Published : 20 Oct 2018 11:11 AM
Last Updated : 20 Oct 2018 11:11 AM

காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோயிலில் வேதாந்த தேசிகரின் பிரபந்தத்தை தமிழில் பாட தடை : வடகலை, தென்கலை பிரிவினருக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை 

காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோயிலில் ஆச்சார்யர் வேதாந்த தேசிகரின் பிரபந்தத்தை தமிழில் பாடுவதற்கு தடை விதித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக வடகலை, தென் கலை பிரிவினருக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோயிலில் தமிழில் பிரபந்தம் பாடுவது தொடர்பாக வடகலை மற்றும் தென்கலை ஐயங்கார் பிரி வினருக்கிடையே பிரச்சினை இருந்து வருகிறது. தென்கலை பிரிவினர் வேதங்களை சமஸ் கிருதத்தில் மட்டுமே பாராயணம் செய்ய கோயில் மரபுகள் அனுமதிப்பதாகவும், வடகலை பிரிவினர் தமிழில் பாடுவதற்கு எந்த உரிமையும் இல்லை எனவும் கூறி வந்தனர்.

இந்நிலையில் கடந்த செப். 21-ம் தேதி இந்த கோயிலில் ஆச்சார்யர் வேதாந்த தேசிகரின் பிரபந்தத்தை தமிழில் பாடுவதற்கு அனுமதிக்கக் கோரி சுரேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன் செப். 21-ம் தேதியன்று தமிழில் பிரபந்தம் பாட அனுமதியளித்து வாய்மொழி உத்தரவு பிறப்பித்தார். மேலும், இதுதொடர்பாக இறுதி முடிவு எடுப்பதற்காக விசாரணையை 22-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

அவசர மனு தாக்கல்

இந்நிலையில் இந்த கோயி லில் தமிழில் பிரபந்தம் பாடு வதற்கு தடை விதிக்கக்கோரி நிவாஸன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று விடுமுறைக் கால சிறப்பு நீதிபதியான எஸ்.வைத்தியநாதன் முன்பு நடந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, ‘‘இந்த வழக்கு ஏற்கெனவே நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பாக நிலுவையில் இருந்து வருகிறது. எனவே அந்த வழக்கில் மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை தமிழில் பிரபந்தம் பாடக்கூடாது’’ என தடை விதித்தார்.

மேலும், கோயில் என்பது அனைவருக்கும் பொதுவான வழி பாட்டுத் தலம். இதில் வடகலை - தென்கலை பிரிவினருக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது, வேதனைக் குரியது. இந்த விஷயத்தில் இதுவரை எந்த ஒரு முடிவும் ஏற்படவில்லை. இவர்கள் மனித குலம் எப்படி இருக்க வேண்டும் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்’’ என்று அறிவுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x