Published : 18 Oct 2018 09:58 AM
Last Updated : 18 Oct 2018 09:58 AM

திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூடியது; மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து 3 மணி நேரம் முக்கிய ஆலோசனை: பணிகளை இப்போதே தொடங்க மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

மக்களவைத் தேர்தலில் திமுக எத்தனை தொகுதிகளில் போட்டி யிடுவது, கூட்டணி வியூகம் குறித்து அக்கட்சியின் உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் 3 மணி நேரம் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நேற்று காலை நடந்தது. காலை 10.30 மணிக்கு தொடங்கிய கூட்டம் பகல் 1.30 வரை 3 மணி நேரம் நடந்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை யில் நடந்த இந்தக் கூட்டத் தில் பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, மாவட்டச் செயலாளர்கள் க.பொன் முடி, எ.வ.வேலு, கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 23 பேர் பங்கேற்றனர். உடல்நலக் குறைவால் பொதுச்செயலாளர் க.அன்பழகனும், அமெரிக்க பயணத்தில் இருப்பதால் மாநிலங் களவை திமுக குழுத் தலைவர் கனிமொழியும் கூட்டத்தில் பங்கேற்க வில்லை.

அனைத்தையும் ஆலோசித்தோம்

ஆலோசனை கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ‘‘2019 மக்களவைத் தேர்தல் குறித்தும், ஒருவேளை சட்டப்பேரவைத் தேர்தலும் சேர்ந்து வந்தால் அதை எப்படி எதிர்கொள் வது, எப்படிப்பட்ட அணுகு முறையை கையாள்வது என்ப தைப் பற்றியெல்லாம் கூட்டத்தில் விவாதித்தோம். ஏற்கெனவே திமுக வுடன் தோழமை கொண்டுள்ள கட்சிகளின் நிலை உட்பட எல்லா விஷயங்களையும் பரவலாக பேசி முடித்திருக்கிறோம். இதுகுறித்து விரைவில் திமுக தலைமை நிர்வாகி களுடன் கலந்துபேசி, அதன்பிறகு திமுகவின் இதயமான பொதுக்குழு வில் முடிவெடுத்து தேர்தல் வரும் நேரத்தில் அறிவிப்போம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், அப்போது இருக்கும் சூழ்நிலையின் அடிப்படையில் குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என அனைத்து விஷயங்கள் குறித்தும் பேசினோம். அதை இப்போது வெளிப்படையாக சொல்ல முடி யாது. கருணாநிதி சிலை திறப்பு குறித்து தேதி முடிவு செய்யப்பட்ட தும் முறையாக அறிவிக்கப்படும்'' என்றார்.

முன்னதாக கூட்டத்தை தொடங்கி வைத்துப் பேசிய ஸ்டாலின், ‘‘அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதத் தில் மக்களவைத் தேர்தல் மட்டு மல்ல சட்டப்பேரவைக்கும் தேர்தல் வரலாம். 2011, 2016 சட்டப்பேரவைத் தேர்தல், 2014 மக்களவைத் தேர்தல் என வரிசையாக 3 பொதுத்தேர்தல் களில் திமுக தோல்வி அடைந் துள்ளது. எனவே, வரப்போகிற பொதுத்தேர்தல் என்பது கட்சி மற்றும் நமது எதிர்காலம் தொடர்புடையது. இதில் வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இதை உணர்ந்து என்னென்ன வியூகம் வகுக்கலாம் என்பது குறித்து கருத்து தெரிவிக்க வேண்டும்’’ என கேட்டுக் கொண்டதாக கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் 'இந்து தமிழ்' நாளிதழிடம் தெரிவித்தார்.

கூட்டத்தில் பேசிய மூத்த தலைவர் ஒருவர், ‘‘அதிமுக இரு அணிகளாக பிரிந்திருந்தாலும் மக்களவைத் தேர்தலில் ஓரணியாக இணைய வாய்ப்புள்ளது. திமுகவை தோற்கடிப்பதற்காக அதிமுக இணைப்பு முயற்சியில் பாஜக தீவிரம் காட்டுவதாக வரும் செய்திகளை நாம் மறந்துவிடக் கூடாது. அதிமுக இணைந்தால் அதை எதிர்கொள்ளும் வகையில் நமது வியூகம் இருக்க வேண்டும். 2004 தேர்தலைப் போல 40 தொகுதிகளிலும் வெல்லும் வகை யில் பலமான வெற்றிக் கூட் டணியை அமைக்க வேண்டும்'' என கூறியுள்ளார்.

‘‘கூட்டணி பேச்சின் தொடக்கத் திலேயே தொகுதிகளையும் பேசிவிட வேண்டும். திமுக குறைந் தது 25 தொகுதிகளில் போட்டியிட வேண்டும். இதனை மனதில் கொண்டே காங்கிரஸ், இடதுசாரி கள், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்க வேண்டும். கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடங்களை ஒதுக்கினால் அது அதிமுகவுக்கு சாதகமாகி விடும்'' என சிலர் கருத்து தெரிவித் துள்ளனர்.

தேர்தல் அறிக்கை தயாரிப்பு, கூட் டணி வியூகம், தொகுதிப் பங்கீடு, பிரச்சார வியூகம், வாக்குச் சாவடி குழுக்களை பலப்படுத்துவது என பல்வேறு விஷயங்கள் குறித்து கூட் டத்தில் விரிவாக பேசப்பட்டுள்ளது.

இறுதியாகப் பேசிய ஸ்டாலின், ‘‘கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து இப்போதே முடிவுக்கு வந்துவிட முடியாது. 2004 தேர்தலைப் போல 40 தொகுதிகளிலும் வெல்லும் வகையில் நமது வியூகம் இருக் கும். திமுக நிர்வாகிகளும், தொண் டர்களும் இப்போதே தேர்தல் பணிகளை தொடங்க வேண்டும். ஒவ் வொரு தொகுதியிலும் திமுகவை பலப்படுத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதச் செயல்களை மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும்'' என அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.

அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை திறப்பு, அதிமுக அரசு மீதான ஊழல் வழக்குகளை கையாள்வது உள்ளிட்ட மற்ற விஷயங்கள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x