Published : 14 Oct 2018 12:26 AM
Last Updated : 14 Oct 2018 12:26 AM

சமூக திட்ட நிதி வசூல் விவகாரம்: புதுச்சேரி ஆளுநர் மாளிகை மீது முதல்வர் ஊழல் புகார்; துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மறுப்பு

பெரு நிறுவனங்களுக்கான சமூகபொறுப்புணர்வு திட்டமான ‘சிஎஸ்ஆர்' திட்டத்தின் (corporate social responsibility) நிதியை புதுச்சேரி ஆளுநர் மாளிகை நேரடியாகவசூல் செய்ததில் ஊழல் நடைபெற்றுள்ளதாக முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கும் இடையில் மோதல் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது:

புதுச்சேரி வளர்ச்சிக்காக பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து நிதி பெறுவதற்கு,  ‘பெரு நிறுவனங்களுக்கான சமூக பொறுப்புணர்வுத் திட்டம்' (சிஎஸ்ஆர்) செயல்படுத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் தலைவராக நான் இருக்கிறேன். புதுச்சேரி மாநிலத்தில் அரசு நிறுவனங்களுக்கு இயந்திரங்கள் வாங்குவதற்கும், பள்ளிகளில் ‘ஸ்மார்ட் கிளாஸ்' வகுப்பறை, கழிப்பறைகள் கட்டுவதற்கும் பல தொண்டு நிறுவனங்களும், வங்கிகளும் முன்வந்து நிதி வழங்கி உள்ளனர்.

சிஎஸ்ஆர் கமிட்டி மூலமாக அந்த நிதியை பெற்று, அந்தந்த துறைகளின் திட்டங்களுக்காக நிதிகளை வழங்கி வருகிறோம்.

2 நாட்களுக்கு முன்பு டெங்குகாய்ச்சல் சம்மந்தமாக மருத்துவத்துறையில் இயந்திரம் வாங்குவதற்கு இந்தியன் வங்கி ரூ.13.50 லட்சம் காசோலை அளித்தது.

இப்படி பல நிறுவனங்களிடமிருந்து நிதி பெறப்பட்டு முறையாக, வெளிப்படையாக செலவு செய்யப்படுகிறது. சிஎஸ்ஆர் நிதி சம்மந்தமாக தலைவர், அதற்கான விதிமுறைகள் இருக்கும்போது ஆளுநர்அலுவலகத்திலிருந்து பல நிறுவனங்கள், ரோட்டரி கிளப் உள்ளிட்ட பெரு நிறுவனங்களை நேரடியாக தொடர்பு கொண்டு சிஎஸ்ஆர் நிதிகேட்டு பணம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக புகார்கள் வந்துள்ளன.

இதுவரை ரூ.85 லட்சம் வசூல் செய்திருக்கிறார்கள். அந்த நிதி யார், யாரிடமிருந்து வசூல் செய்யப்

பட்டது என்ற விவரம் இதுவரை  கொடுக்கப்படவில்லை. ஆளுநர்எதற்கெடுத்தாலும், ‘வெளிப்படையான நிர்வாகம்', ‘ஊழலில்லாத நிர்வாகம்' என்று கூறுகிறவர், அந்த நிதியை, அவர் சிஎஸ்ஆர் கமிட்டிக்கு அனுப்ப வேண்டுமே தவிர, அந்தப் பணத்தை ஆளுநர் மாளிகை அலுவலகம் செலவு செய்ய அதிகாரம் கிடையாது.

ஊழலுக்கு உடந்தை

ஆளுநர் அலுவலகத்தின் பெயரை பயன்படுத்தி  சிஎஸ்ஆர் நிதியை வசூல் செய்திருக்கிறார்கள். இது அதிகார துஷ்பிரயோகம்.

ஆளுநர் அலுவலகமே ஊழலுக்கு உடந்தையாக இருக்கிறது. ஒருவரோ அல்லது ஒரு நிறுவனமே நிதி கொடுப்பதற்கு ஆளுநர் மாளிகையை அணுகினால், அவர்களை சிஎஸ்ஆர் கமிட்டிக்கு அனுப்ப வேண்டும்.

தன்னிச்சையாக அந்த நிதியை செலவு செய்தவற்கு ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது. குறிப்பாக, ஆளுநர் அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் தங்களுடைய சொந்த நலனுக்காக சிஎஸ்ஆர் என்ற பெயரில் பணத்தை வசூல்செய்து பயன்படுத்தி கொள்கிறார்கள். இதற்கு ஆளுநர் பொறுப்பு ஏற்க வேண்டும்.

பலர் என்னிடம் நேரடியாக வந்து ஆளுநர் மாளிகை மூலம் தொலைபேசியில் சிஎஸ்ஆர் நிதி கேட்டு தொந்தரவு கொடுப்பதாக புகார் அளிக்கின்றனர். இவ்வாறு பணம் வசூலிக்க ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் அலுவலர்

களுக்கு  ஏதாவது உத்தரவிட்டாரா என்பது தெரிய வேண்டும். இதற்கு ஆளுநர் பதில் அளிப்பார் என்று எதிர்பார்க்கிறேன். ஆளுநரின் ஆலோசகர் தேவநீதிதாஸ் அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார். இதற்கு கிரண்பேடியும் உடந்தையாக இருப்பதால்  மத்திய உள்துறை அமைச்சரிடம் நேரடியாக இவ்விஷயத்தை எடுத்து செல்ல உள்ளேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கிரண்பேடி கருத்து

இதற்கு பதில் அளிக்கும் வகையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் பொதுப்பணித்துறையானது கடந்த 20 ஆண்டுகளாக வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை செய்யவில்லை. தற்போது பருவமழை வரும் சூழலை எதிர்கொள்ள, தொண்டு நிறுவனங்கள் மூலமும் தொழில் நிறுவனங்கள் மூலமும் தூர்வாரப்பட்டுள்ளது.

தொண்டு செய்ய விருப்பப்படுவோர் இப்பணியை மேற்கொண்டனர். இதற்காக ஆளுநர் மாளிகை இதுவரை ஒரு காசோலைகூட பெறவில்லை. எனது வேண்டுகோளின்படியே பலரும் நேரடியாக தூர்வாருவோரிடம் பணம் தந்தனர். நாங்கள் நேரடியாக பணம் பெறவில்லை என்றார்.

'இவ்விவகாரத்தில்ஆளுநர் மாளிகை ரூ.85 லட்சம் வரை ஊழலில் ஈடுபட்டுள்ளதாக முதல்வரே குற்றம் சாட்டியுள்ளாரே' என்று கேட்டதற்கு, “குற்றச்சாட்டு குற்றச்சாட்டாகவே இருக்கும்” என்றும் அவர் பதிலளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x