Published : 15 Oct 2018 11:56 AM
Last Updated : 15 Oct 2018 11:56 AM

சென்னை எழும்பூரில் பயங்கரம்: வடமாநில இளைஞரிடம் வழிப்பறி; தாக்குதலுக்கு பயந்து ஓடியவர் பேருந்தில் அடிபட்டு பலி

வழிப்பறி செய்தவர்களிடம் தப்பித்து ஓடிய வடமாநில இளைஞர் பேருந்தில் அடிபட்டு முகம் சிதைந்து பலியானார். தாக்கிய இரண்டுபேரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை எழும்பூர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தாசப்பிரகாஷ் ஓட்டல் அருகே நேற்று மதியம் 2 மணி அளவில் இரண்டு பேர் எதிர்திசையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்துள்ளனர். பின்னர் நடு சாலையில் மோட்டார் சைக்கிளை நிறுத்திய அவர்கள் சாலையில் நடந்து சென்ற வடமாநில இளைஞர் ஒருவரை மடக்கித் தாக்கியுள்ளனர்.

வட மாநில இளைஞரிடமிருந்து பணத்தை வழிப்பறி செய்த பிறகு, அவரை அடித்துத் துரத்தியுள்ளனர். பணத்தைப் பறித்ததால் அதைக் கேட்டு அந்த இளைஞர் நின்றுள்ளார். இதனால் மோட்டார் சைக்களில் வந்த இருவரும் ஆத்திரமடைந்த நடு சாலையில் அவரைத் தாக்கியுள்ளனர். இதனால் அடிதாளாமல் பயந்து போன அவர் ஓடும் போது அவ்வழியே வந்த 15 பி பேருந்தில் சிக்கினார்.

திடீரென சாலையில் இருவர் ஒரு இளைஞரைத் துரத்தி வருவதைப் பார்த்து பேருந்து ஓட்டுநர் சுதாரிப்பதற்குள் அவர் பேருந்தில் அடிபட்டு முன் சக்கரத்தில் சிக்கினார். இதில் முன் சக்கரம் இளைஞர் மீது ஏறியது. ஓட்டுநர் பிரேக் போட்டும் பேருந்து சறுக்கியபடி பத்தடி தூரம் சென்று நின்றது.

இதில் முகம் சிதைந்து சம்பவ இடத்திலேயே அந்த இளைஞர் பலியானார். இதைப் பார்த்து பேருந்தில் வந்தவர்களும், அக்கம் பக்கமிருந்த பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர். தப்பி ஓட முயன்ற மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்களும் போலீஸில் ஒப்படைக்கப்பட்டனர். பட்டப்பகலில் அப்பாவி இளைஞர் தாக்கப்படுவதும் அதைத் தடுக்காமல் பொதுமக்கள் வேடிக்கை பார்த்ததுமே இளைஞர் உயிரிழப்புக்கு முக்கியக் காரணமாக அமைந்தது என போலீஸ் தரப்பில் கூறுகின்றனர்.

தாக்கப்பட்டு விபத்தில் சிக்கிய இளைஞர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்போல் உள்ளார். அவரது முகம் முழுதும் சிதைந்ததால் அவர் யார் என்கிற விபரம் தெரியவில்லை. இளைஞரைத் தாக்கியவர்களை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தியபோது அவர்கள் பெயர் முத்து (எ) மதுரை முத்து (28) பொன்னியம்மன் நகர், டாக்டர் சந்தோஷ் நகர், எழும்பூரைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவர் அப்பகுதியில் ஆட்டோ மெக்கானிகாக உள்ளார்.

அவருடன் வந்தவர் தேவன் (30) என்பதும் அவரும் அதே பகுதியில் வசிப்பதும் தெரியவந்தது. இவர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். விபத்து குறித்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்து ஏற்படுத்திய மாநகரப் பேருந்து ஓட்டுநர் மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் (38) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x