்தமல்லி சாலையில் ‘ஆக்ஸிஸ் பேங்க’ எனும் தனியார் வங்கி உள்ளது. ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வங்கியில் வெளிச்சம் வருவதாகவும், சில மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளதாகவும், சந்தேகமாக உள்ளது என்றும் மும்பை ஆக்சிஸ் வங்கியின் தலைமையகத்திலிருந்து சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது.

வங்கியில் கொள்ளை முயற்சி நடந்தால் அலாரம் அடிக்கும், ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லையே என கட்டுப்பாட்டு அறை போலீஸார் உடனடியாக ராயலா நகர் போலீஸுக்குத் தகவல் அளித்தனர்.

ராயலா நகர் போலீஸார் உடனடியாக வங்கிக்கு விரைந்து வந்து பார்த்துள்ளனர்.அப்போது வங்கியில் யாருமில்லை, ஆனால் கேஸ் சிலிண்டர் ஒன்றும், கட்டிங் செய்யும் கருவியும், சிலிண்டரும் இருந்தது. வங்கியில் கொள்ளை முயற்சி நடந்துள்ளதைப் புரிந்துகொண்ட போலீஸார் அலாரம் ஏன் அடிக்கவில்லை என்று சோதித்த போது கொள்ளையர்கள் முதலில் கேஸ் கட்டிங் மூலம் அலாரத்தைத் துண்டித்தது தெரியவந்தது.

ஆனால், வங்கியிலும் அதற்கு அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை அவர்கள் கவனிக்கவில்லை. அவை மும்பையில் உள்ள வங்கியின் கட்டுப்பாட்டறையுடன் நேரடியாக இணைக்கப்பட்டிருந்தது. இதைக் கவனிக்காத அவர்கள் கேஸ் கட்டிங் மெஷின் மூலம் ஜன்னல் கிரில்லைத் துண்டிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

போலீஸ் வருவது தெரிந்தவுடன் கருவிகளை அங்கேயே விட்டுவிட்டு ஓடிவிட்டதாகத் தெரிகிறது. வங்கியின் கண்காணிப்புக் கேமரா பதிவுகளை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அதன்மூலம் வங்கிக் கொள்ளையர்கள் குறித்த தகவல் கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

இதேபோன்று சிலிண்டர் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டரை அவர்கள் அருகில் உள்ள கடைகளில்தான் வாங்கியிருக்க முடியும். இதை இயக்கத் தெரிந்த மேற்கண்ட சிலிண்டர்களை விநியோகம் செய்யும் கடையில் உள்ளவர்களுக்குத் தெரிந்தவர்கள்தான் அதை வாங்க முடியும் என்பதால் அந்தக்கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.

வங்கியை முன்னரே நோட்டமிட்டு பின்னர் அவர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம், கேஸ் கட்டிங் மெஷின் சிலிண்டர்களைக் கட்டாயம் ஏதாவது வாகனத்தில் வைத்துக் கொண்டு வந்திருக்க வேண்டும் என்பதால் அருகில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் போலீஸார் சேகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் வளசரவாக்கத்தில் உள்ள வங்கி ஒன்றில் இதேபோன்று கேஸ் கட்டிங் மெஷின் மூலம் 600 சவரன்களுக்கு மேல் கொள்ளையடித்த வடமாநில காவலாளிகள் சிலர் சிக்கினர்.

மற்றொரு வங்கியிலும் கொள்ளை முயற்சி நடந்தது. மூன்றாவதாக அதே பகுதியில் சில கிலோ மீட்டர் தள்ளி கொள்ளை முயற்சி நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x